ஊக்கம் பெற சில அலைவரிசைகள்

தொகுப்பு: யாழினி

கரோனா நோய்த்தொற்றுப் பரவலை உலக நாடுகள் எதிர்கொண்டுவரும் இந்த நெருக்கடியான நேரத்தில், அனைவருக்குமே இயல்பாக இயங்குவதற்கான ஊக்கம் தேவையாக இருக்கிறது. ஊக்கத்தை அதிகரிக்கப் புத்தகங்கள் வாசிப்பதுடன், ஊக்கமளிக்கும் யூடியூப் அலைவரிசைகளைப் பின்தொடரும் போக்கும் தற்போது அதிகரித்துவருகிறது. இந்த நெருக்கடியான காலத்திலும் ஊக்கத்துடன் இயங்குவதற்கு உதவும் சில யூடியூப் அலைவரிசைகளின் பட்டியல் இது:

வாழ்க்கை என்னும் பள்ளி

‘தி ஸ்கூல் ஆஃப் லைஃப்’ என்னும் இந்த யூடியூப் அலைவரிசை, 2010-லிருந்து இயங்கிவருகிறது. இந்த நெருக்கடியான நேரத்தில் தன்னம்பிக்கையுடன் அன்றாட வாழ்க்கையை எப்படி எதிர்கொள்வது என்பது தொடர்பான காணொலிகள் இந்த அலைவரிசையில் தொடர்ந்து பதிவேற்றப்படுகின்றன. உணர்வுரீதியான முதிர்ச்சியுடன் இருப்பதற்கான ஆலோசனைகள், தனிமையை வெல்வது எப்படி, இக்கட்டான சூழலை எதிர்கொள்வதற்கான வழி என்பன போன்ற பல தலைப்புகளில் காணொலிகள் இடம்பெற்றுள்ளன. இலக்கியம், பணிவாழ்க்கை, மனநலம், உறவுகள், ஆளுமைகள், சமூகத் தத்துவம் போன்ற பிரிவுகளில் இந்த அலைவரிசையில் காணொலிகள் இடம்பெற்றுள்ளன.

அலைவரிசையைப் பார்க்க: https://bit.ly/2Wb2RJE

அச்சம் தவிர்!

வாழ்க்கையில் பயத்தை வெல்வதற்கான வழிகளைக் கற்றுக்கொடுக்கிறது ‘டீம் ஃபியர்லெஸ்’ என்ற யூடியூப் அலைவரிசை. பயத்தை வென்று ஊக்கத்துடன் வாழ்க்கையை எதிர்கொள்வதற்கான உரைகள், பாடல்கள் போன்றவற்றை இந்த அலைவரிசை பதிவேற்றுகிறது. கரோனா பயத்தை எப்படி வெல்வது என்பது தொடர்பான உரைகளையும், பாடல்களையும் இந்த அலைவரிசை தொடர்ந்து பதிவேற்றிவருகிறது. உடல் நலன், ஆளுமைகளின் ஊக்கம் அளிக்கும் உரைகள், பயத்தை வெல்வதற்கான ஆலோசனைகள் ஆகியவை இந்த அலைவரிசையில் இடம்பெற்றுள்ளன.

அலைவரிசையைப் பார்க்க: https://bit.ly/2yTJInu

பழக்கங்களை மாற்றலாம்

நெட்ஃப்ளிக்ஸில் ஹிட்டான ‘மினிமலிசம்’ ஆவணப்பட இயக்குநர் மாட் த’வெல்லாவின் (Matt D’Avella) அலைவரிசை யூடியூப்பில் பிரபலமானது. நம்மில் பலரும் வழக்கமான பழக்கங்களுக்குள் சிக்கிக்கொண்டு தவிப்போம். எப்படி அவற்றிலிருந்து வெளியே வருவது என்பதற்கான சுவாரசியமாக வழிகளைக் கற்றுகொடுக்கிறார் இயக்குநர் மாட். நிலையின்மைச் சூழலைச் சமாளிப்பது எப்படி, தனிமனித உற்பத்தித் திறனுடன் இருப்பது வாழ்க்கையை எப்படிப் பாதுகாக்கும், படைப்பாற்றலை அதிகரிப்பது எப்படி என்பன போன்ற தலைப்புகளில் இவரது அலைவரிசையில் காணொலிகள் இடம்பெற்றுள்ளன. மினிமலிசத்தை விளக்கும் சுவாரசியமான காணொலிகளும் இடம்பெற்றுள்ளன.

அலைவரிசையைப் பார்க்க: https://bit.ly/2Wb3enw

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE