அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பையும் மாணவர்களின் கற்றல் திறனையும் மேம்படுத்தும் வகையில் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் மறுகட்டமைப்பு செய்யப்படும் எனத் தமிழக அரசு அண்மையில் அறிவித்தது. அதன் முதல்படியாகத் தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் மார்ச் 20 அன்று நடைபெற்ற கூட்டத்தில் 23 லட்சத்துக்கும் அதிகமான பெற்றோர்கள் பங்கேற்றனர்.
அனைவருக்கும் இலவசக் கல்வி, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் 2009-ல் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் உருவாக்கப்பட்டன. இதன்படி அனைவருக்கும் கல்வி திட்டத்தின் சார்பில் பள்ளி அளவில் ஒரு குழுவும், அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டத்தின் சார்பில் மற்றொரு குழுவும் இருந்தன. தற்போது இரண்டையும் ஒன்றிணைத்து ‘பள்ளி மேலாண்மைக் குழு’வாக அரசு மாற்றியுள்ளது. இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, ‘நம் பள்ளி நம் பெருமை’ என்கிற பரப்புரையையும் தொடங்கியுள்ளது.
இதற்காக புதிய செயலி ஒன்றும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகள் தன்னிறைவு பெற்றவையாக மாற என்ன செய்ய வேண்டும்?
கழிவறை அவசியம்
கற்றலைவிட கற்றல் நிகழும் இடத்தின் சுத்தமும் சுகாதாரமும் முக்கியமில்லையா? பெரும்பாலான பள்ளிகளில் போதுமான எண்ணிக்கையில் கழிவறைகள் இல்லை. அப்படியே இருந்தாலும் கதவுகள் இல்லாமலும் பயன்படுத்த முடியாத நிலையிலும் இருக்கின்றன. சுகாதாரமற்ற கழிவறைகளைப் பயன்படுத்த அஞ்சியே பெரும்பாலான மாணவர்கள் போதுமான அளவுக்குத் தண்ணீர் குடிப்பதில்லை. சிறுநீரை கழிக்காமல் வீட்டுக்குச் செல்லும்வரை அடக்கிவைத்து உடல்நல பாதிப்புக்கு ஆளாகிறார்கள்.
சில பள்ளிகளில் பெரும்பாலான மாணவிகள் மாதவிடாய் நாட்களில் பள்ளிக்கு வருவதில்லை. கழிவறையும் தண்ணீரும் இல்லாத நிலையில் அவர்கள் நாப்கினை எப்படி மாற்றுவார்கள்? அரசுப் பள்ளிகளில் மாணவியருக்கு சானிட்டரி நாப்கின் வழங்குவது வரவேற்கத்தக்கதே அதோடு சேர்த்து அவற்றை அப்புறப்படுத்துவதற்கான ஏற்பாடுகளையும் செய்துதருவதும் அவசியம். நாப்கினைச் சுகாதாரமான முறையில் அகற்ற நாப்கின் எரியூட்டிகள் போன்ற கருவிகள் உள்ளன. அவற்றை மாணவிகள் பயிலும் பள்ளிகள்தோறும் அமைக்க வேண்டும்.
தூய்மைப் பணியாளர்கள் தேவை
பள்ளிகளில் போதுமான எண்ணிக் கையில் தூய்மைப் பணியாளர்களை நியமிக்க வேண்டும். தமிழகத்தில் பெரும்பாலான பள்ளிகளில் உள்ளூர்ப் பணியாளர்களை அவ்வப்போது அழைத்து சுத்தம் செய்துவருகிறார்கள். ஆட்கள் கிடைக்காவிட்டால் கழிவறைகளின் நிலை படுமோசமாகிவிடுகிறது. இதற்கென அரசு தனியாக நிதி ஒதுக்கி, தூய்மைப் பணியாளர்களை நியமிக்க வேண்டும். அப்போதுதான் சுகாதாரத்தைப் பராமரிக்க முடியும். அரசு குறிப்பிட்டிருப்பதைப் போல் பள்ளியின் சுற்றுப்புறச் சூழலைத் தூய்மையாக வைத்திருக்க முடியும்.
வகுப்பறைக்கு வெளியே
போதுமான காற்றும் வெளிச்சமும் இருக்கிற வகுப்பறைதான் கற்கும் மனநிலையை மாணவர்களிடையே ஏற்படுத்தும். அதனால், வகுப்பறை களின் கட்டுமானமும் பராமரிப்பும் முக்கியம். சில தொடக்கப்பள்ளிகளில் போதுமான வகுப்பறைகள் இருக்கின்றனவா என்பதை ஆராயாமலேயே நடுநிலைப்பள்ளிகளாகத் தரம் உயர்த்தப்படுகின்றன. இன்னும் சில பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வகுப்பறைகள் இல்லை. இதனால் மாணவர்கள் வகுப்பறைக்கு வெளியே மரத்தடியில் அமரவைக்கப்படும் நிலை ஏற்படுகிறது. பள்ளியில் வகுப்பறைகளை அதிகரிக்க வேண்டும், சிதிலமடைந்த வகுப்பறைகளை சீரமைக்கவும் வேண்டும்.
மாணவர்களுக்குத் தூய்மையான குடிநீரை உறுதிசெய்ய வேண்டியது அரசின் கடமை. புத்தகச் சுமையோடு தண்ணீரையும் சேர்த்தே பல குழந்தைகள் சுமக்கிறார்கள். மதிய உணவு சாப்பிட்ட தட்டைத் தெருக்குழாய்களிலும் அக்கம் பக்கத்து வீடுகளில் தண்ணீர் வாங்கியும் கழுவும் குழந்தைகள் நம்மைச் சுற்றி இருக்கிறார்கள். இதையும் மாற்றியமைக்க வேண்டும். மாணவர்கள் ஓடியாடி விளையாட பள்ளிகளில் விளையாட்டு மைதானங்கள் அமைக்க வேண்டும். ஆசிரியர்கள், மாணவர்களைப் புரிந்துகொள்ள ஆசிரியர் - மாணவர் விகிதத்தைப் பராமரிக்க வேண்டும். அதற்கேற்ப ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். பள்ளி மேலாண்மைக் குழுக்கள் இவற்றையெல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
முன்மாதிரிப் பள்ளி
பெற்றோரும் ஆசிரியர்களும் மனது வைத்தால் வியத்தகு மாற்றங்களைப் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் மூலம் நிகழ்த்தலாம். உதாரணமாக, கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ஒன்றியம் வடசெட்டியந்தல் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, பொதுமக்களின் ஒத்துழைப்போடு சிறப்பாகச் செயல்பட்டுவருகிறது. முன்னாள் மாணவரான ஓய்வுபெற்ற அஞ்சல்துறை இயக்குநர் அப்பள்ளியில் கற்றல் உபகரணங்களை வழங்கியுள்ளார். பள்ளிச் சுவர்களில் பாடம் தொடர்பாக ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. பக்கத்து ஊர்களில் இருந்து மாணவர்களை அழைத்துவர தலைமையாசிரியரே ஆட்டோ ஏற்பாடு செய்துள்ளார். கராத்தே, சிலம்பம் போன்றவையும் அவருடைய ஏற்பாட்டில் கற்றுத்தரப்படுகின்றன.
மாற்றுத்திறனாளி மாணவர்களும் பயன்படுத்தும் வகையில் இங்கே கழிவறை அமைக்கப்பட்டுள்ளது. “பள்ளி மேம்பாட்டில் ஊர் மக்கள் அக்கறையோடு செயல்படுகிறார்கள். அனைத்துக் கூட்டங்களிலும் பெற்றோர் ஆர்வத்துடன் பங்கேற்கிறார்கள். பள்ளி மேலாண்மைக் குழுவில் தலைவியாக தேர்வானவர், தனியார் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றியவர். எங்கள் பள்ளியில் 5 வகுப்புகளுக்கு நான்கு ஆசிரியர்கள் மட்டுமே இருக்கிறோம் என்பதால் தன் வேலையை விட்டுவிட்டு இங்கு மாணவர்களுக்குப் பாடம் சொல்லித்தருகிறார். மாணவர்களுக்கு விளையாட்டு மைதானமும் இன்னும் ஒரு வகுப்பறையும் தேவை” என்கிறார் இந்தப் பள்ளியின் தலைமையாசிரியர் லக்ஷ்மி. 2013-14ஆம் ஆண்டுக்கான சிறந்த பள்ளி விருதை இந்தப் பள்ளி வென்றிருக்கிறது.
மலைவாழ் மக்களின் ஈடுபாடு
நீலகிரி மாவட்டம் தொட்டபெட்டாவுக்கு அருகில் உள்ள ஜெ.கொலகம்பை மலைகிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் ஒன்பது மாணவர்களே படித்துவந்தனர். பள்ளி மேலாண்மைக் குழுவினர் முயற்சியால் தனியார் பள்ளியில் படித்துவந்த மாணவர்கள் இங்கே சேர்க்கப்பட்டுத் தற்போது 20 மாணவர்கள் இந்தப் பள்ளியில் படித்துவருகிறார்கள். “இது மிகவும் பின்தங்கிய கிராமம். இங்குள்ள மக்களிடம் பணஉதவியை எதிர்பார்க்க முடியாது. இருந்தும் தங்கள் பங்களிப்பாகக் கை கழுவும் மேடை அமைத்துத் தந்திருக்கிறார்கள்” என்று சொல்கிறார் பள்ளித் தலைமையாசிரியர்
.
பள்ளியின் தரம் உயர்ந்தால்தான் கற்றல் தரம் உயரும். பள்ளி மேலாண்மைக் குழுக்களின் நோக்கமே பெற்றோரும் ஆசிரியரும் இணைந்து பள்ளியின் மேம்பாட்டுக்காகச் செயல் படுவதுதான். பள்ளிக் கட்டமைப்பில் தொடங்கி அனைத்தையும் மேம்படுத்துவதற்கான பணிகளில் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் ஈடுபட வேண்டும். அனைத்தையும் அரசாங்கமே செய்ய வேண்டும் என்பதல்ல. அரசுடன் ஆசிரியர்களும் பெற்றோரும் உள்ளூர் நிர்வாகமும் கைகோத்துச் செயல்படும்போது இலக்கை அடைய முடியும்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago