சு. அருண் பிரசாத்
பிரேசிலின் சா பாலோ நகரில் புதிதாகத் தொடங்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணியில் சேர்வதற்காக, ஐரோப்பாவில் இருந்து பயணித்துக்கொண்டிருந்த அந்த இளைஞர் நூல் ஒன்றைத் தன்னுடன் எடுத்துச் சென்றார்.
இனவரைவியலில் (Ethnography) முக்கியமானதாகக் கருதப்பட்ட, 1578-ல் வெளியான ‘பிரேசில் நிலத்துக்கான ஒரு பெரும்பயணத்தின் வரலாறு’ என்ற அந்த நூல், தென்னமெரிக்காவில் பிரெஞ்சுக்காரர்களால் முதலில் கண்டறியப்பட்ட நிலமான பிரேசிலுக்கு அவர்களுடை பயணம், அதன் நிலவியல், பூர்வகுடிகள், அவர்களுடை பழக்க வழக்கங்கள் ஆகியவற்றைப் பதிவுசெய்திருந்தது.
1935 முதல் 1939 வரை அங்குப் பேராசிரியராகப் பணியாற்றிய அந்த இளைஞர், நவம்பர் முதல் மார்ச் வரையிலான நீண்ட விடுமுறைக் காலத்தில் மேதோ குரோஸோ, ரோண்டோனியா போன்ற பிரேசிலின் உள்ளடங்கிய பகுதிகளில் வாழும் நம்பிக்வாரா, துபி-கவாஹிப், கதுவோ, பொரொரோ உள்ளிட்ட பழங்குடிகளைப் படித்தறிவதில் செலவிட்டார்.
இந்த அனுபவங்களை சுமார் 15 ஆண்டுகள் கழித்து அவர் நூலாக எழுதியபோது, 20-ம் நூற்றாண்டின் மிகச் சிறந்த நூல்களில் ஒன்றாக அது மதிப்பிடப்பட்டது; பழங்குடிகளைப் படிக்கச் செல்லும் ஒவ்வொருவரின் கையிலும் அந்த நூல் கட்டாயமாக இருந்தது. அந்த நூல் ‘ட்ரிஸ் ட்ராபிக்’ (Tristes Tropiques - துயருற்ற நிலம்); அந்த இளைஞர் க்ளாத் லெவி-ஸ்ட்ராஸ் (Claude Lévi-Strauss).
ஜான்-பால் சார்த்ர், சிமன் தெ புவா, மெகலு போன்டி, பால் நிஸான் போன்ற பிரெஞ்சு எழுத்து-தத்துவ ஆளுமைகளின் சமகாலத்தவரான க்ளாத் லெவி-ஸ்ட்ராஸ், 1908-ம் ஆண்டு ப்ருஸில்ஸ் நகரில் யூதக் குடும்பம் ஒன்றில் பிறந்தார். சட்டம், தத்துவம் ஆகிய துறைகளில் பட்டம் பெற்றவர், ஆசிரியர் பணிக்கான தேர்விலும் தேறினார்.
புவியியல், ஃப்ராய்டு, மார்க்ஸியம் இந்த வரிசையில் தன்னுடைய ஈடுபாட்டை வளர்த்துக்கொண்டிருந்த லெவி-ஸ்ட்ராஸ், ராபர்ட் லோவி எழுதிய ‘பழமைச் சமூகம்’ (Primitive Societies) என்ற நூலை வாசித்தபோது, தன்னுடைய ஆர்வம் அனைத்தும் மானிடவியலில் ஒன்றிணைவதை உணர்ந்தார். ஆனால், மானிடவியலில் முறையான களப்பயிற்சி இல்லாததால், சா பாலோ பல்கலைக்கழகப் பேராசிரியர் பணியை அப்போது ஏற்றுக்கொண்டார்.
மனிதர்கள், அவர்களுடைய பழக்க வழக்கங்கள், சமூகத்தின் கடந்த காலம், எதிர்காலம் ஆகியவற்றை அறிவியல் முறையில் அணுகி ஆய்வுசெய்யும் முறைக்கு மானிடவியல் (Anthropology) என்று பெயர். 1930-களில் லெவி-ஸ்ட்ராஸ் மானிடவியலில் நுழைந்தபோது, வளர்ந்துவரும் துறையாகவே அது இருந்தது; ஆனால், 1960-களில் லெவி-ஸ்ட்ராஸின் கருத்தாக்கங்கள் சார்ந்து புதுப்பிரிவு ஒன்று அத்துறையில் உருவாகும் அளவுக்கு அவருடைய பணியும் பங்களிப்பும் தாக்கத்தைச் செலுத்தின.
இத்தகைய ஆளுமைமிக்க மானிடவியலாளரான லெவி-ஸ்ட்ராஸின் வாழ்க்கை வரலாற்றை ‘துயருற்ற நிலம்’ நூல், பிரெஞ்சு தேசிய நூலகத்தில் பாதுகாக்கப்பட்ட இதுவரை பயன்படுத்தப்படாத அவருடைய தனிப்பட்ட ஆவணங்கள் ஆகியவற்றைக் கொண்டு பிரெஞ்சு வரலாற்றறிஞர் இமானுவல் லோயி எழுதியிருக்கிறார். 2015-ம் ஆண்டு பிரெஞ்சு மொழியில் வெளியான இந்நூலை நினோன் வின்சொனோ, ஜொனதன் மேகிடோஃப் ஆகியோர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளனர்.
பேராசிரியர் பணியில் இருந்து பிரான்ஸ் திரும்பியிருந்த லெவி-ஸ்ட்ராஸுக்கு, அமெரிக்காவின் ‘நியூ ஸ்கூல் ஆஃப் ரிசர்ச்’-ல் பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கவே 1941-ல் நியூ யார்க் நகருக்குப் பயணப்பட்டார். இது லெவி-ஸ்ட்ராஸுக்கு மட்டுமல்லாமல், பிரெஞ்சுத் தத்துவத்துக்கே ஒரு திருப்புமுனையாக அமைந்தது.
அங்குதான் ரஷ்யாவைச் சேர்ந்த பல்துறை அறிஞரான ரோமன் ஜேக்கப்சன் உடன் லெவி-ஸ்ட்ராஸுக்குத் நட்பு ஏற்பட்டது. மொழியியலாளரான ஜேக்கப்சன், சுவிஸ் மொழியியல் அறிஞரான சசூரின் (Ferdinand de Saussure) மொழியியல் சிந்தனைகளை லெவி-ஸ்ட்ராஸுக்கு அறிமுகப்படுத்தினார்.
மொழி என்பது குறிகளுக்கு (signs) இடையேயான ஒற்றுமை, வேற்றுமை ஆகியவற்றின் தொகுக்கப்பட்ட அமைப்பு. அவை ஒன்றிணைந்து நாம் பயன்படுத்தும் வார்த்தைகளாக வெளிப்படுகின்றன. சிக்கலான விதிகளின் அடிப்படையில் மொழி கட்டமைக்கப்பட்டிருக்கிறது.
என்றாலும், தொடர்புகொள்வதற்கு இந்த விதிகளில் கவனம் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை, முறையான ஒரு அமைப்பு அல்லது வடிவமாக மொழியை அணுக முடியும் என்ற இரண்டு காரணங்களுக்காக மொழியியல் சார்ந்த இந்தக் கருத்தாக்கம் முக்கியத்துவம் பெற்றது. விவாதிக்கப்படும் கரு சார்ந்து அல்லாமல், கோட்பாட்டு ரீதியில் எந்த மொழிக்கு வேண்டுமானாலும் இந்த விதிகளைப் பயன்படுத்த முடியும் என்பது லெவி-ஸ்ட்ராஸுக்கு புதிய சாத்தியங்களைத் திறந்துவிட்டது. மொழி சார்ந்த சசூரின் இந்தக் கருத்தாக்கத்தை, பண்பாட்டைப் படிப்பதற்கு லெவி-ஸ்ட்ராஸ் பயன்படுத்தினார்; ‘அமைப்பியல்’ பிறந்தது.
1947-ல் பிரான்ஸுக்குத் திரும்பிய லெவி-ஸ்ட்ராஸ், ‘சொந்தங்களுக்கு இடையேயான அடிப்படைக் கட்டுமானம்’ (The Elementary Structures of Kinship) என்ற தன்னுடைய முனைவர் பட்ட ஆய்வை நூலாக வெளியிட்டார். 1958-ல் அமைப்பியல் மானிடவியல் (Structural Anthropology) வெளியானது. இவை மானிடவியல் ஆய்வில் ஆழமான தாக்கத்தைச் செலுத்தின. ஆனால், பிரான்ஸின் சீரிய இலக்கிய இதழ்கள், விவாதக் கூட்டங்கள் ஆகியவற்றில் லெவி-ஸ்ட்ராஸின் கருத்தாக்கங்கள் கடுமையாக விமர்சிக்கப்பட்டன.
அதே வேளையில், பிரான்ஸின் முதன்மையான அறிவுஜீவியாகக் அவர் கொண்டாடப்பட்டார்: லெவி-ஸ்ட்ராஸின் நூறாவது பிறந்தநாளின் போது அந்நாட்டின் அதிபராக இருந்த நிகோலஸ் சர்கோஸி நேரில் சென்று வாழ்த்தினார்; பிரான்ஸ் கால்பந்து அணியின் பயிற்சியாளர் ‘அமைப்பியல் விதி’களின்படி அணியை மறுசீரமைப்புச் செய்திருப்பதாக அறிவித்தார். தான் வாழ்ந்த காலத்திலேயே அவர் அளவுக்குப் புகழ்பெற்ற இன்னொரு அறிஞர் கிடையாது.
ஒட்டுமொத்த பிரபஞ்சத்தின் மையமாக மனிதன் தன்னை நிறுவிக் கொண்ட மேற்கின் நவீனத்துவ சிந்தனைமுறையும் அதனால் ஏற்பட்ட வரலாற்று, சூழலியல் பின்விளைவுகள் குறித்த விமர்சனம் லெவி-ஸ்ட்ராஸுக்கு இருந்தது.
ஆனால், இயற்கை, விலங்குகள், மனிதர்கள் ஆகியவற்றின் சமநிலையைப் பாதுகாக்க பழங்குடிச் சமூகங்கள் தங்கள் முழு ஆற்றலையும் செலுத்தின. புவி பிரபஞ்சத்தின் மையம் இல்லை என்பதை கோபர்நிகஸும், வாலில்லாக் குரங்குதான் மனிதர்களின் மூதாதை என்பதை டார்வினும், நனவிலியின் கருணையால் நாம் வாழ்கிறோம் என்பதை ஃபிராய்டும் உணர்த்தியதைப் போல், காட்டுமிராண்டிகள் என்று நம்மால் அழைக்கப்படும் பழங்குடிகளைவிட நாம் உயர்ந்தவர்கள் அல்லர் என்பதை லெவி-ஸ்ட்ராஸ் நமக்கு உணர்த்தியிருக்கிறார்.
Lévi-Strauss: A Biography Emmanuelle Loyer
ஆங்கில மொழிபெயர்ப்பு: Ninon Vinsonneau, Jonathan Magidoff
வெளியீடு: Polity Books
கட்டுரையாளர் தொடர்புக்கு: arunprasath.s@hindutamil.co.in
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago