சத்யஜித்ராய் 101: இந்தியத் திரைப்படங்களின் உலக முகம்
சத்யஜித்ராய் 101:இந்தியத் திரைப்படங்களின் உலக முகம்
- திரைத்துறை சாதனைக்காக ஆஸ்கர் விருது பெற்ற இந்தியர், உலகப் புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் சத்யஜித் ராய் .
- அவருடைய 101ஆம் பிறந்தநாளான இன்று அவரைப் பற்றி அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்களின் தொகுப்பு:-
- கொல்கத்தாவில் 1921 மே 2இல் பிறந்தார். கொல்கத்தா பல்கலைக்கழக மாநிலக் கல்லூரியில் பொருளாதாரப் பட்டப் படிப்பை முடித்தார். சாந்தி நிகேதன் பல்கலைக்கழகத்தில் ஓவியக்கலை பயின்றார்.
- விளம்பர நிறுவனங்களில் வேலை செய்தார். புத்தகங்களுக்கு அட்டைப் படம் வரையும் வாய்ப்புகளும் தேடிவந்தன. ஜவாஹர்லால் நேருவின் ‘டிஸ்கவரி ஆஃப் இந்தியா’, விபூதி பூஷணின் ‘பதேர் பாஞ்சாலி’ நாவல் ஆகிய புத்தகங்களுக்கு அட்டைப் படம் வரைந்து புகழ்பெற்றார்.
- இயக்குநர் சித்தானந்த தாஸ் குப்தாவுடன் இணைந்து கொல்கத்தாவில் திரைப்பட சங்கத்தைத் தொடங்கினார். 1950இல் லண்டன் சென்ற ராய், 3 மாதங்களுக்கு ஏராளமான திரைப்படங்களைப் பார்த்தார். நாடு திரும்பியதும், தனக்குள் காவியமாக சுழன்றுகொண்டிருந்த பதேர் பாஞ்சாலியை திரைப்படமாக இயக்க முடிவுசெய்தார்.
- மனைவியின் நகைகளை விற்றுப் படப்பிடிப்பைத் தொடங்கினார். நிதிப் பற்றாக்குறைப் பிரச்சினைகளைத் தாண்டி 1955இல் ‘பதேர் பாஞ்சாலி’ வெளியானது. உலக அளவில் சிறந்த இயக்குநராக இத்திரைப்படம் அவரை அடையாளம் காட்டியது. ‘அபராஜிதோ’, ‘அபுர் சன்சார்’, ‘தேவி’, ‘மஹாநகர்’, ‘சாருலதா’, ‘தீன் கன்யா’ உள்ளிட்ட அவரது பெரும்பாலான திரைப்படங்கள் உலக அளவில் புகழ்பெற்றன.
- இசையில், குறிப்பாக மேற்கத்திய செவ்வியல் இசையில் அதிக ஆர்வம் கொண்டவர். சிறந்த பியானோ கலைஞரும்கூட. ‘சந்தேஷ்’ என்கிற சிறார் இதழை ராய் நடத்திவந்தார். அதில் சிறுகதைகள், ஓவியங்கள், தேவதைக் கதைகள், மாயாஜாலக் கதைகள், அறிவியல் கதைகள் உள்ளிட்டவற்றை எழுதிவந்தார்.
- கான் திரைப்பட விழா விருது (1956), வெனிஸ் திரைப்பட விழாவில் தங்கச் சிங்க விருது, பத்மஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண், தாதாசாகிப் பால்கே விருது, பாரத ரத்னா ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார்.வாழ்நாள் சாதனைக்கான கௌரவ ஆஸ்கர் விருது 1992இல் இவருக்கு வழங்கப்பட்டது.
- சத்யஜித் ராய் 1992 ஏப்ரல் 23 அன்று மறைந்தார்.
இதுபோன்ற பயனுள்ள கட்டுரைகளை தவறவிடாமல் படிக்க': https://www.hindutamil.in/web-subscription