முகமது ஹுசைன்
உங்களுக்குப் பிடித்தமான விளையாட்டை விளையாடப் போகிறீர்கள். கிரிக்கெட்டில் பேட்டிங் செய்கிறீர்கள். பந்து வீசப்படுகிறது. அது ஒரு ஃபுல் டாஸ். அந்தப் பந்தை மைதானத்துக்கு வெளியே தூக்கி அடிக்க நீங்கள் தயாராகிறீர்கள். கொஞ்சம் பொறுங்கள்.
அந்தப் பந்து மட்டையில் படுமா, ஃபோர் போகுமா, சிக்ஸர் போகுமா என்று நினைத்துப் பதற்றமடைந்தால், உங்கள் மூளையாலும் உடம்பாலும் முழுத் திறனை வெளிப்படுத்தி அந்தப் பந்தை அடிக்க முடியுமா?
முடியாது என்பதே இதற்குப் பதில். அந்தக் கணத்தை அனுபவிக்கும்போது, விளை யாட்டை விளையாட்டாகக் கருதும் போது மட்டுமே, உங்களால் முழுத் திறனையும் வெளிப்படுத்த முடியும். அது விளையாட்டாக இருந்தாலும் சரி, தேர்வாக இருந்தாலும் சரி. தேர்வில் இதே தன்மையை எப்படிப் பயன்படுத்தலாம், பார்ப்போம்.
புற அழுத்தத்தைப் புறந்தள்ளுங்கள்
ஆசிரியர்கள், பெற்றோர், நண்பர்கள் உங்கள் படிப்புக்குப் பலர் பல வகைகளில் உதவியிருக்கலாம். ஆனால், தேர்வை நீங்கள்தான் எழுத வேண்டும். எனவே, அவர்கள் மூலமாக வரும் எந்த அழுத்தத்தையும் மனத்தில் ஏற்றிக்கொள்ளாதீர்கள்.
நிம்மதியாகத் தூங்குங்கள்
படிப்பைவிடத் தூக்கம்தான் தேர்வுக்கு முந்தைய நாளில் முக்கியம். தூக்கம் மூளைக்கு ஓய்வு கொடுத்து, தேர்வைப் புத்துணர்வுடன் எதிர்கொள்ளவைக்கும்.
புதிதாகப் படிக்க வேண்டாம்
ஓராண்டில் படிக்க முடியாததைக் கண்டிப்பாகக் கடைசி ஒரு நாளில் படித்துவிட முடியாது. தேர்வுக்கு முந்தைய நாள் எதையும் புதிதாகப் படிக்காதீர்கள். படிக்கும்போது நீங்கள் தயாரித்த குறிப்பு எழுதப்பட்ட காட்சியட்டைகளைக் (Flash cards) கண்டிப்பாக ஒருமுறை முழுவதுமாகப் பார்த்துக்கொள்ளுங்கள்.
திறன்மிகு திருப்புதல்
எல்லாவற்றையும் கண்டிப்பாகப் புரிந்துகொண்டு படிக்க முடியாது. பெயர்கள், ஆண்டுகள், தேதிகள், இடங்கள் போன்றவற்றை மனப்பாடம் செய்தாக வேண்டும். அவற்றை மீண்டும் நினைவுபடுத்திப் பார்த்துக்கொள்ளுங்கள்.
‘அரக்கப்பரக்க’ வேண்டாம்
வீட்டிலிருந்து வழக்கமாகப் புறப்படும் நேரத்துக்கு முன்கூட்டியே புறப்பட்டுவிடுங்கள். சீக்கிரமாகத் தேர்வறையை அடைவது பதற்றத்தைத் தவிர்க்கும்.
தேர்வறையில் பயம் வேண்டாம்
தேர்வறையில் நுழைந்தவுடன், தேர்வு முடிவைப் பற்றிய எண்ணங்களை ஓரங்கட்டி வைத்துவிட்டுப் பதற்றமடையாமல், அச்சமின்றித் தேர்வை எதிர்கொள்ளுங்கள். தேர்வு அறையில் வினாத்தாளைக் கையில் வாங்கியவுடன் அதைப் பார்ப்பதற்குமுன் ஐந்து முதல் பத்து முறை ஆழமாக மூச்சை இழுத்துவிடுங்கள். பயத்தையும் பதற்றத்தையும் வென்று தெளிவான மனநிலையில் தேர்வை எதிர்கொள்ளலாம்.
எழுதுவதற்குமுன்
வினாக்களைத் தவறாகப் புரிந்துகொள்வது பலரும் அடிக்கடி செய்யும் தவறுகளில் ஒன்று. கவனக் குறைவு, பதற்றம் போன்றவையே காரணம். ஆழ்ந்து மூச்சை இழுத்துவிட்டபின், பேனாவை எடுக்காமல் வினாத்தாளை எடுங்கள். கேள்விகளை இரண்டுமுறை படியுங்கள். இது கேள்வியைச் சரியாகப் புரிந்துகொள்ள உதவுவதுடன், உடனே விடை எழுத வேண்டும் என்ற உந்துதலையும் தடுக்கும்.
மனதுக்குள் சொல்லிப் பார்த்தல்
விடையை எழுதுவதற்குமுன் அதை மனதுக்குள் லேசாக நினைத்துப்பாருங்கள். என்ன எழுதுவது, எப்படி எழுதுவது என்பதைப் பற்றிய சரியான புரிதலை இது வழங்கும். அந்தப் புரிதலின் துணையுடன் எழுதப்படும் விடை தெளிவாக இருப்பதுடன் நேரத்தையும் மிச்சப்படுத்தும்.
திட்டங்கள் வேண்டாமே
எந்த வரிசையில் தேர்வு எழுத வேண்டும் என்று அனைவருக்கும் ஒரு திட்டமிருக்கும். சிலர் அதிக மதிப்பெண் பெற்றுத்தரும் வினாக்களுக்கு முதலில் விடை எழுதுவார்கள். சிலர் குறைந்த மதிப்பெண் வினாக்களுக்கு முதலில் விடை எழுதுவார்கள். அப்படி எழுதும்போது தெரியாத வினாக்கள் வந்தால் தேவையற்ற அழுத்தம் பதற்றம் தோன்றலாம். எனவே, நன்கு தெரிந்த கேள்விகளுக்கான விடைகளை முதலில் எழுதுங்கள். அது அளிக்கும் உத்வேகத்தின் துணைகொண்டு விடை தெரியாத கேள்விகளுக்கு நம்பிக்கையுடன் விடையளிக்க முயலலாம்.
பாதியில் நின்றுவிட்டதா?
தெரியாத கேள்வி இடம்பெற்றாலோ தெரிந்த பதிலை எழுதும்போது பாதியில் மறந்துபோனாலோ ஒருவிதமான பதற்றமும் பயமும் ஏற்படலாம். இந்தச் சூழ்நிலையில், கேள்வித்தாள், பதில் எழுதும் தாளை மூடிவையுங்கள். ஆழமாக மூச்சை இழுத்துவிடுங்கள். பின் உங்களுக்கு நன்கு தெரிந்த வேறு கேள்விக்கு விடை எழுதத் தொடங்குங்கள். பாதியில் நின்ற பதிலை இறுதியில் நிறைவுசெய்து கொள்ளலாம்.
ஊகித்து எழுதலாம்
எல்லாக் கேள்விகளுக்கும் விடை எழுதுங்கள். விடை தெரியாத கேள்வி என்றாலும் விடையை ஊகித்து எழுதுங்கள். எழுதாமல் வெறுமையாக விடுவதைவிட, ஊகித்தாவது எழுதுவது மேல்.
இடைவெளி அவசியம்
ஒவ்வொரு விடைக்கும் இடையில் மிகச் சிறிய இடைவெளி எடுத்துக்கொள்ளுங்கள். ஜன்னலோரம் அமர்ந்திருந்தால் சில விநாடிகள் வானத்தையோ மரங்களையோ பார்க்கலாம். ஜன்னலோரம் கிடைக்கவில்லை என்றால், சுழலும் மின்விசிறியைப் பார்க்கலாம். முப்பது நிமிடங்களுக்கு ஒருமுறை தண்ணீர் அருந்தலாம். இவ்வாறு செய்வது தேர்வு நேரம் முழுவதும் களைப்படையாமல் புத்துணர்வுடன் வைத்துக்கொள்ளும்.
அச்சம் தவிர்
ஆண்டு முழுவதும் கஷ்டப்பட்டுப் படிப்பதுடன் ஒப்பிட்டால் கண்டிப்பாக மூன்று மணிநேரத் தேர்வு என்பது எளிதானதே. ஓராண்டுப் படிப்போ மூன்று மணிநேரத் தேர்வோ உங்களுக்குப் பயம் அளிப்பதில்லை. தேர்வுக்குப்பின் வெளிவரும் மதிப்பெண்களும் அவற்றைச் சார்ந்த மதிப்பீடும்தான் உங்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது. இந்த அச்சம் கண்டிப்பாகத் தேவையில்லை. புற மதிப்பீட்டையும் ஓப்பீட்டையும் புறந்தள்ளி அடுத்த தேர்வுக்குத் தயாராகுங்கள்.
மூன்று மணி நேரம்தான்
ஒருவருடைய சராசரி ஆயுட்காலம் 70 ஆண்டுகள் என்று வைத்துக்கொண்டால், தோராயமாக ஆறு லட்சம் மணி நேரம் வாழப்போகிறோம். அவற்றை இந்த மூன்று மணி நேரம் தீர்மானிக்கப்போவதாக நினைப்பது நகைச்சுவையாக இல்லையா? தேர்வு என்பது ஒரு ஆட்டத்தைப் போன்றதுதான். அதைப் புன்னகையுடன் எதிர்கொண்டு அனுபவித்து ஆடுங்கள். தேர்வு நாள் உங்களுடைய திறமையைப் பரிசோதிக்கும் நாள் அல்ல. அது உங்கள் ஓராண்டு உழைப்புக்கான பலனை அறுவடை செய்யப்போகும் நாள்.
கட்டுரையாளர் தொடர்புக்கு: mohamed.hushain@hindutamil.co.in
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago