மருத்துவமும் பொறியியலும் மட்டுமே உயர்ந்த படிப்புகள் என்கிற சமூகத்தின் பொதுப்புத்தி இன்று நீர்த்துப்போய்விட்டது. இன்றைய தலைமுறை பெற்றோர்களும் மாணவர்களும் உயர் கல்வியைத் திறந்த மனத்துடன் அணுகிவருவது கண்கூடாகத் தெரிகிறது. உயர்கல்விக்கான தேர்வில், பெற்றோரின் விருப்பும் சமூகத்தின் திணிப்பும் வெகுவாகக் குறைந்துவிட்டன.
இன்று மாணவரின் இயல்பான திறனும் படிப்புக்குப் பின்னான வேலைவாய்ப்பும் மட்டுமே உயர் கல்வித் தேர்வுக்கான முக்கியக் காரணிகளாக உள்ளன. வேலை வாய்ப்பை அள்ளித்தரும் ஏராளமான படிப்புகளில், இயன்முறை மருத்துவத்துக்கு (பிசியோதெரபிஸ்ட்) எப்போதும் முக்கிய இடம் உண்டு. அந்தப் போக்கு இன்றும் தொடர்கிறது. சொல்லப்போனால், முன்பைவிட அதிகமாகவே அது தேர்வு செய்யப்படுகிறது.
இயன்முறை மருத்துவம்
இயன்முறை மருத்துவம் என்பது நவீன உலகில் வளர்ந்துவரும் ஒரு சிறப்பு மருத்துவ முறை. இது முற்றிலுமாக மருத்துவத்துறையைச் சார்ந்த மருத்துவப் பிரிவு. முதுமை, காயம், விபத்து அல்லது சூழல் காரணமாக உறுப்புகளின் இயக்கமும் பயன்பாடும் பாதிக்கப்படும்போது இயன்முறை சிகிச்சை அளிக்கப்படும். நோயாளிகளின் உடலியக்கத்தை மீட்கவும் உறுப்புகளின் பயன்பாட்டைப் பழைய நிலைக்குக் கொண்டுவந்து பராமரிக்கவும், மேம்படுத்தவும் இந்த மருத்துவத்துறை உதவுகிறது.
உடலியக்கத்தை மேம்படுத்தல், காயங்களைத் தவிர்த்திடும் வழிமுறைகள், அடிபடும்போது காயத்தின் தீவிரத்தைக் குறைத்தல், ஊனத்தைச் சரிசெய்தல், ஊனத்திலிருந்து மீளுதல் போன்றவை குறித்தும், அதற்கான வழிமுறைகள் குறித்தும், அதற்குத் தேவைப்படும் பயிற்சிகள் குறித்தும் கற்றுக்கொள்வதே இந்த மருத்துவப் படிப்பின் முக்கிய அம்சங்கள். சுருங்கச் சொன்னால், வாழ்வின் தரத்தை அறிவதும் அதிகரிப்பதுமே இந்தச் சிகிச்சை முறையின் முக்கிய நோக்கங்கள்.
கையேடு சிகிச்சை, உடற்பயிற்சி சிகிச்சை, எலெக்ட்ரோதெரபி ஆகியவற்றைப் பயன் படுத்துவதன் மூலம் நோயாளிகளின் இயக்கக் குறைபாடுகளைச் சரிசெய்து, அவர்களின் உடலியக்கத்தையும் செயல்பாட்டையும் ஊக்குவிப்பதன்மூலம் நோயாளிகளைப் பாதிப்புக்கு முந்தைய இயல்பான நிலைக்கு இந்தச் சிகிச்சைமுறை கொண்டுவருகிறது.
இயன்முறை மருத்துவத்தின் முக்கியத்துவம்
நோயாளிகளின் மீட்சிக்கு மருத்துவர்கள், குடும்ப உறுப்பினர்கள், நலம் விரும்பிகள் ஆகியோர் எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு இயன்முறை மருத்துவர்களும் முதன்மைப் பங்கு வகிக்கின்றனர். எந்த மருத்துவமனைக்குச் சென்றாலும், மருத்துவர் சிகிச்சையை முடித்ததும் அடுத்த அறையில் பிசியோதெரபிஸ்ட் இருப்பதன் காரணமும் இதுவே. நோயைக் குணமாக்குவதில் மருத்துவர் வழங்கும் சிகிச்சையுடன் பிசியோதெரபிஸ்ட் வழங்கும் பயிற்சியும் இணையும்போதுதான் உடல் சீக்கிரம் குணமடைகிறது என்பது நிதர்சனம். தற்போது, பெரிய பன்னோக்கு மருத்துவமனைகளில் இயன்முறை மருத்துவர்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. இதன் காரணமாக, நிபுணத்துவம் பெற்ற இயன்முறை மருத்துவர்களுக்கான தேவை எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துவருகிறது. குறிப்பாக நரம்பியலிலும் மறுவாழ்வுத் துறையிலும் வேகமாக வளர்ந்துவரும் துணை மருத்துவம் (para medical) சார்ந்த சிகிச்சை முறை ஆகும்.
யார் படிக்க முடியும்?
இயன்முறை மருத்துவராக விரும்பு பவர்களுக்கு இரண்டு அடிப்படை திறன்கள் தேவை. முதலாவது, நோயின் தன்மை, உடல் உறுப்புகளின் செயல்பாடு போன்றவற்றை நுணுக்கமாகக் கற்றுக்கொள்ளும் திறன்.இரண்டாவது, மருத்துவ சிகிச்சையுடன் உடற்பயிற்சியின் மூலம் மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டுவரத் தேவையான பயிற்சிகளை நோயாளிகளுக்குக் கற்றுத் தரும் திறன். இந்தத் திறன்களையும் வாய்க்கப் பெற்றவர்களே சிறந்த இயன்முறை மருத்துவர்களாக ஜொலிக்க முடியும்.
இயன்முறை சிகிச்சை படிப்பைப் படிக்க பன்னிரண்டாம் வகுப்பில் இயற்பியல், வேதியியல், உயிரியல் அல்லது தாவரவியல் - விலங்கியல் பாடப் பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பிசியோதெரபிஸ்ட் படிப்பில் சேர நல்ல மதிப்பெண் பெற்றிருந்தால் போதும் என்று இருந்த நிலை தற்போது மாறிவிட்டது. இன்று நீங்கள் இயன்முறை மருத்துவம் படிக்க வேண்டும் என்றால், குறைந்தபட்சம் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இது, நான்கரை ஆண்டு படிப்பு.
பாடத்திட்டம்
முதலாம் ஆண்டு: உளவியல், சமூகவியல், உடற்கூறியல், உடலியங்கியல், அடிப்படை இயற்பியல்.
இரண்டாம் ஆண்டு: உயிர்விசையியல், பொது மருத்துவம், நுண்ணுயிரியல், நோயியல், உடற்பயிற்சி சிகிச்சை - 1, உடற்பயிற்சி சிகிச்சை - 2.
மூன்றாம் ஆண்டு: மின்னாற்றல் சிகிச்சை - 1, மின்னாற்றல் சிகிச்சை - 2, இதயவியல், இயன்முறை மருத்துவத்திற்கான இதயவியல், பொது உடல் நலம்.
நான்காம் ஆண்டு: எலும்பியல், நரம்பியல், இயன்முறை சிகிச்சைக்கான நரம்பியல், இயன்முறை சிகிச்சைக்கான எலும்பியல் மறுவாழ்வு.
நான்காண்டு பாடங்களைத் தேர்ச்சி பெற்ற பின் கட்டாயச் சுழற்சி முறையில் ஆறு மாதங்கள் மருத்துவமனையில் எல்லாத் துறையிலும் பணிபுரிய வேண்டும்.
எங்கே படிக்கலாம்?
தமிழ்நாட்டில் இயன்முறை மருத்துவப் படிப்புக்கு என மூன்று அரசுக் கல்லூரிகள் உள்ளன. அவை:
1. அரசு புனர்வாழ்வளிக்கும் மருத்துவ நிறுவனம் (Govt. Institute of Rehabilitation Medicine), சென்னை.
2. அரசு இயன்முறை சிகிச்சை கல்லூரி (Govt. College of Physiotherapy), திருச்சி.
3. கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி, சென்னை.
இது தவிர, இருபதுக்கும் மேற்பட்ட சுயநிதிக் கல்லூரிகள் உள்ளன. அரசுக் கல்லூரியில் ஆண்டு படிப்புக் கட்டணம் ரூ. 3000 எனவும், சுயநிதிக் கல்லூரிகளில் படிப்புக் கட்டணம் ரூ. 33,000 எனவும் உள்ளது.
வேலை வாய்ப்பு
பிசியோதெரபி படித்தவர்கள், மருத்துவ மனைகளிலும் மருத்துவ சிகிச்சை மையங்களிலும் வேலை வாய்ப்பைப் பெறலாம். பணி அனுபவத்தைப்பெற்று தனியே பிசியோதெரபி மையங்களை வைத்தும் நடத்தலாம். மருத்துவமனையில் பணிபுரிவதோடு மற்ற நேரத்தில் நோயாளியின் இருப்பிடத்திற்கே சென்று பயிற்சி வழங்க முடியும். இந்தப் போக்கு அண்மைக்காலங்களில் வேகமாக அதிகரித்துவருகிறது. இதன்மூலம் கணிசமான வருமானம் கிடைக்கும்.
முன்பு எப்போது இல்லாததைவிடத் தற்போது விளையாட்டுத் துறை அபரிமிதமாக வளர்ந்துவருகிறது. விளையாட்டுத் துறை என்று எடுத்துக்கொண்டால், இயன்முறை மருத்துவர்களின் பங்களிப்பு தவிர்க்க முடியாதது. எனவே, நீங்கள் விளையாட்டுத் துறையில் ஆர்வமுள்ளவர்கள் என்றால், இயன்முறை மருத்துவம் படித்து, விளையாட்டு நிறுவனங்களிலும், உடற்பயிற்சி மையங்களிலும் வேலை வாய்ப்பைப் பெறலாம். முக்கியமாக, இந்தியாவைவிட வளர்ந்த நாடுகளில் பிசியோதெரபி படிப்பைப் படித்தவர்களுக்கு இருக்கும் வேலைவாய்ப்புகள் அதிகம்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago