ச.கோபாலகிருஷ்ணன்
இந்திய அரசு 2009-ல் நிறைவேற்றிய கல்வி உரிமைச் சட்டம் ஆறு முதல் 14 வயது வரையிலான இலவசக் கட்டாயக் கல்வியை அனைவருக்குமான உரிமை ஆக்குகிறது. நாடு சுதந்திரம் பெற்றதிலிருந்து உயர் கல்வியை அனைவருக்கும் கிடைக்கச் செய்வதற்குப் பல்வேறு முயற்சிகளை அரசுகள் மேற்கொண்டுவருகின்றன.
இருந்தாலும் தரமான கல்வி அனைவருக்கும் கிடைக்கவும் கல்வியின் உண்மையான நோக்கங்கள் நிறைவேறவும் கல்வித் துறையில் பல்வேறு சீர்திருத்தங்கள் தேவைப்படுகின்றன. ஆனால், சீர்த்திருத்தங்கள் என்ற பெயரில் எடுக்கப்படும் பல நடவடிக்கைகள் இதுவரை அடைந்துள்ள முன்னேற்றத்தையும் பின்னுக்கு இழுத்துச் சென்றுவிடும் என்ற அச்சத்தைக் கிளப்புவதாக உள்ளன.
2019-ல் மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்ட முக்கியமான கல்வித் துறை நடவடிக்கைகளையும் அவற்றுக்குக் கிடைத்த எதிர்வினையையும் தொகுத்துப் பார்த்தால் ‘கல்வித் துறை சீர்திருத்தங்கள்’ குறித்த அச்சம் வலுப்பெறுகிறது.
பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு
இந்த ஆண்டு தொடக்கத்தில் பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க இந்திய அரசு சட்டம் நிறைவேற்றியது. பொதுப் பிரிவினருக்குக் குறிப்பாக, இட ஒதுக்கீடு பிரிவில் வராத சாதிகளைச் சேராதவர்களில் பொருளாதார ரீதியாகப் பின்தங்கியவர்களுக்கு உயர்கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் இட ஒதுக்கீடு வழங்க இந்தச் சட்டம் வழிவகுக்கிறது.
அதே நேரம் சமூக ரீதியாகப் பின்தங்கியவர்களுக்கு அளிக்கப்பட்டுவரும் இட ஒதுக்கீடு குறைக்கப்படாது என்று அரசு கூறியுள்ளது. இதனால் மொத்த இட ஒதுக்கீட்டின் அளவை 10 சதவீதம் உயர்த்த வேண்டிவரும். இதற்காக அரசியல் சாசனத்திலும் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இட ஒதுக்கீட்டுக்கான உச்ச வரம்பு 50 சதவீதம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில் இந்தச் சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவது சமூக நீதிக்கு எதிரானது என்று பல அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் எதிர்த்துவருகின்றன.
புதிய கல்விக் கொள்கை
2017-ல் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் புதிய தேசிய கல்விக் கொள்கையை உருவாக்குவதற்கு இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கே.கஸ்தூரிரங்கன் தலைமையில் ஒரு குழுவை அமைத்தது. 2019-ல் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு மீண்டும் ஆட்சியமைத்திருக்கும் நிலையில், மே 31 அன்று கஸ்தூரிரங்கன் குழு தேசிய கல்விக்கொள்கை வரைவை அரசிடம் சமர்ப்பித்தது. மழலையர் கல்வி முதல் உயர்கல்விவரை கல்விமுறை, ஆசிரியர் தகுதி. ஆசிரியர்கள் நியமனம், கல்வித் துறையை ஒழுங்குபடுத்தும் அமைப்புகள் ஆகியவை சார்ந்து பல்வேறு மாற்றங்களை இந்த வரைவு பரிந்துரைத்துள்ளது.
தாய்மொழிவழிக் கல்வியை வலியுறுத்தும் அதே வேளையில் மும்மொழிக் கொள்கையையும் பரிந்துரைக்கிறது. இது இந்தி திணிப்புக்கு வழிவகுக்கும் என்று தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் எதிர்க்கப்பட்டது. ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பீட்டுத் (பொதுத்) தேர்வு நடத்துதல், உயர் கல்வியைக் கட்டுப்படுத்த தேசிய உயர் கல்வி ஒழுங்குமுறை ஆணையம் என்ற ஒற்றை அமைப்பை உருவாக்குதல், அனைத்துப் பட்டப்படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு நடத்துதல் போன்ற பரிந்துரைகளும் எதிர்க்கப்பட்டன.
பத்து வயதில் பொதுத் தேர்வு
நடப்புக் கல்வி ஆண்டு முதல் ஐந்தாம் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத் தேர்வு நடத்தப்படும் என்றும் இந்தத் தேர்வில் தேர்ச்சியடையாத மாணவர்களை அதே வகுப்பில் மீண்டும் படிக்க வைக்கும் நடைமுறைக்கு முதல் மூன்றாண்டுகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்படும் என்று தமிழகப் பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
பொதுத் தேர்வு நடத்தினால்தான் மாணவர்கள் கல்வி மீது போதிய அக்கறை எடுத்துக்கொள்வார்கள், ஆசிரியர்களும் முழுப் பொறுப்பை உணர்ந்து செயல்படுவார்கள் அதன் மூலம் கல்வித் தரம் மேம்படும் என்று அரசு கூறுகிறது. ஆனால், தரத்தை உயர்த்த பொதுத் தேர்வு தேவையில்லை என்றும் 10, 13 வயது சிறார்களுக்குப் பொதுத் தேர்வு என்பது மிகப் பெரிய உளவியல் தாக்குதல் என்றும் கல்வித் துறை செயற்பாட்டாளர்களும் உளவியல் நிபுணர்களும் இதை எதிர்க்கின்றனர்.
மருத்துவக் கல்விக்கு இன்னொரு தேசியத் தேர்வு
மருத்துவச் சேவைகளையும் மருத்துவக் கல்வியையும் சீரமைக்கும் நோக்கில் தேசிய மருத்து ஆணையச் சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. இந்தச் சட்டம் மருத்துவக் கல்விக்கான ஒழுங்காற்று வாரியமாக செயல்பட்டுவந்த இந்திய மருத்துவ கவுன்சிலை நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாக தேசிய மருத்துவ ஆணையம் என்ற அமைப்பை நிறுவுகிறது.
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 50 சதவீத இருக்கைகளுக்கான கட்டணத்தை இந்த ஆணையம் நிர்ணயிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்தப் புதிய சட்டத்தின்படி எம்பிபிஎஸ் படிப்பில் சேர ‘நீட்’ தேர்வுபோல எம்பிபிஎஸ் முடித்தவர்கள் மருத்துவராகப் பணியாற்றுவதற்கும், பட்ட மேற்படிப்பில் சேர்வதற்கும் ‘நெக்ஸ்ட்’ என்ற தேசிய அளவிலான பொதுத் தேர்வை எழுதித் தேர்ச்சி பெற வேண்டும். மருத்துவ கவுன்சில் நீக்கப்படுவது, `நெக்ஸ்ட்’ தேர்வு உள்ளிட்ட காரணங்களுக்காக இந்தச் சட்டத்தை எதிர்த்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் மருத்துவர்கள் போராட்டங்களை நடத்தினர்.
பள்ளிக் கல்வியில் இட ஒதுக்கீடு
மத்திய அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா, ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகளில் மாணவர் சேர்க்கையில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு (ஓபிசி) இட ஒதுக்கீடு வழங்க மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை பரிந்துரைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு மத்திய கேபினெட்டின் ஒப்புதல் கிடைத்தால் நாட்டில் முதல் முறையாகப் பள்ளிகளில் சமூகரீதியாகப் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு அறிமுகப்படுத்தப்படும்.
ஜேஎன்யுவின் கட்டண உயர்வு
நாட்டின் புகழ்பெற்ற உயர் கல்வி நிறுவனங்களில் ஒன்றான ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜேஎன்யு) 19 ஆண்டுகளுக்குப் பிறகு விடுதிக் கட்டணம் உயர்த்தப்பட்டது. மாதம் ரூ.20ஆக இருந்த அறைக் கட்டணம் ரூ.600ஆகவும் ரூ.10ஆக இருந்த பகிர்வு அறைக் கட்டணம் ரூ.300ஆகவும் உயர்த்தப்பட்டது. மாணவர்கள் பலர் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால் இந்தக் கட்டண உயர்வை எதிர்த்து ஜேஎன்யு மாணவர் அமைப்புகள் போராடின.
போராடியவர்கள் மீது காவல்துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யும் அளவுக்குப் போராட்டங்கள் தீவிரமடைந்தன. கட்டண உயர்வு பகுதி அளவில் குறைக்கப்பட்டது என்றாலும் முழுமையாக ரத்து செய்யும்வரை ஓயமாட்டோம் என்று மாணவர் அமைப்புகள் அறிவித்துள்ளன.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago