அண்ணா பல்கலைக்கழகம் நடத்திய தேர்வில் தற்போதைய பாடத்திட்டம், அரியர் பாடங்களுக்குத் தேர்வெழுதியவர்களில் எழுபது சதவீதத்தினர் தேர்ச்சி பெறவில்லை என்று தெரியவந்துள்ளது. தேர்வில் முறைகேடு, காப்பி அடித்தல், கேமராவைப் பார்த்து எழுதவில்லை என்பது போன்ற பல காரணங்களால் அவர்கள் தேர்ச்சி பெறவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
புத்தகங்களையும் வலைத்தளங்களையும் பார்த்து விடை எழுதலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் தற்போது அறிவித்திருந்தாலும், வேறு சிலவற்றைத் தடை செய்திருக்கிறது. குழு விவாதம், வாட்ஸ் அப்பின் மூலம் தெரிந்தவரிடம் விடை அறிவது போன்றவை நடப்பதாக சந்தேகம் இருந்தால்கூடத் தேர்ச்சி அடையவில்லை என்றோ, முடிவு நிறுத்திவைக்கப்பட்டிருக்கிறது (வித்ஹெல்டு) என்றோ அறிவிக்கப்படலாம். நீங்கள் தேர்வு எழுதும்போது மட்டுமேதான் கண்காணிக்கப்படுகிறது என்று நினைக்க வேண்டாம். நீங்கள் தேர்வு எழுதுவது காணொலி பதிவுசெய்யப்பட்டு, பிறகு அதைப் போட்டுப் பார்த்தும் ஒரு முடிவுக்கு வரலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
அண்ணா பல்கலைக்கழகம் அண்மையில் அறிவித்த பட்டியலின்படி தேர்ச்சி பெறாத மாணவர்களில் கணிசமானவர்கள் தேர்வின்போது தவறுகளில் ஈடுபட்டிருக்க வாய்ப்பு உண்டு. என்றாலும், சில நடைமுறைகளைக் கடைப்பிடிக்காததால் காப்பி அடித்திராத மாணவர்களும் பலியாடுகளாகியிருக்கக் கூடும்.
எந்தப் பல்கலைக்கழகத்தின் இணையவழித் தேர்வாக இருந்தாலும் தேர்வு எழுதும் மாணவர்கள் சிலவற்றில் கவனம் செலுத்த வேண்டும். அந்த அம்சங்கள்:
# ஒத்திகைத் தேர்வில் (Mock/Practice test) தவறாமல் கலந்துகொள்ளுங்கள். தெளிவு கிடைக்கும்.
# தேர்வு தொடங்குவதற்குப் பத்து நிமிடங்களுக்கு முன்பாக லாக் இன் செய்ய வேண்டும் என்பது தேர்வு விதி. முன்னெச்சரிக்கையாக இருபது நிமிடங்களுக்கு முன்பாக இதைச் செய்துவிடுங்கள்.
# கைக்கடிகாரத்தை அடிக்கடி பார்ப்பதுகூடச் சந்தேகத்துக்கு வழிவகுக்கலாம். தேர்வுக் கேள்விகள் தோன்றும் திரையிலேயே மேல் வலது மூலையில் தேர்வு முடிய இன்னும் எவ்வளவு நேரம் இருக்கிறது என்பதைக் காட்டும் நேரங்காட்டி (countdown timer) இருக்கும். நேரத்தை அறிய அது உதவும்.
# தேர்வு எழுதும்போது வேறு யாரும் அந்த அறைக்குள் நுழையக் கூடாது என்பதைக் கட்டாயமாக்கியிருக்கிறார்கள்.
# முக்கியமாக மாணவரின் பார்வை எதன் மீதிருக்கிறது (eye contact) என்பதில் கவனம் செலுத்துவார்கள்.
# வசதியாக உட்கார்ந்துகொள்ளுங்கள். கணினியை வசதியான கோணத்தில் வைத்துக்கொள்ளுங்கள். தேர்வு முடியும்வரை உங்கள் கணினியை வேறு கோணத்தில் வைத்துக்கொள்ளும் தேவை ஏற்படக் கூடாது.
# ஒருவேளை கைபேசி மூலம் இணையவழித் தேர்வை எழுதுகிறீர்கள் என்றால் உங்கள் கைபேசியில் ‘Do Not Disturb’ வசதியை ஆன் செய்து வையுங்கள். இந்த வசதியை செட்டிங்ஸ்-சவுண்ட் ஆகிய பாதையில் சென்றடையலாம்.
# தேர்வு தொடங்கிய பத்து நிமிடங்களுக்குள் நீங்கள் லாக் இன் செய்தால்தான் உண்டு. அதற்குப் பிறகு அந்த வாய்ப்பு உங்களுக்கு மறுக்கப்படும். அதேபோல் தேர்வைச் சீக்கிரம் எழுதி முடித்தாலும் ஒரு மணி நேரத்துக்கு முன்பாகப் புறப்படக் கூடாது. ‘End Test’ என்கிற பட்டனை அழுத்தினால்தான், உங்கள் பதில்கள் போய்ச் சேரும். தேர்வு நேரம் முடியும்போதுதான் இந்த பட்டன் திரையில் தோன்றும்.
# தேர்வு எழுதும்போது மட்டும் முகக்கவசம் அணியாமல் இருப்பது நல்லது.
# தேர்வு எழுதும்போது திரையில் உள்ள வட்டத்துக்குள் உங்கள் புகைப்படம் தொடர்ந்து காணப்பட வேண்டும். இந்த வட்டத்தை உங்கள் வசதிக்கு ஏற்ப திரையின் எந்த பகுதிக்கும் மாற்றிக்கொள்ளலாம்.
# உங்கள் கணினியில் உள்ள மென்பொருள் - வன்பொருள் இரண்டும் தேர்வுக்கு உகந்ததாக இருக்கின்றனவா என்பதை முன்னதாகவே உறுதிசெய்துகொள்ளுங்கள்.
# கணினிக்கான சார்ஜரை அருகில் வைத்துக்கொள்ள மறக்க வேண்டாம்.
# தேர்வு நேரத்தில் உங்கள் மின்னஞ்சலில் எந்த அறிவிப்பும் (Notifications) இடம்பெறாமல் இருப்பதற்கு, அந்த வசதியைத் தற்காலிகமாக அணைத்துவிடுங்கள். இல்லையென்றால் இந்த அறிவிப்புகள் தேர்வு எழுதுவதில் இருந்து உங்களைத் திசைதிருப்பும்.
# தேர்வின்போது அமைதியான சூழலை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். வேறு அறையில்கூட டி.வி., இயக்கப்பட வேண்டாம்.
# ஹெட்போன் மாட்டிக்கொண்டோ இசையை ரசித்துக்கொண்டோ தேர்வு எழுத அனுமதி கிடையாது. அப்போது நீங்கள் ஏமாற்றுவதாகத் தேர்வுக் கண்காணிப்பாளர் எண்ணுவதற்கு சாத்தியம் உண்டு.
# உங்கள் விடைகளை அவ்வப்போது ‘ஸேவ்’ செய்து கொள்ளுங்கள். தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டால் கைகொடுக்கும்.
# தொழில்நுட்பப் பிரச்சினை ஏற்பட்டால் பதற்றமடைய வேண்டாம். சிக்கலைப் பல்கலைக்கழக / கல்லூரிப் பிரதிநிதியிடம் தெளிவாகக் கூறுங்கள். உங்கள் கணினியில் தோன்றும் அறிவிப்புகளைத் தெளிவாகச் சொல்லுங்கள். அப்போது ஒரு ‘ஸ்க்ரீன்ஷாட்’ எடுத்து வைத்துக்கொண்டால் உதவிகரமாக இருக்கும்.
# சில தேர்வுகளில் வலைத்தளங்களைப் பார்த்துக்கூட விடையளிக்க அனுமதிக்கிறார்கள். அப்படி இல்லாதபோது, ஏதாவது கேள்விக்கு விடை தெரியவில்லையென்றால் உடனடியாக கூகுள் தேடுபொறியைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று நினைக்க வேண்டாம். தேர்வு எழுதும் பக்கத்தை விட்டு வெளியேறினால் மீண்டும் அதை அடைவது இயலாததாக இருக்கக்கூடும். அப்படிப்பட்ட ‘ஆப்’கள் பயன்படுத்தப்பட்டிருக்க வாய்ப்பு உண்டு.
# கேள்வித்தாளில் உள்ள ஒரு கேள்வியைத் தற்செயலாகப் படிக்காமல் விடுவதைவிட, கணினியில் உள்ளவற்றில் ஏதாவது கேள்வியைப் படிக்காமல் விட்டுவிட சாத்தியம் அதிகம். எனவே, அதிக கவனம் தேவை.
# விடைகளை எழுதி முடித்தபின் Submit Key-யை மறக்காமல் அழுத்துங்கள். சரியாக அழுத்தவில்லையோ என்கிற சந்தேகம் வந்தால் மற்றொரு முறை அழுத்துங்கள், தவறில்லை.
அண்ணா பல்கலைக்கழகம் அண்மையில் அறிவித்த பட்டியலின்படி தேர்ச்சி பெறாத மாணவர்களில் கணிசமானவர்கள் தேர்வின்போது தவறுகளில் ஈடுபட்டிருக்க வாய்ப்பு உண்டு.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
2 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago