ஊரடங்கு காலம் முடிந்து பள்ளி, கல்லூரிகள் எப்போது திறக்கப்படும் என்ற கேள்விக்குப் பதில் கிடைக்காத நிலையே தொடர்கிறது. கல்லூரிகள், பள்ளிகள் தொடங்கப்படாத நிலையில், கல்வி சார்ந்த பல விஷயங்களை இணையவழியில் கற்றுத்தருவதற்கு கான் அகாடமியும் உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களும் தயாராக இருக்கின்றன. தகவல் ஏழை, தகவல் பணக்காரன் என்னும் பழங்காலச் சிந்தனைகளைத் தவிடுபொடியாக்கியதில் புத்தாயிரத்தின் தொடக்கத்திலிருந்தே இணையத்தின் பங்கு அபரிமிதமாக இருந்தது. அது இந்த ஊரடங்கு காலத்தில் அறிவு புதிய உச்சத்தைத் தொட்டிருப்பதன் விளைவுதான் இணையவழிக் கல்வி. அந்த வகையில் இணையத்தில் கல்வியைப் பெற சில வழிகள்:
கம்ப்யூட்டர் அனிமேஷன்
‘லயன் கிங்’ முதல் ‘அலிபாபா’ வரை அனிமேடட் திரைப்படங்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். அனிமேடட் திரைப்படங்களுக்கு வர்த்தகரீதியான சந்தைமதிப்பு உயர்ந்துகொண்டேதான் வருகிறது. உலகின் பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் அனிமேஷன் திரைப்படங்களை எடுப்பதில் ஆர்வம்காட்டி வருகின்றன. வெறும் ரசிகனாக இருக்கும் உங்களை, படைப்பாளியாக்கும் படிப்புதான் கம்ப்யூட்டர் அனிமேஷன். முப்பரிமாணத் தோற்றத்தில் நீங்கள் விரும்பும் உருவங்களை உருவாக்க உதவக்கூடியது இந்தப் படிப்பு. பிக்ஸார் அனிமேஷன் ஸ்டுடியோவுடன் இணைந்து கான் அகாடமி வழங்குகிறது. அடிப்படையான கணிதம், அறிவியல் ஆகியவற்றுடன் ஓவியம் வரையும் திறனும் உங்களுக்கு இருந்தால் போதும். அனிமேஷன் திறன்களை இந்தப் படிப்பு மூலம் வளர்த்துக்கொள்ளலாம்.
இசையின் தொடக்கம்!
‘இளைய நிலா பொழிகிறதே’ பாடலின் இறுதியில் வரும் கிதார் கருவியின் இனிமையால் வசப்பட்டே கிதார் வாசிப்பதற்குக் கற்றுக்கொள்ளத் தொடங்கினேன் என்று கூறியிருக்கிறார் ‘கிதார்’ பிரசன்னா. உங்களுக்கும் கிதார் கற்றுக்கொள்ள வேண்டுமென்ற எண்ணம் இருந்தால், அமெரிக்காவின் புகழ்பெற்ற பெர்க்லி காலேஜ் ஆஃப் மியூசிக், கோர்ஸரா கல்வித் தளத்தில் நடத்தும் ‘கிதார் ஃபார் பிகினர்ஸ்’ இணையவழிப் படிப்பில் சேரலாம். கிதார் வாசிப்பில் இருக்கும் நுட்பமான விஷயங்கள் பால பாடத்தில் தொடங்கி நடத்தப்படுகின்றன. இனிமையான உங்களின் கிதார் இசை, இளமையில் தொடங்குவதற்கும் இந்த வகுப்பில் வழியிருக்கிறது.
கோடிங் எனும் கலை!
உங்களின் கலை சார்ந்த படைப்புகள் எதுவாக இருந்தாலும், அதைக் கணினிக்குத் தெரிவிக்கும் மொழிக்குப் பெயர் ‘கோடிங்’. இந்தக் கணினி மொழியை code.org உலகம் முழுவதும் உள்ள மாணவர்களுக்குக் கற்றுத்தருகிறது. மாணவர்களுக்கு ஒருமணி நேரப் பயிற்சியின் மூலம், இது குறித்த அறிமுகம் கற்றுத்தரப்படுகிறது. இதன்மூலம் மாணவர்கள் கணினி அறிவியல் சார்ந்த நிரல்களை எழுதுவது, படங்களை வரைவது, இணையப் பக்கங்களை உண்டாக்குவது போன்ற பணிகளைச் செய்ய முடியும். கான் அகாடமியின் இணையதளம் வழியே இந்த கோடிங் படிப்பைப் படிக்கலாம்.
பிணக்கில்லாத கணக்கு
கணிதம் எப்போதுமே பலருக்குக் கடினமாகத் தோன்றுவதற்குக் காரணம், அந்தப் பாடத்தைத் தவறான முறையில் அணுகுவதுதான் என்பதை விளக்குவதுடன், உங்களைக் கணிதப் பாடத்தில் திறன் மிகுந்தவர்களாக ஆக்கும் வழியை ‘எடெக்ஸ்’ கல்வித் தளம் மூலம் தருகிறது அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகம். கணிதத்தை எளிமையாகக் கற்றுக்கொள்ளும் வழிகளைக் கற்றுத்தருவதை இலவச சேவையாகத் தந்தாலும், அதில் உங்களின் திறனைக் கண்டறியும் தேர்வை மட்டும் குறிப்பிட்ட கட்டணத்தைச் செலுத்தி எழுதலாம். அதில் வெற்றிபெற்றால் சான்றிதழும் கிடைக்கும்.
எழுத்தாளராக வேண்டுமா?
அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணப் பல்கலைக்கழகம், ‘கோர்ஸரா’ எனும் கல்வித் தளத்தின் மூலம் உங்களின் எழுத்தாளர் கனவை நிறைவேற்றுகிறது. இதற்காகவே ஒரு பயிலரங்கை நடத்துகிறது. பயிற்சியின் தொடக்கத்திலிருந்து முடிவுவரை திறன் வாய்ந்த கதைசொல்லியாக உருவாக்கும் பயிற்சிகளைப் படிப்படியாக அளிக்கிறது. பயிற்சியின் முடிவில் ஒரு நாவலை எழுதி முடித்த கதாசிரியராக நீங்கள் இருப்பீர்கள்.
வரலாற்றுக்குப் புதிய பாதை
மாமல்லபுரத்தின் கவின்மிகு சிலைகளைப் பார்வையிடும்போது பல்லவர்களின் வரலாற்றுக் காலம் நினைவுக்கு வருவதுபோல், நம்மைச் சுற்றியுள்ள கலைப் பொருள்கள், ஓவியங்கள், வரலாற்று மாதிரிகளிலிருந்து வரலாற்றைப் பார்க்கும் படிப்பை அமெரிக்காவின் புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகம் வழங்குகிறது. இந்தப் படிப்பு வரலாற்றை மேலும் சிறப்பாகப் புரிந்துகொள்ளவும் தொல்லியல் சார்ந்த படிப்புகளுக்கும் உதவியாக அமையும்.
நம்மைச் சுற்றியுள்ள பொருள்களுக்கும் வரலாற்றுக்கும் இடையேயான தொடர்பின் எல்லைகளை இந்தப் படிப்பு குறைக்கிறது.
மூன்று கலைகளின் சங்கமம்
கட்டிடக் கலை, தொல்லியல், வானியல் ஆகிய மூன்று படிப்புகளையும் உள்ளடக்கியது ஆர்கியோ அஸ்ட்ரானமி (Archaeoastronomy). கட்டிடக் கலை, தொல்லியல், வானியலில் இருக்கும் பொதுவான அம்சங்களை இந்தப் படிப்பு விவரிக்கிறது. இந்தப் படிப்பை கோர்ஸரா கல்வித் தளத்தின் வழியாக இத்தாலியின் பாலிடெக்னிகோ டி மிலானோ (Politecnico di Milano) இணையவழியில் வழங்குகிறது. ஸ்பானிஷ் படிக்க விருப்பமா? அயல் மொழிகள் ஏதாவது கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைத்தால், ஸ்பானிஷ் மொழியைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பை வழங்குகிறது ஸ்பெயினின் யுனிவர்சிடேட் பாலிடெக்னிகா டே வாலன்ஸியா, எடெக்ஸ் கல்வித் தளத்தின் வழியாக ஸ்பானிஷ் மொழியைக் கற்றுக்கொள்ளும் சேவையை அது வழங்குகிறது.
ஸ்பானிஷ் படிக்க விருப்பமா?
அயல் மொழிகள் ஏதாவது கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைத்தால், ஸ்பானிஷ் மொழியைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பை வழங்குகிறது ஸ்பெயினின் யுனிவர்சிடேட் பாலிடெக்னிகா டே வாலன்ஸியா, எடெக்ஸ் கல்வித் தளத்தின் வழியாக ஸ்பானிஷ் மொழியைக் கற்றுக்கொள்ளும் சேவையை அது வழங்குகிறது.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago