அனைத்து மக்களையும் காக்கும் குடியரசு

By செய்திப்பிரிவு

நந்து

இந்திய நாட்டை ஜனநாயக குடியரசு என்கிறோம். ஜனநாயகம், குடியரசு இரண்டும் ஆட்சி அதிகாரத்தில் மக்களே அதிகாரமிக்கவர்களாக இருப்பதை உறுதிசெய்வதற்கான கோட்பாடுகள். ஜனநாயகம் என்பது ஆட்சி எப்படி நடத்தப்படவேண்டும் என்பதற்கான சித்தாந்தம் என்றும் குடியரசு என்பதை ஆட்சி நடத்தும் முறை என்றும் வரையறுக்கலாம். இரண்டுக்கும் ஒற்றுமைகள் இருப்பதைப் போல் நுண்ணிய சில வேறுபாடுகளும் உள்ளன.

ஜனநாயக நாடுகளிலும் குடியரசு நாடுகளிலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளே அரசை நடத்துவார்கள். குடியரசு நாட்டில் அரசின் தலைவரும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவராக இருக்க வேண்டும். இங்கிலாந்து, கனடா போன்ற சில ஜனநாயக நாடுகளில் மன்னர் குடும்பத்தைச் சேர்ந்தவரே அரசின் தலைவராகக் கருதப்படுகிறார். அப்படிப்பட்ட நாடுகள் குடியரசுகள் அல்ல. இன்னொரு முக்கியமான வேறுபாடு அரசியல் சாசனம்.

ஜனநாயக நாடுகளில் பெரும்பான்மை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கே முழுமையான அதிகாரம். குடியரசு நாடுகள் மக்கள் பிரதிநிதிகளுக்கு முற்று முழுதான அதிகாரத்தை வழங்குவதில்லை. அவர்கள் அரசியல் சாசனம் என்ற ஆவணத்தை மீறிச் செயல்பட முடியாது. குறிப்பாக அரசியல் சாசனத்தின்படியே சட்டங்களை வகுக்க முடியும். இதன் மூலம் சிறுபான்மை மக்களின், ஒவ்வொரு தனிநபரின் உரிமைகளும் பாதுகாக்கப்படுகின்றன.

இந்தியா குடியரசான கதை

1950 ஜனவரி 26 அன்று இந்திய அரசியல் சாசனம் நடைமுறைக்கு வந்தது. புதிய அரசியல் சாசனத்தின்படி அதே நாளில் டாக்டர் ராஜேந்திர பிரசாத் இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராகப் பதவியேற்றார் இந்த நாளே இந்தியக் குடியரசு நாளாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது. இந்திய அரசியல் சாசனம் உருவானது நெடிய வரலாறு.

1920களிலேயே இந்திய சுதந்திரத்துக்கான போராட்டத்துடன் இந்தியாவை ஆளும் அதிகாரம் இந்திய மக்களுடைய பிரதிநிதிகளிடமே இருக்கவேண்டும் என்றும் அதற்கு இந்தியாவிற்கென்று தனி அரசியல் சாசனம் இருக்க வேண்டும் என்றும் முழக்கங்கள் எழத் தொடங்கிவிட்டன. காங்கிரஸ் கட்சி இதில் தீவிரம் காட்டியது. 1946 டிசம்பர் 6 அன்று அரசியல் நிர்ணய அவை அமைக்கப்பட்டது. இதன் உறுப்பினர்கள் மறைமுகத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

அதாவது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாகாணப் பேரவை உறுப்பினர்கள் அரசியல் சாசன அவையின் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்தார்கள். 1946 முதல் 1949 வரை இந்த அவை 11 அமர்வுகளுக்குக் கூடியது. 1947 ஆகஸ்ட் 29 அன்று சட்ட மேதை டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் தலைமையில் அரசியல் சாசன வரைவுக் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு அரசியல் சாசனத்தை உருவாக்கி 1948 பிப்ரவரியில் முதல் வரைவை வெளியிட்டது. பொதுமக்களின் கருத்துகள், விமரச்னங்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட இரண்டாம் வரைவு 1948 அக்டோபரில் வெளியிடப்பட்டது. இறுதியாக 1948 நவம்பர் 4 அன்று அரசியல் சாசனத்தின் இறுதிவரைவு வெளியிடப்பட்டது.

ஏன் ஜனவரி 26?

1949 நவம்பர் 26 அன்று அரசியல் சாசனத்தை அரசியல் சாசன அவை ஏற்றுக்கொண்டது. ஆனாலும் இரண்டு மாதங்கள் கழித்துதான் அது நடைமுறைக்கு வந்தது. இதற்கு ஒரு வரலாற்றுக் காரணம் இருக்கிறது. 1930 ஜனவரி 26 அன்று ’முழு விடுதலை நாள்’ கொண்டாடப்படும் என்று காங்கிரஸ் கட்சியின் லாகூர் மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டது. அன்றைய நாளில் நாடு முழுவதும் பல அரசியல் கட்சித் தலைவர்களும் சுதந்திரப் போராட்ட வீரர்களும் புரட்சியாளர்களும் முழு விடுதலை நாளைப் பெருமையுடன் கொண்டாடினர். அந்த நிகழ்வை கெளரவிக்கும் வகையில்தான் 1950 ஜனவரி 26 அன்று இந்திய அரசியல் சாசனம் நடைமுறைக்கு வந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்