ச.கோபாலகிருஷ்ணன்
கரோனா ஊரடங்கு முடிந்து 2020-21 கல்வி ஆண்டு எப்போது தொடங்கும் என்று தெரியவில்லை. ஆனால், தமிழக மாநிலப் பாடத்திட்டத்தின்கீழ் இயங்கும் பள்ளிகள் மேல்நிலை (11, 12) வகுப்புகளில் மிகப் பெரிய மாற்றத்துடன் தொடங்கப்போகின்றன. இதுவரை மொழிப்பாடம், ஆங்கிலம், நான்கு துறைசார் பாடங்களை உள்ளடக்கிய முதன்மைப் பாடங்கள் (core subjects) என மொத்தம் ஆறு பாடங்களைப் படித்துவந்தனர்.
இனி நான்கு துறைசார் பாடங்களை மூன்றாகக் குறைத்துக்கொள்வதற்கான வாய்ப்பு மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. மாணவர்கள் இந்த புதிய நடைமுறையைத் தேர்ந்தெடுத்து ஐந்து பாடங்களைப் படித்து 500 மதிப்பெண்களுக்கு தேர்வெழுதலாம். அல்லது பழைய நடைமுறையின்படி ஆறு பாடங்களைப் படித்து 600 மதிப்பெண்களுக்குத் தேர்வெழுதலாம்.
சுமைகுறைப்பு நடவடிக்கை
இந்தப் முதன்மைப் பாடங்கள் மாற்றத்துக்கான அரசாணை 2019 செப்டம்பர் 18 அன்று பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது. ஒரு துறைசார் பாடம் குறைக்கப்படுவதால், மாணவர்கள் தங்களது உயர்கல்விக்குப் பயன்படக்கூடிய பாடங்களில் மட்டும் கவனம் செலுத்த முடியும் என்றும் மேல்நிலைக் கல்வி பயிலும்போதே நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளுக்கு தயார்படுத்திக்கொள்ள உதவும் என்றும் கல்வித் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். மாணவர்களின் பாடச் சுமை குறையும் என்று சில ஆசிரியர் அமைப்புகளும் பெற்றோரும் இந்தப் புதிய நடைமுறையை வரவேற்றுள்ளன.
ஆனால், நான்கு துறைசார் பாடங்களுக்கு பதிலாக மூன்றை மட்டும் தேர்ந்தெடுப்பது மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் என்று ஆசிரியர்கள், உயர்கல்வி ஆலோசகர்கள், கல்வித் துறை செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பல தரப்பினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.
அனைவருக்குமான மாற்றமா?
மருத்துவம், பொறியியல் போன்ற தொழில்முறைப் படிப்புகளில் (Professional Course) சேர மாணவர்களில் குறிப்பிட்ட சதவீதத்தினர் மட்டுமே விரும்புவார்கள். இந்நிலையில் எல்லோருக்கும் பள்ளி அளவிலேயே ஒரு பாடத்தை விலக்கிக்கொள்வதற்கான வாய்ப்பை அளிப்பது, அனைவருக்கான உயர்கல்வி வாய்ப்புகளையும் அவை சார்ந்த தெரிவுகளையும் பாதிக்கும் என்பதே ஆசிரியர்களின் குற்றச்சாட்டு.
எடுத்துக்காட்டாக, மருத்துவராகும் லட்சியத்துடன் அறிவியல் பிரிவில் உயிரியலை உள்ளடக்கிய முதன்மைப் பாடங்களைத் தேர்ந்தெடுக்கும் மாணவர் கணிதத்தைக் கைவிட்டிருப்பார். அவருக்கு மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலோ அல்லது மருத்துவம் படிக்க வேண்டும் என்ற அவருடைய விருப்பத்தில் மாற்றம் ஏற்பட்டிருந்தாலோ, கணிதம் பயிலாத அவரால் பொறியியலைத் தேர்ந்தெடுக்க முடியாது. இயற்பியல், வேதியியல் இளநிலைப் பட்டங்களுக்கான வாய்ப்பு கிடைப்பதிலும் சிக்கல் ஏற்படும்.
விடுபடும் முக்கியப் பாடங்கள்
அடுத்ததாக, இதுவரை இயற்பியலும் வேதியியலும் அறிவியல் பிரிவைத் தேர்ந்தெடுக்கும் அனைவரும் கட்டாயமாகப் படிக்கவேண்டிய பாடங்களாக இருந்தன. இப்போது மூன்று பாடங்களை உள்ளடக்கிய தொகுப்புகளுக்கான தெரிவுகளில் ஒன்றில் இயற்பியல் இல்லை. இன்னொன்றில் வேதியியல் இல்லை. இவை இரண்டும் இல்லாமல் இருப்பது அறிவியல் மாணவர்களின் அடித்தளத்தையே கேள்விக்குள்ளாக்கக்கூடும் என்று அனுபவம் வாய்ந்த மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் அஞ்சுகின்றனர்.
மறுபுறம் இந்தப் புதிய நடைமுறையில் கலைப் பிரிவுகளில் வணிகவியல் பிரிவைத் தேர்ந்தெடுக்கும் மாணவர்கள் பொருளியல் அல்லது வணிகக் கணிதம் இரண்டில் ஏதேனும் ஒன்றைத்தான் தேர்ந்தெடுக்க முடியும். பட்டையக் கணக்காளர் போன்ற தொழில்நிபுணத்துவப் படிப்புகளுக்கு கணிதம் படித்திருப்பது கட்டாயம்.
வணிகவியல் இளங்கலை உட்பட இந்தப் பிரிவில் அதிக மதிப்புகொண்ட பல உயர்கல்வி வாய்ப்புகளுக்கு பள்ளி மேல்நிலைக் கல்வியில் கணிதம் பயின்ற மாணவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும். எனவே, மேல்நிலைப் பள்ளி அளவில் பொருளியல் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை பேரளவு குறைந்துவிடும். அரசுப் பள்ளிகளிலிருந்து பொருளியல் துறையில் நுழைபவர்கள் அருகிவரும் இனமாக ஆகிவிடுவார்கள்.
தேர்ந்தெடுக்கும் உரிமை யாருடையது?
மூன்று பாடங்களைப் படிப்பதா நான்கு பாடங்களைப் படிப்பதா என்பதைத் தேர்ந்தெடுக்கும் உரிமை நடைமுறையில் எந்த அளவு மாணவர்கள் கையில் இருக்கப் போகிறது? நூறு சதவீத தேர்ச்சியைக் காண்பிக்க விரும்பும் பள்ளிகள் அனைத்தும் சுமாராகப் படிக்கும் மாணவர்களை மூன்று பாடங்களை படிப்பதற்கான வாய்ப்பைத் தேர்ந்தெடுக்கவே வற்புறுத்தும். ஏற்கெனவே, சில தனியார் பள்ளிகள் மூன்று பாடங்களை உள்ளடக்கிய புதிய நடைமுறையின் அடிப்படையில் மட்டுமே மாணவர் சேர்க்கையை தொடங்கத் திட்டமிட்டிருக்கும் தகவல்களை பார்க்க முடிகிறது.
பள்ளிகள் நிர்பந்திக்காவிட்டாலும் மாணவர்களும் பெற்றோரும்கூட மூன்று பாடங்களை படிக்கும் எளிய வழிமுறையையே நாடுவார்கள். ஒரு பாடத்தைக் கைவிடுவதால், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய இழப்புகளை இப்போதே கணக்கிட்டு ஆழமாக யோசித்து முடிவுகளை எடுக்கும் வசதியும் வழிகாட்டல்களும் மிகக் குறைந்த மாணவர்களுக்கு மட்டுமே உள்ளன.
மாற்று வழிகள்
மாணவர்களின் பாடச் சுமையை குறைக்க வேண்டும் என்ற அரசின் நோக்கம் வரவேற்கத்தக்கதுதான். ஆனால், மாணவர்களின் எதிர்காலத்தில் மிகப் பெரிய தாக்கம் செலுத்தக்கூடிய இது போன்ற முடிவுகளை செயல்படுத்தும்முன் எல்லா தரப்பினரையும் கலந்தாலோசித்திருக்க வேண்டும். இது போன்ற திட்டங்களை பகுதி அளவிலோ சோதனை முயற்சியாகவோ செய்துபார்க்கும் வழிமுறைகளை யோசித்திருக்கலாம். எடுத்துக்காட்டாக, நான்கு பாடங்களையும் கற்பித்துவிட்டு மூன்று பாடங்களில் மட்டும் தேர்ச்சிபெற்றால் போதும் என்ற வழிமுறையைப் பரிசீலித்திருக்கலாம்.
அக்கறையான அறிவுறுத்தல்
இதையெல்லாம் தாண்டி தமிழகப் பள்ளிகளில் இந்தப் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுவிடும் என்ற நிலையில் மாணவர்களும் பெற்றோரும் ‘மூன்றா நான்கா’ என்ற எளிய கணக்கில் மூழ்கிவிடாமல், அனைத்து சாத்தியங்களையும் பரிசீலித்து நன்கு யோசித்து முடிவெடுக்க வேண்டும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. தற்போது எளிய வழி என்று நினைத்து மூன்று பாடங்களைத் தேர்ந்தெடுப்பது, எதிர்காலத்தில் உயர்கல்வியின் பரந்து விரிந்த வாய்ப்புகளையும் அது சார்ந்த வேலைவாய்ப்பையும் பாதிக்கும் என்பதை மனதில் கொண்டு முடிவுகளை எடுப்பது நல்லது.
தொடர்புக்கு: gopalakrishnan.sn@hindutamil.co.in
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago