செண்டம் வாங்க செம்மையான டிப்ஸ்!

By ஆர்.சி.ஜெயந்தன்

தொடங்கிவிட்டன அரசுத் தேர்வுகள்! தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை மே 28-ம் தேதி வரைத் தேர்வுகளை நடத்துகிறது என்றால், மத்திய கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ ஜூன் 7-ம் தேதி வரை தேர்வுகளை நடத்துகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பள்ளிக்குச் சென்று பயில்வது தடைப்பட்டுப்போனதில் மாணவர்கள் இணையவழி வகுப்புக்களுக்காக அதிகமும் ‘லேப் டாப்’, ‘டேப்’, ஸ்மார்ட் போன், டெஸ்க் டாப் ஆகிய டிஜிட்டல் சாதனங்களையே அதிமும் நம்பியிருந்தார்கள். கற்றல் முறை மாறிப்போனதால், வகுப்புகள் முடிந்த பிறகும் டிஜிட்டல் சாதனங்களைப் பயன்படுத்தும் நேரம், கரோனா காலத்தில் பல மடங்கு அதிகமாகிவிட்டது. இந்த ‘ஸ்கிரீன் டைம்’ பல மாணவர்களுக்கு ஒரு ‘போபியா’வாக மாறி விட்டது. இதன் விளைவாக, பாடங்களை அதிகநேரம் மாணவர்களால் படிக்க முடியவில்லை. அல்லது படிப்பதில் ஈடுபாடு ஏற்படுவதில்லை.

டிஜிட்டல் சாதனங்களை அதிக அளவு பயன்படுத்தப் பழகிக்கொண்டிருப்பதால்,பாடப் புத்தகங்களின் வழியாகப் பாடங்களைப் படிப்பதற்குப் பதிலாக, ‘டெக்ஸ் புக்’குகளை டவுன்லோட் செய்து அதையும் கம்ப்யூட்டர் அல்லது ஸ்மார்ட்போன் திரை வழியாகப் படிக்கப் பழகியிருக்கிறார்கள். பாடங்களைப் படிக்கத் தொடர்ந்து ஒளிரும் திரையைப் பார்ப்பதால் ஏற்படும் சிக்கல், கண் எரிச்சல், தூக்கமின்மை ஆகிய உடல்நலப் பிரச்சினைகளையும் கொண்டுவந்து சேர்த்திருக்கிறது.

என்றாலும், இருந்த இடத்திலிருந்தே, பாடங்களைப் படிக்கவும் பாடத்துக்கு வெளியே அறிவைத் தேடிக் கற்றுக்கொள்ளவும் டிஜிட்டல் சாதனங்கள் எந்த அளவுக்கு வரமாக இருக்கிறதோ அதே அளவுக்குச் சாபமாகவும் மாறிவிட்டன என்பதை பெற்றோர்களும் மாணவர்களும் மறுக்கமாட்டார்கள்.

சிக்கல் தொடங்கும் இடம்

ஆனால்,டிஜிட்டல் சாதனங்களை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தும்போது, மனம் ஒன்றிப் படிப்பது சவாலாகிவிடலாம். நீங்கள் பயன்படுத்தும் டிஜிட்டல் சாதனத்தில் இருக்கும் மற்ற ‘ஆப்’களைத் திறந்து பார்க்கவும் நண்பர்களுடன் உரையாடவும் மெசேஜ் அனுப்பவும் உங்களை தூண்டிக்கொண்டேயிருப்பதை நீங்கள் தவிர்க்க நினைத்தாலும் முடிவதில்லை. இதனால் சிறிது நேரம் ‘சும்மா’ இருப்பதுகூட உங்களுக்கு ‘போர்’ அடிக்கலாம்.

சிக்கல் தொடங்கும் இடம் எதுவென்றால், படித்துக்கொண்டிருக்கும்போதே.. ஒரேநேரத்தில் பல வேலைகளைச் செய்யத் தொடங்குவதில் தொடங்குகிறது. பெரும்பாலான மாணவர்கள் படிக்கும்போதே போனில் மெசேஜ் அனுப்புவது, நண்பர்களுடன் வீடியோ காலில் பேசுவது, கான்பிரன்ஸ் காலில் அரட்டை அடிப்பது என்று நேரத்தைச் சிதைக்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை அதை நேரச் சிதைவு கிடையாது. கான்பிரன்ஸ் கால் வசதியைப் பயன்படுத்தி ‘கம்பைன் ஸ்டடி’ செய்ய இருக்கும் வாய்ப்பை உண்மையாகவே பயன்படுத்திக்கொள்ளும் மாணவர்கள் குறைவு.

மேலோட்டமாகப் படித்தல்

பாடங்களை மனமொன்றி முழுமையாகப் படிப்பதற்கு ‘பொறுமை’ என்பது இல்லாமல் போவதற்கு இந்த டிஜிட்டல் ஈர்ப்பே காரணமாக இருக்கிறது. இதனால், பாடங்களைப் படித்தாலும் பலர் மேலோட்டமாக மட்டுமே படிக்கிறார்கள். மேலோட்டமாகப் படிப்பது ஒரு கேள்விக்குச் சட்டென்று பதில் கண்டுபிடிக்க வேண்டுமானால் உதவும். ஆனால், பாடத்தை ஆழமாகப் புரிந்துகொள்ள உதவாது.

ஒரு பாடத்தை ஆழமாக, முழுமையாக உங்களால் படிக்க முடிகிறதா என்பதை ஒருமுறை எண்ணிப் பாருங்கள். டிஜிட்டல் சாதனங்களைப் பயன்படுத்தினால் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட வேலைகளைச் செய்ய முடியும் என்று நினைக்கிறீர்களா? உதாரணத்துக்கு, நண்பர்களுக்கு மெசேஜ் அனுப்பிக்கொண்டே, இசை கேட்டுகொண்டே படிக்கிறார்களா? அப்படிச் செய்வதால் கவனம் சிதறி எதையுமே சரியாகச் செய்ய முடியாமல் போய்விடலாம்.

படிப்பது என்னும் உங்கள் கடமையில் அல்லது வேலையில் கவனம் செலுத்துவது முதலில் உங்களுக்குக் கஷ்டமாக இருப்பதுபோல் தோன்றலாம். ஆனால், பிறகு அந்த முயற்சி வீண்போகாது. ஒரே நேரத்தில், இரண்டு மூன்று வேலைகளைச் செய்யாம ஒரு வேலையில மட்டும் கவனம் செலுத்துவது எவ்வளவு நல்லது என்பதை மெல்ல மெல்ல புரிந்துகொள்வீர்கள். அப்படி செய்யும்போது உங்களால் பாடம் படிப்பது உட்பட எந்த வேலையாக இருந்தாலும் அதில் மனமொன்றி ஈடுபட முடியும். அப்போது தேவையற்ற பதற்றமும் இருக்காது. பாடங்களை ஆழமாக உள்வாங்கிக்கொள்ள முடியும் என்பதை நீங்கள் உணர்ந்துகொள்வீர்கள்.

படிப்பில் கவனம் செலுத்துவதற்கும், படித்த பாடங்களை நினைவில் நிறுத்துவதற்கும் டிஜிட்டல் சாதனங்கள் எந்த வகையில் எல்லாம் உங்களுக்குத் தடையாக இருக்கிறது என்பதை நீங்களே யோசித்து, ஒரு பட்டியல் தயார் செய்து பாருங்கள். அப்போது புரியும் நீங்கள் ‘டிஜிட்டல் போபியா’வுக்குள் உங்களையும் அறியாமல் சிக்கியிருக்கிறீர்களா இல்லையா என்பது.

தனிமை உற்ற நண்பனா? எதிரியா?

10, 11, 12-ம் வகுப்புப் படிக்கும் பிள்ளைகளுக்கு நல்ல சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்பதற்காக, குறைந்தது இரண்டு அறை கொண்ட வீடுகளில் வசிப்பவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு ஒரு அறையை தாரை வார்த்துக் கொடுக்கிறார்கள். உண்மையில் தனிமை ஆழ்ந்து படிப்பதற்கு சிறந்த நண்பன். ஆனால், அதே தனிமையை ‘அட்வாண்டேஜ்’ ஆக எடுத்துகொள்ளும் பிள்ளைகளே அதிகமாக இருக்கிறார்கள் என்பது கரோனா காலத்தில் நடப்பட்டுள்ள ஆய்வு!

தனியாக ஒரு இடத்தில் வசதியாக இருந்து பாடங்களைப் படிக்கும்போது, பாடங்கள் மனதில் நன்கு பதிவதுடன் பாடங்கள் பற்றி ஆழமாக யோசிக்கவும் வழி வகையாக அமைகிறது. இதனால், நிறைய கற்றுக்கொள்ள முடியும். ஆனால், தனிமையை உங்கள் பொழுதுபோக்கும் மனநிலைக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்வதாக நீங்கள் நினைக்கிறீர்கள் என்றால் அதிலிருந்து வெளியே வர, அறையின் கதவை முழுவதும் இறுகச் சாதிக்கொள்வதைவிட பாதி அளவு திறந்து வைத்துப் பழகிக்கொள்ளுங்கள். அப்போது அதிலிருந்து மீண்டு விடுவீர்கள்.

