உ.வே.சா நினைவு 80: பழந்தமிழ் இலக்கியங்களைப் பதிப்பித்த தமிழ்த் தாத்தா
உ.வே.சா நினைவு 80: பழந்தமிழ் இலக்கியங்களைப் பதிப்பித்த தமிழ்த் தாத்தா
தமிழ்த் தாத்தா என்று அனைவராலும் அழைக்கப்படும் உ.வே.சாமிநாதரின் 80ஆம் நினைவுநாள் இன்று (ஏப்ரல் 28). அவரைப் பற்றி அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான தகவல்களின் தொகுப்பு இது:
- இன்றைய தஞ்சை மாவட்டத்தில் உள்ள சூரியமூலை என்னும் சிற்றூரில் 1855 பிப்ரவரி 19 அன்று பிறந்தார்.
- சாமிநாதரின் தந்தை வேங்கடசுப்பு ஒரு இசைக் கலைஞர். உத்தமனாதபுரம் வேங்கடசுப்புவின் மகன் சாமிநாதர் என்பதன் சுருக்கமே உ.வே.சா.
- சாமிநாதரின் ஆரம்பக் கல்வி திண்ணைப் பள்ளியில் அமைந்தது. அரியலூர் சடகோபர், செங்கணம் விருத்தாசலம் ஆகியோரிடம் தமிழ் இலக்கியங்களைப் பயின்றார். திருவாவடுதுறை ஆதீனத்தில் தமிழ்ப் புலவராயிருந்த மகாவித்வான் மீனாட்சிசுந்தரத்திடம் 1870 - 1876 காலகட்டத்தில் உடன் தங்கியிருந்து தமிழ் இலக்கிய, இலக்கணங்களைக் கற்றுத் தேர்ந்தார்.
- கும்பகோணம் அரசுக் கல்லூரியில் தியாகராசர் என்ற பெரும் புலவர் பணியில் இருந்தார். அவர் பணி ஒய்வுபெற்றபோது, அவருடைய இடத்தில் உ.வே.சா.வை நியமிக்கும்படி செய்தார். ஆங்கில மோகம் அன்று உச்சத்தில் இருந்தது. ஆயினும் நிறைந்த தமிழ்ப் புலமை, இசைப்பயிற்சி ஆகியவற்றால் மாணவர்களிடமும் பேராசிரியர்களிடமும் நல்ல மதிப்புடன் இலக்கிய இலக்கணங்களைக் கற்பித்து வந்தார் சாமிநாதர்.
- பழந்தமிழ் இலக்கியங்கள் யாரும் அறியாமல் ஏட்டுச்சுவடிகளில் முடங்கிக் கிடந்தன. புறநானூறு, சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற இலக்கியங்களின் பெயர்கள் தெரியுமே தவிர, அவற்றைப் படித்தவர்கள் அப்போது யாருமில்லை. ஏனெனில் அவை சுவடிகளில் இருந்தன. இந்த நிலையில் உ.வே.சா.வின் கவனம் இந்தத் துறையில் திரும்பியது. சீவக சிந்தாமணியை பல்வேறு ஏட்டுச்சுவடிகளில் இருந்து ஒப்புநோக்கி, திருத்தமாக 1887இல் பதிப்பித்தார். தொடர்ந்து பத்துப்பாட்டு, சிலப்பதிகாரம், புறநானூறு, மணிமேகலை என ஒவ்வொரு நூலாகப் பதிப்பித்தார் உ.வே.சா.
- எங்கெல்லாம் ஏட்டுச்சுவடிகள் கிடைக்கக்கூடும் என்று தகவல் தெரிகிறதோ அங்கெல்லாம் நேரில் சென்று அவற்றை வைத்திருப்போரிடம் கெஞ்சிக் கேட்டு உ.வே.சா. வாங்கி வருவார். அவற்றை பிழைகளை நீக்கித் திருத்தி நூல்களாக அச்சிட்டு வெளியிடத் தொடங்கினார்.
- கும்பகோணம் கல்லூரியிலிருந்து 1903இல் சென்னை கல்லூரித் தமிழாசிரியராக மாற்றலாகி சென்றார்.
- 1919இல் பணி ஓய்வு பெற்ற பிறகு, பழந்தமிழ் இலக்கியங்களைத் தேடித் பதிப்பிக்கும் பணியை முழுநேரப் பணியாக மேற்கொண்டார்.
- ராஜா அண்ணாமலை நிறுவிய மீனாட்சி தமிழ்க் கல்லூரியின் தலைவராக 1924 -27 ஆண்டுகளில் பணியாற்றினார். தமிழ்நாட்டு அரசின் சார்பில் 1906ஆம் ஆண்டு ’மகா மகோபாத்தியாயர்’ பட்டம் வழங்கப்பட்டது. சென்னைப் பல்கலைக்கழகத்தின் சார்பில் 1932இல் முனைவர் பட்டம் அளிக்கப்பட்டது.
- ஏடுகளைத் தேடி அலைந்தபோது தான் பட்ட சிரமங்களையும், சந்தித்த மனிதர்களையும், நடந்த சுவையான நிகழ்வுகளையும் பற்றித் தொடர்ந்து கலைமகள், ஆனந்தவிகடன் போன்ற பத்திரிகைகளில் கட்டுரைகளாக உ.வே.சா. எழுதிவந்தார். குறிப்பாக விகடன் இதழில் அவர் எழுதிவந்த ’என் சரித்திரம்’ தொடர் நூற்றியிருபது வாரங்கள் வெளிவந்து பெரும் புகழ்பெற்றது. கண்டதும் கேட்டதும், நினைவு மஞ்சரி, புதியதும் பழையதும், உதிர்ந்த மலர்கள் ஆகிய நூல்களும் இத்தகைய நினைவுகளின் தொகுப்புகளே
- இரண்டாம் உலகப் போர் தொடங்கிய சமயத்தில், 1942இல் சென்னையை அடுத்த திருக்கழுக்குன்றத்திற்கு குடும்பத்துடன் குடிபெயர்ந்தார். அதே ஆண்டு அங்கேயே மரணம் அடைந்தார். ’ தமிழ்த் தாத்தா’ என்று தமிழ்நாட்டுக் குழந்தைகளும் பெரியவர்களும் அன்போடு அவரை அழைப்பதே, அவரின் சீரிய தமிழ்ப் பணிக்குச் சான்றாக அமைகிறது.
இதுபோன்ற பயனுள்ள கட்டுரைகளை தவறவிடாமல் படிக்க': https://www.hindutamil.in/web-subscription