இப்போது என்ன செய்கிறேன்? - குழந்தைக்குள் இருக்கும் கற்பனையைக் கண்டறியும் கண்கள் வேண்டும்

By செய்திப்பிரிவு

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த நேரத்தை இளைஞர்கள், மாணவர்கள் பயனுள்ளதாகக் கழிக்க விரும்புகிறார்கள். கல்விச் செயற்பாட்டாளரும் கல்விச் சீர்திருத்தம், மாற்றுக் கல்வி ஆகியவை தொடர்பாக பல நூல்களை எழுதியிருப்பவருமான பேராசிரியர் ச. மாடசாமி, இந்த காலத்தில் என்ன செய்யத் திட்டமிட்டிருக்கிறார் என்பதைத் தெரிந்துகொள்வது மற்றவர்களுக்கு வழிகாட்டியாக அமையும்.

“இந்த காலகட்டத்தை இளைஞர்கள் பலர் சமூக வலைத் தளங்களில் செலவழிக்கிறார்கள். சிலர் வாசிக்கிறார்கள். சிலர் ஓய்வெடுக்கிறார்கள். என்னை மாதிரி வயது முதிர்ந்தவர்களுக்கு சில திட்டங்கள் இருக்கின்றன. இதுபோன்ற காலத்தில் எங்களை நாங்களே பாதுகாத்துக்கொள்ள வேண்டிய தேவையும் இருக்கிறது.

இந்தக் காலத்தில் என் நீண்ட நாள் கனவு ஒன்றை நிறைவேற்ற முடியுமா என்று பார்க்கிறேன். உலக அளவில் கல்விக்கூடம் என்பது ஒரு தொழிற்சாலையைப் போல், மத நிறுவனத்தைப் போல் மாறி நெடுங்காலம் ஆகிவிட்டது. ஆனால், விதிகளுக்கு மாறாகப் பலர் சிந்தித்தும் செயல்பட்டும் இருக்கிறார்கள், பணியாற்றியிருக்கிறார்கள். இவற்றையெல்லாம் சில வரிகளாகவோ தகவல்களாகவோ அவ்வப்போது என் கட்டுரைகளில் குறிப்பிட்டிருப்பேன். இந்த முயற்சிகளைப் பற்றியெல்லாம் தனியாக ஒரு தொகுப்பாக்கி, வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேன்.

சிறகு தந்த முயற்சிகள்

இந்தியா, ஜப்பான். ஆப்பிரிக்க, ஐரோப்பிய நாடுகள் எனப் பல நாடுகளில் கல்வி தொடர்பான வித்தியாசமான முயற்சிகள் நடைபெற்றிருக்கின்றன பிரேசிலைச் சேர்ந்த பாவ்லோ பிரேயர் (Paulo Friere) பற்றி எத்தனை ஆசிரியர்களுக்குத் தெரியும்? விதிகளை உடைத்த அவருடைய கல்வி முயற்சிகள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின. வீதிக்குச் சென்று கல்வியைக் கொடுத்தவர்களில் பாவ்லோ பிரேயர்தான் முன்னோடி. நான்கு சுவர்களுக்குள் அடைபடாமல், கல்வியை வீதிக்கு எடுத்துச் சென்றால் என்ன மாதிரியான தாக்கங்கள் ஏற்படும் என்பதை அவர்தான் நமக்குக் காட்டினார். ஆசிரியர்கள் அனைவரும் அவரைப் பற்றியும் அவருடைய முயற்சிகளைப் பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டும்

அடுத்ததாக இங்கிலாந்தில் 'மவுன்டென் ஸ்கூல்' நடத்திய ஏ.எஸ்.நீல். இன்னும் அந்தப் பள்ளி இருக்கிறது என்றாலும், தொடங்கிய காலத்திலேயே பல பெரிய பரீட்சார்த்த முயற்சிகளை அவர் மேற்கொண்டிருந்தார். நியூயார்க்கில் வீதியில் திரிந்துகொண்டிருந்த சிறாருக்காக டென்னிசன் என்பவர் நடத்திய பள்ளி குறைந்த காலமே செயல்பட்டாலும், மிகப் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தியது. இவான் இல்லிச் போன்றோர் பள்ளிகளைத் தொடங்கவில்லை என்றாலும், கல்வி பற்றி உரத்த சிந்தனைகளை முன்வைத்தவர்கள். லியோ டால்ஸ்டாய்கூட ஒரு பள்ளியைத் தொடங்கினார். ஜார் மன்னரின் ஒடுக்குமுறையால் அதை மூட நேர்ந்தது.

