வெற்றி முகம்: சேலம் இளைஞரின் தேசிய வெற்றி!

By ப்ரதிமா

எந்தவொரு தேர்வாக இருந்தாலும் தேர்வு முடிவு வெளியாகும் நேரத்தில் முதல் மதிப்பெண் பெற்றவர்கள் கொண்டாடப்படுவது வழக்கம். கடந்த வாரம் பட்டயக் கணக்காளர் தேர்வு முடிவுகள் வெளியானதையொட்டி அதிகம் உச்சரிக்கப்பட்ட பெயர்களில் இசக்கிராஜின் பெயரும் ஒன்று. ஆனால், இதை வழக்கமான கொண்டாட்டமாகக் கடந்துவிட முடியாது. காரணம், அவர் தேசிய அளவில் முதலிடம் பிடித்திருக்கிறார் என்பது மட்டுமல்ல; அவர் எத்தகைய பின்புலத்தைச் சேர்ந்தவர் என்பதும் கொண்டாட்டத்தின் மகத்துவத்தைக் கூட்டுகிறது.

இசக்கிராஜ் திருநெல்வேலியில் பிறந்தவர். அப்பா ஆறுமுகம் தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார்; அம்மா கோமதி வீட்டு நிர்வாகத்தைக் கவனித்துக்கொள்கிறார். அப்பாவின் வேலை காரணமாக இசக்கிராஜுக்கு ஐந்து வயதானபோது சேலத்துக்குக் குடிபெயர்ந்தனர். அரசு உதவிபெறும் பள்ளியில் பத்தாம் வகுப்புவரை தமிழ்வழியில் படித்தார் இசக்கிராஜ். தன்னைச் சுற்றிப் பலரும் பொறியியல், மருத்துவக் கனவில் இருக்க, இசக்கிராஜுக்கோ அறிவியலில் ஆர்வமில்லை. அறிவியலைத் தவிர்க்கிறவர்கள் வணிகவியல் பிரிவில்தானே சேர்வார்கள்? இசக்கிராஜும் தன் விருப்பத்தைப் பெற்றோரிடம் தெரிவித்தார். மகனின் விருப்பத்துக்கு அவர்கள் செவிசாய்க்க, தனியார் பள்ளியில் பதினோராம் வகுப்பில் சேர்ந்தார். அப்போது ஆங்கிலவழிக் கல்வியைத் தேர்ந்தெடுத்தார்.

“படிக்கப்போவது சி.ஏ. என்று முடிவு செய்தபின் அதற்கேற்ப நம்மைத் தகுதிப்படுத்திக்கொள்ள வேண்டுமல்லவா? அதனால்தான் ஆங்கிலவழிக் கல்வியைத் தேர்ந்தெடுத்தேன். ஆங்கில நாளிதழ் வாசிப்பு ஓரளவு கைகொடுத்தாலும் அந்த வயதில் கொஞ்சம் திணறித்தான் போனேன். படிப்பு, மொழி இரண்டுமே புதியவை” என்று சொல்லும் இசக்கிராஜ், தன் முயற்சியால் அதையும் வெற்றிகரமாகக் கடந்துவந்திருக்கிறார்.

“ஆங்கிலச் செய்தி அலைவரிசைகளைப் பார்ப்பேன். ஓரளவுக்கு வளர்ந்த பிறகு இணையம்வழியாக ஆங்கிலத்தைக் கற்றேன். எட்டு ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலை வேறு. இப்போது ஆங்கிலத்தைக் கற்க ஆயிரக்கணக்கான வீடியோக்கள் யூடியூபில் கொட்டிக்கிடக்கின்றன. மாணவர்கள் அவற்றைப் பயன்படுத்தித் தங்கள் அறிவைப் பெருக்கிக்கொள்ளலாம்” என்று சொல்கிறவரின் ஆங்கிலத்தில் தங்குதடை ஏதுமில்லை.

முதல் முயற்சி வெற்றி

பிளஸ் டூ முடித்ததும் கல்லூரியில் சேராமல், சி.ஏ. பயிற்சி வகுப்பில் சேர்ந்தார். மூன்று நிலைகள் கொண்ட பட்டயக் கணக்காளர் படிப்பில் மூன்று நிலைகளிலுமே முதல் முயற்சியிலேயே தேர்வானார்.

“சி.ஏ. படிப்பில் முக்கியமானது மூன்று வருட ‘ஆர்ட்டிகிள்ஷிப்’. படிப்புடன் அனுபவமும் சேர்ந்தது இது. இதைச் சரியான விதத்தில் செயல்படுத்தினால், அதுவே மிகப்பெரிய பலம். சேலத்தில் செந்தில் என்பவரது நிறுவனத்தில் அந்தப் பயிற்சியை முடித்தேன். பிறகு சென்னையில் பயிற்சி வகுப்பில் சேர்ந்தேன். அதைத் தொடர்ந்து ஆறு மாதப் பயிற்சிக்குப் பிறகு 2020 டிசம்பரில் தேர்வெழுதினேன்” என்று சொல்லும் இசக்கிராஜ், தன் ஆறு ஆண்டுகால உழைப்புக்குப் பரிசாக சி.ஏ. தேர்வில் (பழைய பாடத் திட்டம்) இந்திய அளவில் முதலிடம் பிடித்திருக்கிறார்.

