கார்ல் மார்க்ஸ் பிறந்தநாள்: சமத்துவக் கொள்கையின் பிதாமகன்
கார்ல் மார்க்ஸ் பிறந்தநாள்: சமத்துவக் கொள்கையின் பிதாமகன்
கம்யூனிச தத்துவத்தை உலகுக்கு அறிமுகப்படுத்திய கார்ல் மார்க்ஸின் 204ஆவது பிறந்தநாள் இன்று (மே 5). அவரைப் பற்றி அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய தகவல்களின் தொகுப்பு:-
- சமூகத்தில் தொழிலாளர்களுக்குத் தனி மதிப்பு உண்டு. அவர்கள் விடுதலை பெறுவதற்கு, தங்களுடைய தற்போதைய நிலையை முதலில் அவர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும் என்பதைத் தர்க்கப்பூர்வமாக எடுத்துக் கூறியவர் காரல் மார்க்ஸ். அவர் அன்றைய ஜெர்மனியில் 1818இல் பிறந்தார்.
- பொது வாழ்க்கையில் உலகத் தொழிலாளர்களுக்காகவும் தனிப்பட்ட வாழ்க்கையில் அன்றாடத் தேவைகளைப் பெறுவதற்கும் அவர் போராடிக்கொண்டிருந்தார். அவருடைய போராட்டத்தில், எழுத்தில், வாழ்க்கையில் அவருடைய் மனைவி ஜென்னியும் நண்பர் பிரெட்ரிக் எங்கெல்ஸும் எப்போதும் உடன் இருந்தார்கள்.
- ‘பொதுவுடைமைக் கழக’த்தின் சிறு கிளையாக ‘கம்யூனிஸ்ட் சங்க’த்தை முதன்முதலில் அமைத்தவர் மார்க்ஸ். அந்தச் சங்கத்துக்கான செயல்திட்டத்தைப் போல ‘கம்யூனிஸ்ட் அறிக்கை’யை எங்கெல்ஸுடன் இணைந்து 1848இல் அவர் தயாரித்து அளித்தார்.
- பல்வேறு நாடுகளில் இருந்த தொழிலாளர் அமைப்புகளை ஒருங்கிணைத்து அவர்களுடைய உரிமைகளுக்காகப் போராடினார். ‘முதலாம் அகிலம்’ எனப்படும் சர்வதேசத் தொழிலாளர் கூட்டமைப்பை 1864இல் அவரே தோற்றுவித்தார்.
- தன் சிந்தனையை அடிப்படையாகக்கொண்டு மார்க்ஸியக் கொள்கையையும் ‘மூலதனம்’ என்ற பெருநூலையும் படைத்தளித்தார். மூலதனம் முதல் தொகுதி 1867இல் வெளியானது.
- உலகம் முன்பைவிட மேம்பட்டதாக இருப்பதற்கு மார்க்ஸ் முன்வைத்த கொள்கைகள் காரணமாக இருந்திருக்கின்றன. பொருளாதாரம், வரலாறு, கலை - இலக்கியம், கல்வி, மருத்துவம், அரசு, சமூக மாற்றங்கள், மக்கள் புரட்சிகள், மக்களுக்கான இதழியல், கூட்டாகப் போராடும் உரிமை எனப் பல்வேறு துறைகளில் மார்க்ஸ் தாக்கம் செலுத்தியிருக்கிறார். சமூகப் பாதுகாப்பு, ஓய்வூதியம், சம்பளத்துடன் கூடிய விடுமுறை, தொழிற்சங்கம் அமைத்துத் தொழிலாளர் உரிமைகளை பெறக்கூடிய வாய்ப்பு போன்றவை உலகத் தொழிலாளர்களுக்கு இன்றைக்குப் பரவலாகி இருப்பதற்கு மார்க்ஸும் காரணமாக இருந்திருக்கிறார்.
- உலகில் நடைபெற்ற பல மக்கள் புரட்சிகளுக்கும், லெனின், மாவோ, பிடல் காஸ்ட்ரோ, சே குவேரா, ஹோசிமின் போன்ற மக்கள் தலைவர்கள் தோன்றுவதற்கும் மார்க்ஸே காரணமாக இருந்திருக்கிறார். உலக மனிதர்கள் அனைவரும் சமமாக வாழ வேண்டிய அவசியத்தை தர்க்கப்பூர்மாக உணர்த்திவிட்டுச் சென்றவர் அவர்.
இதுபோன்ற பயனுள்ள கட்டுரைகளை தவறவிடாமல் படிக்க': https://www.hindutamil.in/web-subscription