பழகப் பழக சைக்கிள் ஓட்டுவது எளிதாகிவிடுவதுபோல், சமைப்பதும் எளிதாகிவிடும். ஆனால், சமைத்த இடத்தைச் சுத்தமாக வைத்திருப்பது தனிக் கலை. சமைத்த இடத்தைச் சுத்தம் செய்யும் போது பெரிய குப்பையைக்கூட எளிதாகக் கண்டறிந்துவிடலாம். தாளிப்பதற்கு இட்ட குட்டிக் குட்டிக் கடுகுகள் பொரிந்துக் கிடக்கும். தாளிப்பதற்காக வடைசட்டியில் கடுகை இடும்போது அது எகிறிக் குதித்துத் தப்பிக்க முயலும். நம் வாய்க்குள் போவதற்குப் பதிலாக, குப்பைக்கே போய்விடலாம் என்று முடிவெடுத்து விடுகிறதுபோல.
ஒவ்வொரு முறை சமைத்த பிறகு சுத்தம் செய்யும்போது, எண்ணெய்யில் போட்ட கடுகு எப்படிப் பொரிந்துத் தாவுகிறது என்று யோசித்துக் கொண்டிருப்பேன். அதன் பின்னால் உள்ள அறிவியலைப் புரிந்துகொள்வது எளிதாகத்தான் இருந்தது. நாம் பயன்படுத்தும் கடுகுக்குள் சற்று ஈரப்பதம் இருக்கும். எண்ணெய்யில் கடுகை இட்டுத் தாளிக்கும்போது, கடுகு சூடேறி அதற்குள் இருக்கும் நீர் ஆவியாகும். ஆவியாகும் நீர் வெளியே வர முயலும். கடுகின் தோலைப் பிய்த்துக்கொண்டு நீராவி வெளியே வருவதால் கடுகு வெடிக்கிறது. நமக்குக் கேட்கும் 'பட்... பட்...' என்கிற சத்தம்கூட ஆவியாகி வெளியே வரும் நீர், எண்ணெய்யில் படுவதால்தான். சூடான எண்ணெய்யில் நீர்த்துளிகள் படும்போது சத்தம் வருமல்லவா, அதுபோலத்தான்.
ஆனால், எல்லாக் கடுகும் பாத்திரத்தைவிட்டு வெளிநடப்பு செய்வதில்லையே! ஒன்றிரண்டு கடுகுகள் வெடித்தாலும், அவை பாதியாகப் பிய்ந்து போவதில்லை. உருண்டையாகத்தான் இருக்கின்றன. ஆக, கடுகுக்குள் இருந்த நீராவி வெளியே வரும்போது, கடுகை மொத்தமாகச் சிதைத்துவிடுவதில்லை. ஒரு சிறு துவாரத்தை இட்டுக்கொண்டு நீராவி வெளியேறுகிறது. எனவே, எந்தக் கடுகு எவ்வளவு பெரிய துவாரம் இட்டிருக்கிறது என்பதைப் பொறுத்தே கடுகு வெளியேறித் தப்பிக்குமா, இல்லை நம் உணவுத் தட்டுக்கு வருமா என்பது முடிவாகிறது.
கடுகில் ஏற்படும் துவாரம் சற்றுப் பெரிதாக இருந்தால், விரைவில் நீராவி வெளியேறிவிடும், கடுகால் பறக்க முடியாது. ஆனால், நுண்ணிய துவாரமாக இருந்தால், நீராவி சிறிது சிறிதாக வெளியேறும். அப்படி வெளியேறும் நீராவியால் தனக்குக் கிடைக்கும் உந்துவிசையால் முன்னேறி கடுகு மேலே பறக்கும். கடுகுக்குள் இருக்கும் நீராவி முழுவதும் வெளியேறிவிட்டால், கடுகுக்கு மேற்கொண்டு உந்துவிசை கிடைக்காது. அப்போது கடுகு கீழே விழுந்துவிடும். இவ்வளவு சாகசம் செய்யும் ஒரு கடுகின் எடை வெறும் இரண்டே மில்லிகிராம்தான். அப்படி யென்றால் 100 கிராம் கடுகு பாக்கெட்டுக்குள் 50,000 கடுகுகள் இருக்கலாம். நேரமிருப்பவர்கள் ஒவ்வொன்றாக எண்ணிப் பார்க்கலாம்!
சின்னச்சிறு கடுகுக்கும், வானைத் தொடும் ஏவுகணைக்கும் ஒரு தொடர்புண்டு. ஓர் ஏவுகணை மேலே செல்ல வேண்டுமென்றால், எரிபொருள் தேவை. ஏவுகணை ஏவப்படும்போது எரிபொருள் எரிக்கப்படும். அப்போது வெளியாகும் வாயுக்களால் அழுத்தம் உண்டாகி, அதன்மூலம் கிடைக்கும் உந்துவிசையைப் பயன்படுத்தி ஏவுகணை முன்னேறிப் போகிறது. ஆக, வெடித்துப் பறக்கும் கடுகும் ஏவுகணையும் ஒரே வகையைச் சேர்ந்தவைதாம். சொல்லப்போனால் குட்டிக் குட்டி உருண்டை வடிவ ஏவுகணைகளைத்தான் நாம் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறோம், என்று காலரை தூக்கிவிட்டுக் கொள்ளலாம்.
இ. ஹேமபிரபா
இஸ்ரேல் டெக்னியன் தொழில்நுட்ப நிறுவனத்தில் பொருள்சார் அறிவியல் துறை ஆராய்ச்சியாளர். தமிழில் அறிவியல் சார்ந்து தொடர்ந்து எழுதிவருபவர். கரோனா வைரஸ் தொற்றுப்பரவல் குறித்த அறிவியல் பின்னணிகளை விளக்கி அவர் எழுதிய 'இதுதான் வைரல்' நூல் சமீபத்தில் வெளியானது.
தொடர்புக்கு: hemazephyrs@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
51 mins ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
4 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago