கனோபஸ் - தென் வானில் ஒரு சூரியன்

By செய்திப்பிரிவு

ஜனவரி, பிப்ரவரி மாதம் தமிழ்நாட்டில் பின்பனிக் காலம். ஆனால், வானத்தை நேசிப்பவர்களுக்கு இதுதான் வசந்த காலம். நட்சத்திரங்களைப் பார்த்து ரசிக்க, கோள்களைப் பார்த்து ரசிக்க உகந்தது டிசம்பர் முதல் மார்ச் வரையிலான காலம். ஏப்ரல், மே மாதங்களில் இரவு வானில் மேகக்கூட்டம் அதிகமிருப்பதால் நிலவையும் நட்சத்திரங்களையும் தொடர்ச்சியாகப் பார்ப்பதோ, தொலைநோக்கி மூலம் தெளிவாகப் பார்ப்பதோ கடினம். அதேபோல் பின்பனிக் காலத்தில்தான் ‘ஓரியான்’ என்னும் வேட்டைக்கார நட்சத்திரக் கூட்டம் இரவு வானில் நன்றாகத் தெரியும்.

குழந்தைகளுக்கு இரவு வான்நோக்குதலை அறிமுகப்படுத்த ‘ஓரியான்’ நட்சத்திரக் கூட்டம் சிறந்தது. அதில் மூன்று முதன்மை நட்சத்திரங்களைக் காணும்போது நட்சத்திரங்களைப் பற்றி அறிந்துகொள்ள அவர்கள் ஆர்வம் காட்டுவார்கள். வேட்டைக்கார நட்சத்திரக் கூட்டத்துக்கு அருகில் இருக்கும் விண்மீன் சீரியஸ், வானத்தில் இருக்கும் நட்சத்திரங்களிலேயே மிகவும் பிரகாசமானது.

பின்பனிக் கால இரவு வானில் முக்கியமான நட்சத்திரம் ‘கனோபஸ்’. தென் வானில் பிரகாசமாகத் தெரியும். இது நம் நாட்டில் அகத்தியர் நட்சத்திரம் எனப்படுகிறது. சீரியஸ் நட்சத்திரத்துக்கு அடுத்த பிரகாசமான நட்சத்திரம் இந்த ‘கனோபஸ்’. இதைக் கண்டறிவது எளிது. பின்பனிக் காலத்தில் மாலை 6 மணிக்கு மேல் தென் வானில் பளிச்சென்று இது தெரியும். மாலை 6 மணி வாக்கில் தென்கிழக்கு திசையில் உதித்து, கொஞ்சம் கொஞ்சமாக மேலேறி இரவு 8 - 9 மணி வரை அதிகபட்ச கோண உயரத்தை அடையும். அந்நேரத்தில் கனோபஸ் தென் திசையில் இருக்கும். மறுபடியும் தென்மேற்குத் திசையில் நகர்ந்து கொஞ்சம் கொஞ்சமாகக் கீழிறங்கி, பின்னிரவில் அடிவானத்தின் கீழ் மறைந்துவிடும். கிட்டத்தட்ட அரைவட்டப்பாதையில் நகர்கிறது.

போசிடோனியஸின் சந்தேகம்

‘கனோபஸ்’ நட்சத்திரத்துக்குப் பின்னால் சுவாரசியமான வரலாறு இருக்கிறது. 2,200 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய போசிடோனியஸ் என்கிற கிரேக்க வானியலாளர், இந்த நட்சத்திரத்தை வைத்து பூமியின் சுற்றளவை அளந்திருக்கிறார். அதுவும் பெரிய கணிதக் கோட்பாடுகள் எதுவும் இல்லாமல், இன்றைய ஏழாம், எட்டாம் வகுப்பு நிலை கணித அறிவை மட்டுமே பயன்படுத்தி இதைச் செய்திருக்கிறார். பூமியின் சுற்றளவை, ஆரத்தை அளக்க நமக்கும் ‘கனோபஸ்’ உதவும். அலெக்சாண்ட்ரியா நகரத்துக்கு அருகில் ரோட்ஸ் என்னும் நகரம் இருக்கிறது. அந்த நகரத்தில் இருந்து பார்த்தபோது ‘கனோபஸ்’ நட்சத்திரம் இரவு நேரத்தில் அடிவானத்திலேயே இருந்தது. மேலே எழும்புவதில்லை என்று போசிடோனியஸ் அறிந்தார். ஆனால், அதே நேரத்தில் அலெக்சாண்ட்ரியாவில் அந்த நட்சத்திரம் அடிவானத்தில் இருந்து அதிகபட்சம் ஏழரை டிகிரி கோண அளவுக்கு உயரே எழும்புவதை அறிந்தார்.

ஒரே நட்சத்திரம் இரண்டு இடங்களிலிருந்து பார்க்கும்போது எப்படி வெவ்வேறு உயரத்தில் தெரியும் என்று அவர் யோசித்தார். பூமி ஒருவேளை தட்டையாக இருந்தால் பூமியின் எல்லா இடங்களிலிருந்து பார்த்தாலும் நட்சத்திரம் ஒரே உயரத்தில் இருப்பது போல்தான் தெரியும். ஒன்று, ரோட்ஸ் நகரத்தில் இருப்பதுபோல் அலெக்சாண்ட்ரியாவிலும் ‘கனோபஸ்’ தென் அடிவானத்திலேயே இருக்க வேண்டும். அல்லது அலெக்சாண்ட்ரியாவில் இருப்பதுபோல ரோட்ஸ் நகரத்திலும் ‘கனோபஸ்’ நட்சத்திரம் தென்வானில் ஏழரை டிகிரி உயரத்தில் இருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு இல்லை. பூமியின் மேற்பரப்பு வளைந்திருந்தால் மட்டுமே இது சாத்தியம் என்ற முடிவுக்கு வந்தார். போசிடோனியசுக்கு முன்பாகவே பல கிரேக்க வானியலாளர்கள் வேறு சில பரிசோதனைகள் மூலமாக பூமி உருண்டையாகத்தான் இருக்க முடியும் என்று கூறிவந்தார்கள். போசிடோனியஸ் இவர்களைப் பின்பற்றி பூமி உருண்டை என்கிற கருத்தை ஏற்றுக்கொண்டார். அதன் சுற்றளவையும் அளந்துவிடலாம் என்பதைக் கண்டறிந்தார்.