தென்னாப் பிரிக்காவில் காந்தி வாழ்ந்த காலத்தில் தன்னுடைய 'டால்ஸ்டாய் பண்ணை'யில் மேற்கொண்ட ஒவ்வொரு கல்விப் பரிசோதனையும் முக்கியமானவை. இவற்றை யெல்லாம் தொகுத்துக் கொடுக்க வேண்டும் என்பது எனது முக்கியமான கனவாக இருக்கிறது. எனக்கு 73 வயதாகிறது. உடல் பிரச்சினைகள் காரணமாக எழுதுவது, படிப்பதெல்லாம் கொஞ்சம் சிரமமாகிவிட்டது. இருந்தாலும் இந்த ஊரடங்கு காலத்தில் கிடைத்திருக்கும் நேரத்தில் இந்தப் பணியை முடித்துவிட நான் முயன்று வருகிறேன்.

விதிகளுக்குள் சிக்கிக் கிடக்கும் வகுப்பறையை தட்டியெழுப்ப வேண்டி யிருக்கிறது. விதிகளைத் தாண்டி நடந்த முயற்சிகள் ஒவ்வொன்றும் தீக்கங்கு மாதிரி. அவற்றைத் தொகுத்து கொடுத்தால் பல வகுப்பறைகளில் மாற்றம் வரும். இதைக் கட்டுரைகளாக எழுதலாமா பேசி்ப் பதிவு செய்யலாமா என்று இன்னும் முடிவுசெய்யவில்லை. இன்று படிப்பவர்களைவிடக் கேட்பவர்கள் அதிகமாகிவிட்டார்கள் என்று பலர் கூறுகிறார்கள். எனவே, பேசிப் பதிவு செய்துவிடலாமா என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன்.”

என்ன செய்யலாம்?

இப்படித் தான் செய்ய நினைத்திருக்கும் பணி பற்றி மட்டுமல்லாமல், மாணவர்களும் பெற்றோரும் இந்த ஊரடங்குக் காலத்தை எப்படிப் பயன்படுத்தலாம் என்றும் அவர் பகிர்ந்துகொள்கிறார்:

“பிள்ளைகளை சுதந்திரமாகவிட வேண்டியதுதான். சுதந்திரமாக இருக்க நாம் அனுமதிப்பதே இல்லை என்பதுதான் பிரச்சினை. அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று தேர்ந்தெடுக்க விடுங்கள். கதைகளைச் சொல்லலாம், விளையாட்டில் ஈடுபடுத்தலாம் என்பதெல்லாம்கூட, என்னைப் பொறுத்தவரை திணிப்புதான். பிள்ளைகளை சுதந்திரமாகவிட்டு கவனித்தாலே, அவர்கள் எதை விரும்புகிறார்கள், எதைத் தேர்ந்தெடுக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள முடியும். கவனிக்கப்படுகிறோம் என்ற உணர்வு ஏற்பட்டுவிடாத வகையில் கவனிக்க வேண்டும்.

குழந்தைகளுக்குள் நிறைய கற்பனை இருக்கிறது. அவர்களே நிறைய விஷயங்களைக் கண்டுபிடிப்பார்கள். மேலைநாடுகளில் குழந்தைகள் அதிக படைப்பாற்றலுடன் இருப்பதற்குக் காரணம் அவர்களுக்கு வழங்கப்பட்ட சுதந்திரம்தான். தம் குழந்தைக்குள் இருக்கும் கற்பனை வளத்தைக் கண்டுபிடிப்பதற்கான கண்கள்தான் வேண்டும் பெற்றோர்களுக்கு.” n கோபால் n

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்