வைர விழா காணும் சென்னையின் கணிதப் பெருமை

By ச.கோபாலகிருஷ்ணன்

இந்தியாவின் அறிவு வளர்ச்சிக்கும் அறிவியல் வளர்ச்சிக்கும் தமிழ் மண் தொன்றுதொட்டு பங்களித்துவந்திருக்கிறது.. பிரிட்டிஷ் ஆட்சியிடமிருந்து விடுதலை பெற்ற பின், கல்வி உள்ளிட்ட வளர்ச்சி சார்ந்த குறியீடுகளில் முன்னேறிய நாடாக உருமாற்றும் கனவைச் சுமந்த தலைவர்களின் ஆட்சி இந்தியாவில் அமைந்தது. நாடு முழுவதும் பல்கலைக்கழகங்கள், ஆய்வு நிறுவனங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் அமைக்கப்படுவதற்கு முன்னுரிமை வழங்கப்பட்டது. நவீன கல்வி - ஆய்வுக்கான கட்டமைப்பை உருவாக்குவதில் அரசும் லட்சிய வேட்கை கொண்ட தனிநபர்களும் பங்களித்தனர்.

அந்த வகையில் புகழ்பெற்ற இந்திய இயற்பியலாளர் அல்லாடி ராமகிருஷ்ணன் 1962இல் சென்னையில் கணித அறிவியல் நிறுவனம் (Institute Of Mathematical Sciences) என்னும் சுயாதீன ஆய்வு மையத்தைத் தொடங்கினார். அதன் இயக்குநராகவும் அவர் செயல்பட்டார்.

சென்னை தரமணியில் அமைந்துள்ள கணித அறிவியல் நிறுவனம் கோட்பாடுசார் அறிவியல் பிரிவுகளுக்கான தேசிய ஆய்வு மையமாகச் செயல்பட்டுவருகிறது. 1984இலிருந்து இந்திய அணு ஆற்றல் துறையின் நிதியளிப்பில் இயங்கிவருகிறது. 2022 ஜனவரி 3 அன்று 60 ஆண்டுகளை நிறைவுசெய்திருக்கும் கணித அறிவியல் நிறுவனத்தைப் பற்றி அதில் நீண்ட காலம் பணிபுரிந்த பேராசிரியர் ஆர்.ராமானுஜத்துடன் பேசியதிலிருந்து சில பகுதிகள்:

“கோட்பாடுசார் இயற்பியல் ஆய்வுக்கான மையமாக இது தொடங்கப்பட்டது. இயற்பியலுக்கான நோபல் பரிசை வென்ற எஸ்.சந்திரசேகர் இதைத் தொடங்கிவைத்தார். 5-6 ஆய்வாளர்களை உள்ளடக்கிய மையமாகத் தொடங்கப்பட்டு வளர்ந்துவந்தது. அணு ஆற்றல் துறையின் வருகைக்குப் பிறகு மேலும் பல மடங்கு வளர்ந்தது. கணிதம் (Mathematics), கோட்பாடுசார் இயற்பியல் (Theoretical Physics), கோட்பாடுசார் கணினி அறிவியல் (Theoretical Computer Science), கணக்கீட்டு உயிரியல் (Computational Biology) ஆகிய நான்கு துறைகளில் இங்கே ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. அந்த ஆய்வுகளின் அடிப்படையில் முனைவர் பட்டம், ஒருங்கிணைந்த முனைவர் பட்டம் (Integrated Phd) ஆகியவை வழங்கப்படுகின்றன.

முக்கிய ஆய்வுகள்

கணிதத்தில் எண் கோட்பாடு, வடிவியல் உள்ளிட்ட பிரிவுகளில் பல முக்கியமான ஆய்வுத் திட்டங்கள் உள்ளன. கோட்பாடுசார் இயற்பியல் பிரிவில் நியூட்ரினோ இயற்பியல், துகள் இயற்பியல் உள்ளிட்டவை சார்ந்து ஆய்வுகள் நடைபெறுகின்றன. கணக்கீட்டு உயிரியலில் உயிரியல் துறையில் நிகழும் பல புதிய கண்டுபிடிப்புகளின் கணக்கீட்டு அம்சங்கள் குறித்த ஆய்வுகள் நடைபெறுகின்றன. கோட்பாடுசார் கணினி அறிவியலில் அல்காரிதம்கள், கணக்கீட்டுக் கோட்பாடு, பாதுகாப்பு கோட்பாடு, கேம் கோட்பாடு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் ஆய்வுகள் நடத்தப்படுகின்றன.

அறிவியலைப் பரப்பும் பணி

நிறுவனத்துக்கு வெளியில் உள்ள மாணவர்கள், ஆசிரியர்களிடையே கணிதம், அறிவியலைப் பரப்புவதற்கும் அவர்களின் அறிவியல் புரிதலை மேம்படுத்துவதற்குமான பல்வேறு திட்டங்கள் (Outreach Programmes) ஆண்டு முழுவதும் கணித அறிவியல் நிறுவனத்தில் நடத்தப்படுகின்றன. இந்தத் திட்டங்களின் கீழ் ஒவ்வோர் ஆண்டும் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் - ஆசிரியர்கள், கல்லூரி மாணவர்கள் - ஆசிரியர்கள், பாலிடெக்னிக் கல்லூரி ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்குத் தனித்தனி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

இந்த வகுப்புகளில் பங்கேற்க விரும்பும் மாணவர்களும் ஆசிரியர்களும் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறையின்படி பதிவுசெய்துகொள்ள வேண்டும். ஒவ்வோர் ஆண்டும் தேசிய அறிவியல் நாளன்று (பிப்ரவரி 28) ‘சயின்ஸ் அட் தி சபா’ (Science at the Sabha) என்னும் பெயரில் அறிவியல் ஆய்வு குறித்து பொதுமக்களுக்கு விளக்குவதற்கான நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இப்படியாக ஆய்வு மட்டுமல்லாமல் மக்களிடையே கணிதத்தையும் அறிவியலையும் கொண்டு சேர்ப்பதற்கும் கணித அறிவியல் நிறுவனம் தொடர்ந்து பங்களித்துவருகிறது.

60ஆம் ஆண்டு சிறப்பு நிகழ்ச்சிகள்

60 ஆண்டுகள் நிறைவை ஒட்டி இந்த ஆண்டு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டுள்ளன. பெரும்பாலான நிகழ்ச்சிகள் கணிதத்தின் முக்கியத்துவம், எப்போதைக்குமான பொருத்தப்பாடு, சமகால பயன்பாடுகள் ஆகியவை குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டவை. பருவநிலை மாற்றத்தின் தீய விளைவுகளிலிருந்து உலகை மீட்பதற்கான திட்டங்கள் அத்தியாவசியம் ஆகியிருக்கும் இந்தக் காலகட்டத்தில், பருவநிலை மாதிரியாக்கம், புவியைப் பாதுகாப்பதற்கான கணிதம் குறித்த நிகழ்ச்சிகள் நடத்தப்படவிருக்கின்றன. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் இந்த ஆய்வு மையத்தில் முன்பு பணியாற்றிய ஒரு ஆராய்ச்சியாளர் இமாலயத்தில் பனிச்சிகரங்கள் உருகுவது எப்படி என்பதைக் கணித மாதிரியாக்கம் மூலம் ஆய்வு செய்துவந்தார். பெருந்தொற்றுக் காலத்தில் தொற்றுப் பரவல், நோய்ப் பரவல் மாதிரியாக்கம் ஆகியவற்றைக் கணிதவியல் அடிப்படையில் புரிந்துகொண்டு திட்டங்களை வகுப்பதற்கான முயற்சிகள் நடைபெற்றுவருகின்றன. இவை குறித்தும் நிகழ்ச்சிகள் நடத்தப்படவிருக்கின்றன.

சர்வதேச கவனம்

கணித அறிவியல் நிறுவனத்தில் சர்வதேச தரத்திலான ஆய்வுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இங்கே ஆய்வு செய்தவர்களின் ஆய்வேடுகள் சர்வதேச ஆய்விதழ்களில் வெளியாகியுள்ளன. கணித அறிவியல் நிறுவனத்தில் கோட்பாடுசார் கணினி அறிவியல் பிரிவைச் சேர்ந்த பேராசிரியர் சாகேத் சௌரப், கணித அறிவியலுக்கான 2021ஆம் ஆண்டின் மதிப்புமிக்க ‘சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருதைப்' பெற்றார். கணித அறிவியல் நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் ஆர்.பாலசுப்ரமணியன் பிரெஞ்சு அரசால் வழங்கப்படும் ‘ஷெவாலியே’ விருதைப் பெற்றுள்ளார்.

கணித அறிவியல் நிறுவனம் குறித்து மேலும் அறிய: https://www.imsc.res.in/

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்