இன்று பிடித்த கல்லூரிகள் பல்கலைக்கழகங்களில் இடம் பிடிக்க நுழைவுத் தேர்வுகள் இருந்தாலும் அதைத் தாண்டி மாநில கல்வி நிறுவனங்களில் இடம்பிடிக்க மதிப்பெண்ணும் முக்கியமாகிவிடுகிறது.உங்களுக்குப் பிடித்தமான பாடங்கள் உட்பட ஐந்து பாடங்களில் மூன்றிலாவது ‘செண்டம்’ வாங்கிவிட முடியும் என்று நீங்கள் நம்பும் மாணவர் என்றால், அதைச் சாதிக்க நீங்கள் செய்ய வேண்டியது இவற்றைத்தான்:

1. ஸ்மார்ட் போன், டேப், அல்லது கம்ப்யூட்டரில் பாடத்தைப் படிக்கிறீர்கள் என்றால், அவற்றின் மூலம் படிக்கும் நேரத்தைப் பாதியாகக் குறைத்து, பாடப் புத்தகங்கள், மற்றும் கைடுகள் வழியாகப் படியுங்கள்.

2. பாடப் புத்தகம், கைடுகள், நோட்ஸுகள் வழியாகப் படிக்கும்போது உங்கள் டிஜிட்டல் சாதனம் எதுவாயினும் அதை ‘ஆஃப்’ செய்து வையுங்கள்.

3. தனியறையில் படிக்கிறீர்கள் என்றால் உங்கள் ஸ்மார்ட் போனை ஆஃப் செய்து உங்கள் அறைக்கு வெளியே வையுங்கள்.

4. பாடப் புத்தகத்தில் படிக்கும் பழக்கம் கடந்த இரு ஆண்டுகளில் உங்களிடம் வெகுவாகக் குறைந்துபோய் இருந்ததா? கவலை வேண்டாம்; முதலில் ஒரு பாடத்தில் ஒரு பாராவைப் படிக்கத் தொடங்குங்கள். பிறகு, அடுத்த பாரா, அடுத்த பாரா என்று கொஞ்சம் கொஞ்சமாக அதிகப்படுத்துங்கள். வாய்விட்டு மெல்லமாகப் படியுங்கள். இப்போது பாருங்கள். உங்களையும் அறியாமல் குறிப்பிட்ட நேரத்தில் முழுப் பாடத்தையும் படித்து முடித்திருப்பீர்கள்.

5. ஒரு முழுப் பாடத்தையும் படித்து முடித்துவிட்டீர்கள் என்றால், அதைப் பற்றி, அதில் உள்ள ‘கீ பாய்ண்ட்ஸ்’ அல்லது ‘ஃபார்முலா’ வைக் குறித்து ‘ரீகேப்’ செய்துபார்த்து விடுங்கள்.

6. உங்கள் கவனத்தைச் சிதறடிக்கும் எதையும் உங்கள் அருகில் வைத்துக் கொள்ளாதீர்கள்.

7. பின்னிரவு வரை படிக்கும் பழகத்தைக் கொண்டிருந்தால், காலையில் தேவையான அளவுக்குத் தூங்கி எழுந்து படியுங்கள். அதிகாலையில் எழுந்து படிப்பவர் எனில், காலை நேரத்தின் அமைதி உங்கள் மனம் படங்களைப் பதிவு செய்துகொள்ளும் புத்தம் புது டிஜிட்டல் டிஸ்க்போல தயாராகிவிடுவதைப் பயன்படுத்திகொள்ளுங்கள்.

8. கோடைக்காலம் என்பதால், போதிய அளவு குடிநீர் அருந்துவது, நீர்ச்சத்து அதிகமுள்ள பழங்கள், காய்களை உண்ணுவது உங்கள் ஆரோக்கியத்தை ஒரே சீராக வைத்திருக்க பெரிதும் உதவும்.

9. உங்களுடைய பெற்றோர் நிச்சயமாக அவர்களுடைய பிரச்சினைகளை உங்களிடம் கொண்டு வராமல், உங்களுக்கு நல்ல சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுப்பதுடன், உங்களுக்கு தேவையானவற்றைச் செய்வார்கள். எனவே உங்கள் கவனம் வீட்டின் பிரச்சினை எதிலும் குவியவேண்டாம்.

10. தேர்வு நேரம் என்பதற்காக, மிதி வண்டி ஓட்டுவது, விளையாடுவது, அப்பா- அம்மா, உங்கள் சகோதர, சகோதரிகளுடன் சிறிது நேரம் உரையாடுவது, குறிப்பாகக் குடும்பமாக அமர்ந்து உண்பது ஆகிவற்றை வழக்கம்போல் செய்யுங்கள். உங்கள் மனநிலை மேம்பட்ட நிலையில் தொடர இவை மிகவும் அவசியம். பிறகென்ன? உங்களின் விருப்பதுக்குரிய பாடங்களில் நீங்கள் ‘செண்டம்’ மதிப்பெண்களைப் பெற வாழ்த்துகிறோம்.

‘இதுபோன்ற பயனுள்ள கட்டுரைகளை தவறவிடாமல் படிக்க': https://www.hindutamil.in/web-subscription

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்