பூமியின் சுற்றளவும் ஆரமும்

ஒரு நட்சத்திரத்தின் கோண உயரம் என்பது பூமியின் வளைவைப் பொறுத்தது. பூமியின் இரு பகுதிகளுக்கு இடையே அதன் வளைவை பொறுத்து ஒரு நட்சத்திரத்தின் கோண உயரம் வேறுபடும். இவ்வேறுபாட்டைக் கணக்கிட்டால் எளிதாகப் பூமியின் சுற்றளவை அளந்து விடலாம் என்பதை அவர் உணர்ந்துகொண்டார். ஏற்கெனவே இதே கருத்தைப் பயன்படுத்தி எரடோஸ்தனிஸ் என்கிற வானியலாளர் பூமியில் செங்குத்தாக நட்டு வைக்கப்பட்ட குச்சி மீது சூரியனின் ஒளிக்கதிர்கள் ஏற்படுத்தும் நிழல் மூலம் பூமியின் சுற்றளவை அளந்திருந்தார். எரடோஸ்தனிஸ் பரிசோதனையைப் பகலில் மட்டுமே செய்ய முடியும். ஆனால், இரவிலும் இப்பரிசோதனையைச் செய்ய முடியும் என்று போசிடோனியஸ் நிரூபித்தார். அவரைப் பொறுத்தவரை ‘கனோபஸ்’ இரவு நேரச் சூரியன்.

ரோட்ஸ் நகரத்திலிருந்து பார்க்கும்போது ‘கனோபஸ்’ நட்சத்திரம் அடிவானத்திலேயே இருப்பதால், அதன் கோண உயரம் பூஜ்ஜியம். ஆனால், அலெக்சாண்ட்ரியாவில் இருந்து பார்க்கும்போது ‘கனோப’ஸின் கோண உயரம் ஏழரை டிகிரி. இதை வைத்து போசிடோனியஸ் இன்னொரு அற்புதமான முடிவுக்கு வந்தார். அதாவது, பூமியின் மையத்திலிருந்து ஒரு கோட்டை ரோட்ஸ் நகரத்துக்கும், இன்னொரு கோட்டை அலெக்சாண்ட்ரியா நகரத்துக்கும் போட்டால் இரண்டு கோடுகளுக்குமான கோணமும் அதே ஏழரை டிகிரிதான்.

வட்டத்தில் ஏழரை டிகிரி என்பது ஐம்பதில் ஒரு பங்கு. அதாவது, முழு வட்டத்தை ஐம்பதாக பிரித்தால் அதில் ஒரு பங்குதான் இது. அப்படியெனில் அலெக்சாண்ட்ரியாவுக்கும் ரோட்ஸ் நகரத்துக்கும் இடையிலான தொலைவு என்பது பூமியின் சுற்றளவில் ஐம்பதில் ஒரு பங்கு. எனவே அலெக்சாண்ட்ரியாவுக்கும் ரோட்ஸ் நகரத்துக்கும் இடையே உள்ள தொலைவை ஐம்பதால் பெருக்கினால் பூமியின் சுற்றளவு கிடைத்துவிடும். அலெக்சாண்ட்ரியாவுக்கும் ரோட்ஸ் நகரத்துக்கும் இடையிலான தொலைவு, கிட்டத்தட்ட 800 கி.மீ. எனவே, பூமியின் சுற்றளவு இதன் ஐம்பது மடங்கு. அதாவது 40,000 கி.மீ.. கிட்டத்தட்ட துல்லியமான மதிப்பு. பூமியின் சுற்றளவு தெரிந்தால் ஆரம் கண்டறிவது மிக எளிது. சுற்றளவை 2π (பை) மூலம் வகுத்தால் கிடைப்பது ஆரம். நாம் கற்கும் எளிய கணிதம் மூலம் எவ்வளவு பெரிய பயன்பாடு பாருங்கள். கணிதம் என்பது வெறும் சமன்பாடுகளோ சூத்திரமோ அல்ல. அது இயற்கையின் மொழி.

நாம் வானில் காணும் ஒவ்வொரு நட்சத்திரத்துக்குப் பின்னாலும் இப்படி ஒரு வரலாறு இருக்கிறது. இன்று நாம் சில நிமிடமே உற்றுநோக்கும் ஒரு நட்சத்திரத்தைப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு யாரோ ஒரு வானியல் அறிஞர் தன் வாழ்நாள் முழுவதும் ரசித்துப் பார்த்து, அதைப் பற்றி நிறைய பதிவுசெய்திருப்பார். ஒவ்வொரு நட்சத்திரமும் இப்படி சுவாரசியமான கதைகளை தன்னுள் வைத்திருக்கிறது. இரவில் அந்நட்சத்திரங்களிடம் பேசுங்கள், அவை கூறும் கதைகளைக் கேளுங்கள்.

கட்டுரையாளர், இயற்பியல் உதவிப் பேராசிரியர்

தொடர்புக்கு: josephprabagar@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்