சி.ஏ. படிப்பு என்பது மற்ற படிப்புகளைப் போலக் குறிப்பிட்ட காலத்துடன் முடித்துவிட்டுப் பட்டம் பெற்றுவிடுவதல்ல. அதில் வெல்ல நீண்ட காலக் கடின உழைப்புடன் பொறுமையும் தேவை. “தொடக்கத்தில் எனக்கும் கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. எப்படி முடிக்கப் போகிறோமோ என்றும் தோன்றியது. எதையும் சாதிக்க வேண்டும் என்பதை இலக்காக வைத்துக்கொள்ளவில்லை. என்னால் எவ்வளவு சிறப்பாகச் செய்ய முடியுமோ, அவ்வளவு சிறப்பாகச் செய்வதுதான் என் இலக்கு என்று முடிவெடுத்தேன்.

பாடத்தில் ஈர்ப்பு வந்தபிறகு எல்லாமே சீரானதுபோல் இருந்தது. சில நேரம் சிறுசிறு சவால்கள் வரத்தான் செய்தன. ஆனால், அவற்றையெல்லாம் அந்தந்த நேரத்துக்குச் சமாளித்துவிடுவேன், அவற்றை சுமந்து கொண்டு திரிவதில்லை. என்ன நடந்தபோதும் என்னை நான் வருத்திக்கொண்டதில்லை” என்று இயல்பாகப் புன்னகைக்கிறார் இசக்கிராஜ். பந்தயக் குதிரைபோல் மூச்சிரைக்க ஓடுகிறவர்களின் பதற்றத்தைத் தொலைத்த இந்த இயல்புதான், அவரை எளிதாக வெல்லவும் வைத்திருக்கிறது.

“சி.ஏ. படிப்பும் தொழில்முறைப் படிப்புதான். இப்போது மக்களின் கவனம் இதன் பக்கமும் திரும்பத் தொடங்கியிருக்கிறது” என்று சொல்லும் இசக்கிராஜ், இந்தத் துறையும் மற்ற சேவைத் துறைகளைப் போலவே நாட்டின் வளர்ச்சியில் முக்கியப் பங்குவகிக்கிறது என்கிறார். “கணக்குத் தணிக்கை என்பது தனிப்பட்ட ஒருவரது வளர்ச்சியைச் சார்ந்தது அல்ல. நாட்டைத் தாங்கிப் பிடிக்கும் பொருளாதாரத் தூணைக் கட்டமைக்கும் முக்கியமான பணியை பட்டயக் கணக்காளர்கள் செய்கிறார்கள். காரணம் ஒவ்வொரு நிறுவனத்தின் வரவு செலவைத் தணிக்கைசெய்து இவர்கள் தருகிற முடிவைப் பொறுத்துத்தான் சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கான முதலீடுகள் அமையும்” என்கிறார்.

அத்துடன், “மேல்தட்டு மக்கள் மட்டுமல்லாமல் அனைத்துத் தரப்பு மக்களுக்கு மான படிப்பு இது. நடுத்தர மக்களால் சமாளித்துவிட முடிகிற அளவுக்குத்தான் செலவாகும். மாணவர்கள் தன்னிச்சையாகக் கற்கும் வாய்ப்பும் இதில் உண்டு” என்று சொல்வதுடன், தானே அதற்குச் சான்றாகவும் இருக்கிறார் இசக்கிராஜ்!

ஒரே வீட்டில் இரண்டு வெற்றி!

பழைய பாடத்திட்டத்தில் சென்னையைச் சேர்ந்த ஆர்.பிரியா, தேசிய அளவில் இரண்டாம் இடத்தையும் ஆவடியைச் சேர்ந்த ஜனனி ஐந்தாம் இடத்தையும் பிடித்திருக்கின்றனர். ஜனனியின் தங்கை ஹரிணி, முதல் முயற்சியிலேயே சி.ஏ. தேர்வில் வெற்றிபெற்றிருக்கிறார். “இது எனக்கு முதல் முயற்சியல்ல. ஆனால், ஒவ்வொருமுறை தோல்வியைத் தழுவியபோதும் அடுத்த முறை நிச்சயம் வெல்வோம் என்று முயற்சியைக் கைவிடாமல் இருந்தேன். இணையம்வழியாக நிறைய கற்றேன். அதுவும் எனக்குக் கைகொடுத்தது” என்கிறார் ஜனனி. சிறு வயது முதலே இந்தச் சகோதரிகளுக்கு எண்கள் மீது ஆர்வம் அதிகமாம். அதுதான் அவர்களை இந்தத் துறையைத் தேர்ந்தெடுக்க வைத்ததுடன், அதில் வெற்றிபெறவும் வைத்திருக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE