பாரதியின் முற்போக்குக் கல்விச் சிந்தனைகள்

By கோபால்

மகாகவி சுப்பிரமணிய பாரதியார் 19ஆம் நூற்றாண்டிலேயே அதிக கல்வித் தகுதியைப் பெற்றிருந்ததுடன் பல மொழிகளிலும் தேர்ச்சிபெற்றிருந்தார். கல்வி குறித்தும் கல்வியில் மொழியின் பங்கு குறித்தும் இன்றைக்கும் பொருந்தக்கூடிய பல தீர்க்கமான பார்வைகளையும் தொலைநோக்குச் சிந்தனைகளையும் தனது கவிதைகளிலும் கட்டுரைகளிலும் அவர் வெளிப்படுத்தியிருக்கிறார்.

உலகை உயர்த்தும் கல்வி

பாரதியார் வாழ்ந்த காலகட்டத்தில் பிரிட்டிஷ் ஏகாதிபத்திய ஆட்சியில் இந்திய மக்களில் பெரும்பகுதியினருக்கு கல்வி கிடைத்திருக்கவில்லை. அதனால் அவர்கள் வறுமையிலும் அறியாமை இருளிலும் ஆழ்ந்திருந்தனர். ஒடுக்குபவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள் இரண்டு தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய யதார்த்தமாக சாதிய ஒடுக்குமுறையும், ஆண்களுக்கு அடங்கி நடக்க வேண்டியது பெண்களின் கடமை என்று இருபாலினத்தவரும் ஏற்றுக்கொண்டதாக இருந்தன. இத்தகைய சூழலைக் கல்வி மூலமாகவே மாற்ற முடியும் என்று உறுதியாக நம்பியவர் பாரதியார். இது குறித்து அவர் எழுதிய பல கவிதைகளும் கட்டுரைகளும் இந்தியாவில் கல்வியின் முக்கியத்துவத்தைத் தொடர்ந்து வலியுறுத்திய முன்னோடிச் சிந்தனை யாளர்களில் ஒருவராக அவரை அடையாளம் காட்டுகின்றன.

மனித வாழ்வின் அடிப்படைத் தேவை உணவு, உடை, உறைவிடம். ஆனால் வயிற்றுக்குச் சோறிட வேண்டும்/இங்கு வாழும் மனிதருக்கு எல்லாம்/பயிற்றிப் பல கல்வி தந்து/இந்தப் பாரை உயர்த்திட வேண்டும் என்னும் கவிதை வரிகளின் மூலம் உணவுக்கு இணையான முக்கியத்துவத்தை கல்விக்கும் அளித்திருக்கிறார் பாரதியார். அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்/ஆலயம் பதினாயிரம் நாட்டல்/அன்ன யாவினும் புண்ணியம் கோடி/ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் என்னும் கவிதையின் மூலம் பல்லாயிரம் பேருக்கு உணவளிக்கும் அன்ன சத்திரங்களையும் பதினாயிரம் கோவில்களையும் கட்டுவதையும்விட ஓர் ஏழைக்கு கல்வி கற்பிப்பதே மேன்மையான செயல் என்று வரையறுத்திருக்கிறார். இறைநம்பிக்கையாளரான பாரதி இறைப்பணியைவிட கல்விக்குக் கூடுதல் முக்கியத்துவம் அளித்திருக்கிறார். கல்வி அளிப்பதன் மூலம் இறைவனை மகிழ்வித்து கூடுதல் புண்ணியம் பெற முடியும் என்று மத நம்பிக்கைக்கு மறுவிளக்கம் கொடுக்கிறார்.

ஆங்கிலக் கல்வியின் அவலம்

இந்தியர்களுக்கு எத்தகைய கல்வி கற்பிக்கப்பட வேண்டும், கல்வியில் எவற்றுக்கெல்லாம் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்பது குறித்தும் பாரதிக்கு தீர்க்கமான, தெளிவான கருத்துகள் இருந்தன. இன்று கல்வித் துறையில் நிலவும் சிக்கல்களுக்கு மாற்றாக கல்வித் துறை செயற்பாட்டாளர்களால் முன்வைக்கப்படும் சிந்தனைகள் பலவும் நூறாண்டுகளுக்கு முன்பே பாரதியிடம் வெளிப்பட்டிருக்கின்றன. தாய்மொழி குறித்த பாரதியின் கருத்துகள் அவற்றில் முதன்மையானவை. ஆங்கிலம், சமஸ்கிருதம், இந்தி உட்பட பல மொழிகளில் தேர்ச்சிபெற்றிருந்த பாரதி இந்தியர்கள் பல மொழிகள் கற்பதை ஊக்குவித்தார். அதே நேரம் பிற மொழிகளைக் கற்பதற்கு முன் தாய்மொழியில் தேர்ச்சிபெற்றிருப்பதை அடிப்படைத் தகுதியாக வரையறுத்தார்.

ஆங்கிலவழிக் கல்வியை அவர் ஏற்கவில்லை. ‘சுயசரிதை’ என்னும் நெடுங்கவிதையில் ஆங்கிலக் கல்வியின் அவலநிலை குறித்து ஆழ்மன வேதனையை வெளிப்படுத்துகிறார். தந்தை சின்னசாமி திருநெல்வேலிக்கு அனுப்பி ஆங்கிலக் கல்வி படிக்க வைத்தது குறித்து மனம் நொந்து பதிவுசெய்துள்ளார். சிங்கக்குட்டியிடம் புல்லைக் கொடுத்துச் சாப்பிடச் சொல்வது அது என்று அவர் வர்ணித்துள்ளார். வெள்ளையர்களிடம் கைகட்டி சேவகம் செய்ய விரும்புவோரும் ஒற்றர்களும் பயிலும் கல்வி என்று ஆங்கிலக் கல்வியை இடித்துரைக்கிறார்.

கணிதத்தைப் பன்னிரண்டு ஆண்டுகள் கற்பிக்கும் இந்தக் கல்வி முறை, கண்களுக்குத் தெரியும் நட்சத்திரத்தை முழுமையாகப் புரிந்துகொள்ள வழிவகுப்பதில்லை. வணிகத்தையும் பொருளாதார நூல்களையும் கற்பவர்கள் நாட்டில் நிலவும் பொருளிழப்பை, பொருளாதார சீர்கேட்டைக் கேள்வி எழுப்பக் கற்பதில்லை அவற்றின் காரணத்தையும் கண்டறிவதில்லை என்று ஆங்கிலேயர்கள் அறிமுகப்படுத்திய கல்வியின் குறைகளைப் பட்டியலிடுகிறார். இவற்றுக்கு மாற்றாக இந்திய மன்னர்கள், அறிஞர்கள், புலவர்கள், கவிஞர்கள் ஆகியோரைப் பற்றி இந்திய மாணவர்கள் கற்க வேண்டும், இந்தியாவின் வரலாறு அனைவருக்கும் கற்பிக்கப்பட வேண்டும் என்று முழங்கினார் பாரதியார்.

முழுமையான வளர்ச்சிக்கான கல்வி

இந்தக் கருத்துகளை வைத்து தன் நாடு, தன் இனம், தன் மொழி மட்டுமே சிறந்தது என்னும் குறுகிய பார்வை கொண்ட அடிப்படைவாதிகளின் பட்டியலில் பாரதியாரை இணைத்துவிட முடியாது. எழுத்து, படிப்பு, கணக்கு, சரித்திரப் பாடங்கள், பூமி சாஸ்திரம் (புவியியல்), சமயக் கல்வி, ராஜ்ய சாஸ்திரம் (சமூகவியல்), பொருள் நூல் (பொருளாதாரம், வணிகம்), பெளதிக சாஸ்திரம் (அறிவியல் கல்வி), தொழில் கல்வி, சரீரப் பயிற்சி (உடற்கல்வி) என ஒரு மாணவரின் முழுமையான வளர்ச்சிக்குத் தேவையான அனைத்தையும் உள்ளடக்கியதாக இருந்தது பாரதி முன்மொழிந்த கல்வித் திட்டம். அதோடு மேலை நாடுகளில் நிகழ்ந்துள்ள அறிவியல் முன்னேற்றங்களும் புதிய தொழில்நுட்பங்களும் தமிழிலேயே கற்பிக்கப்படும் அளவுக்கு தமிழ் மொழிபெயர்ப்புகளும் கலைச்சொல்லாக் கங்களும் நிகழ்த்தப்பட வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்திவந்திருக்கிறார்.

இப்புவியில் 39 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த பாரதி தேச பக்தி, சாதி எதிர்ப்பு, ஆண்-பெண் சமத்துவம், நவீனத் தமிழ் மொழி வளர்ச்சி ஆகிய தளங்களில் அளப்பரிய பங்களிப்பு ஆற்றியுள்ளார். இவற்றோடு கல்வியின் முக்கியத்துவத்தையும் எப்படிப்பட்ட கல்வி கற்பிக்கப்பட வேண்டும் என்பது குறித்தும் அவர் வெளிப்படுத்திய கருத்துகள், பாரதியின் பன்முக ஆளுமையை வியந்து போற்றுவதற்கான இன்னுமொரு காரணத்தைத் தருகின்றன.

(பாரதியாரின் நூறாவது நினைவு நாள்: செப். 11)

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

4 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்