சேதி தெரியுமா?

By செய்திப்பிரிவு

ஜன.7: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் ஆதரவாளர்கள் தலைநகர் வாஷிங்டனில் உள்ள அமெரிக்க நாடாளுமன்ற கட்டடத்துக்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர். இந்தச் சம்பவத்தையடுத்து அமெரிக்க அதிபருக்கு எதிராக பதவி நீக்கத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

ஜன.9: உலகின் செல்வந்தர்களை தரவரிசைப்படுத்தும் புளூம்பெர்க் குறியீட்டில் அமேசான் நிறுவனரான ஜெப் பெசோஸை பின்னுக்குத் தள்ளி எலான் மஸ்க் உலகின் செல்வந்தராக உருவெடுத்தார்.

ஜன.10: ஐ.நா. அவையில் தீவிரவாத எதிர்ப்புக் குழுவுக்கு 2022-ஆம் ஆண்டில் தலைமை வகிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடைசியாக இந்தக் குழுவுக்கு 2011-12-ஆம் ஆண்டில் இந்தியா தலைமைவகித்திருந்தது.

ஜன.12: மறுஉத்தரவு வரும்வரை 3 புதிய வேளாண் சட்டங்களுக்கும் இடைக்காலத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. புதிய வேளாண் சட்டங்கள் தொடர்பாகப் பேச்சுவார்த்தையின் மூலமாக தீர்வுகாணவும், வேளாண் சட்டங்களை ஆய்வுசெய்து அறிக்கை அளிக்கவும் ஒரு சிறப்பு குழுவையும் நீதிமன்றம் அமைத்தது.

ஜன.15: வலைப்பயிற்சிப் பந்துவீச்சாளராகச் சென்று ஒரு கிரிக்கெட் தொடரில் டெஸ்ட், ஒரு நாள், டி 20 என மூன்று வடிவ கிரிக்கெட் போட்டிகளிலும் அறிமுகமான முதல் இந்திய வீரர் என்ற பெருமையைத் தமிழகத்தைச் சேர்ந்த சின்னப்பம்பட்டி டி. நடராஜன்
படைத்தார்.

ஜன.16: நாடு முழுவதும் கோவிஷீல்டு, கோவேக்சின் கரோனா தடுப்பூசி இடும் திட்டம் தொடங்கப்பட்டது. இதன்படி இந்தியா முழுவதும் 3,006 மையங்களில் தடுப்பூசி இடும் பணி நடைபெறும். தமிழகத்தில் மதுரையில் இத்திட்டம் தொடங்கப்பட்டது. தமிழகத்தில் 166 மையங்களில் கரோனா தடுப்பூசி இடும் பணி நடத்தப் படும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE