உயர்கல்வி: பைப்லைன் பொறியாளர் ஆக…

By செய்திப்பிரிவு

இயந்திரப் பொறியியல் பட்டதாரிகளுக்கு, பைப்பிங் பொறியியலும் (Piping Engineering) பைப்லைன் பொறியியலும் (Pipeline Engineering) நல்ல சம்பளத்துடன் கூடிய வேலைவாய்ப்பை வழங்குகின்றன.

இரண்டுக்கும் என்ன வித்தியாசம்? வீட்டு மொட்டைமாடி தொட்டியிலிருந்து நம் வீட்டுக்குள் தண்ணீர் கொண்டுவரும் குழாய் பைப்பிங். நகராட்சித் தொட்டியிலிருந்து நம் வீட்டுக்குத் தண்ணீர் கொண்டுவரும் குழாய் பைப்லைன். அதாவது ஓர் ஆலைக்குள் திரவத்தைக் கடத்தும் குழாய் பைப்பிங். ஒரு ஆலையிலிருந்து மற்றொரு ஆலைக்குத் திரவத்தைக் கடத்தும் குழாய் பைப்லைன். பைப்லைன் பொறியியலைப் பற்றிப் பார்ப்போம்.

பைப்லைனின் கதை

பெரும்பாலான பெட்ரோலியக் கிணறுகள் அரேபிய வளைகுடா நாடுகளிலேயே இருக்கின்றன. இந்தியாவைப் பொறுத்தவரை அசாம், குஜராத்தின் சில பகுதிகளில் மட்டுமே எண்ணெய் வளம் உள்ளது. சுத்திகரிப்பு ஆலைகளோ விரல்விட்டு எண்ணக்கூடிய இடங்களில் மட்டுமே உள்ளன. கச்சா எண்ணெய் கப்பல் மூலமாக இறக்குமதி செய்யப்படுகிறது.

பின்னர் சுத்திகரிக்கப்பட்டு, வெவ்வேறு நாடெங்கும் ரயில், டேங்கர் லாரி ஆகியவை மூலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. இந்த முறையில், எடுத்துச் செல்லும் செலவே உற்பத்திச் செலவுக்கு நிகராக உள்ளது. அதைத் தவிர விபத்து, கலப்படம், சுற்றுச்சூழல் மாசுபாடு உள்ளிட்ட பலவிதமான பிரச்சினைகள் வேறு. 40 வருடங்களுக்கு முன்பு ராட்சதக் குழாய்களைப் பதித்து, அதன் மூலம் பெட்ரோலியப் பொருட்களை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்கு அமெரிக்காவில் கொண்டுசெல்லப்பட்டது.

அது சிறப்பாகச் செயல்பட்டதால், உலகெங்கும் இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்தது. பைப்லைன்களை நிறுவுவதற்கு செலவு அதிகம்தான். ஆனால், இதன் நீடிக்கும் காலம் 30 முதல் 40 ஆண்டுகள் என்பதால், பெட்ரோலியப் பொருட்களை எடுத்துச் செல்லும் செலவு வெகுவாகக் குறைந்துவிடுகிறது. இதனால், தொடக்கத்தில் ஊர்விட்டு ஊர் சென்ற பைப்லைன்கள் இப்போது நாடு விட்டு நாடு நீள்கின்றன. இந்தியா முழுவதையும் பைப்லைனால் இணைக்கும் திட்டம் வெகுவேகமாக நடைமுறைப்படுத்தப்படுகிறது.

என்னென்ன வேலைகள்?

பைப்லைன் வடிவமைப்புப் பொறியாளர் (Pipeline Design Engineer), பைப்லைன் ஸ்டிரெஸ் பொறியாளர் (Pipeline Stress Engineer), பைப்லைன் மெட்டீரியல் பொறியாளர் (Pipeline Material Engineer), பைப்லைன் வழியமைப்புப் பொறியாளர் (Pipeline Routing Engineer), பைப்லைன் சீரமைப்புப் படம் வரைபவர் (Pipeline Alignment Engineer) - உள்ளிட்ட பல வேலைவாய்ப்புகள் இந்தத் துறையில் உள்ளன. பைப்லைன் வடிவமைப்புப் பொறியாளரின் பணி, குழாயினுள் செலுத்தப்படும் திரவம் அல்லது வாயு, அதன் வெப்பம், அழுத்தம், சூழலின் தட்பவெப்பம் ஆகியவற்றைப் பொறுத்து குழாய் அளவையும் தடிமனையும் வடிவமைப்பது.

பைப்லைன் ஸ்டிரெஸ் பொறியாளரின் பணி, குழாயினுடைய வளைவின் (Pipe bend) ஆரம், குழாய் தாங்கி (Pipe Support), குழாய் தாங்கியின் வகை (Type of Pipe Support) ஆகியவற்றைத் தீர்மானிப்பது. பைப்லைன் வழிவமைப்புப் பொறியாளரின் பணி குழாய் செல்லும் பாதையில் உள்ள மேடு பள்ளம், சாலைகள், ரயில் தண்டவாளங்கள், மலைகள், ஆறுகள், விவசாய நிலங்கள், மக்கள் வசிக்கும் பகுதிகள் ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு வழித்தடத்தை வடிவமைப்பது.

பைப்லைன் மெட்டீரியல் பொறியாளரின் பணி எந்த வகை உலோகத்தைப் பயன்படுத்துவது என்பதைத் தீர்மானிப்பது. பைப்லைன் சீரமைப்புப் பொறியாளரின் பணி, சர்வேயர் கொடுக்கும் வரைபடத்தில் மேலே சொல்லப்பட்ட மற்ற பொறியாளர்கள் கொடுக்கும் தகவல்களைச் சேர்த்துக் குழாய் சீரமைப்பு வரைபடம் (Pipeline Alignment Sheets) வரைந்து, அதைக் கட்டுமானப் பணிக்குக் கொடுப்பது.

எங்கே படிக்கலாம்?

உத்தராகண்டின் தலைநகரமான டேராடூனில் பெட்ரோலியம், எரிசக்தி படிப்புக்கான பல்கலைக்கழகம் (University of Petroleum and Energy Studies -UPES) உள்ளது. ஆசியாவின் முதல் அடிப்படைக் கல்வி நிறுவனம் என்ற பெருமை இந்தப் பல்கலைக்கழகத்துக்கு உண்டு. 1,527 பணியிடங்களை நிரப்புவதற்காகக் கடந்த ஆண்டு இங்கே நடைபெற்ற பிரம்மாண்ட வளாக நேர்காணலில் 1, 447 மாணவர்களுக்கு வேலை கிடைத்தது. அதுவும் ஆண்டுக்கு 30 லட்ச ரூபாய் சம்பளம்வரை அளிக்கப்பட்டது.

இந்த நிறுவனத்தில் பைப்லைனில் எம்.டெக். (M.Tech) படிக்கலாம். இந்த இரண்டு ஆண்டுப் படிப்பை முடித்தால் வேலைக்கு உத்தரவாதம் உண்டு. இதைத் தவிர மும்பை ஐ.ஐ.டி., பூனேவில் உள்ள மகாராஷ்டிரா இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி (Maharashtra Institute of Technolgy -MIT), மும்பையில் உள்ள சுவித்யா தொழில்நுட்பப் பயிலகம், ஷ்ரத்தா தொழில்நுட்பப் பயிலகம் (Shradda Institute of Technology) ஆகியவற்றில் படிக்கலாம். ASTS Global -ல் ஆன்லைன் மூலமாக ஆறு மாதங்களில் PG Diploma படிக்கலாம், ASTS Global-ன் பிரிவு சென்னையிலும் உள்ளது. நொய்டா, ஜெய்பூர் ஆகிய நகரங்களில் உள்ள கெய்ல் பயிற்சியகமும் (GAIL Training Institute) இந்தத் துறையில் பயிற்சி அளிக்கிறது.

மனத்தளவில் தயாராக வேண்டும்

டேராடூன் நிறுவனத்தில் எம்.டெக். படித்தால் வேலை நிச்சயம். அதைத் தவிர சான்றிதழ் பெற்று இந்தத் துறையில் எளிதாக நுழையலாம். இந்தத் துறையைப் பொறுத்தவரை பட்டதாரிகள் பெரிய நிறுவனங்களில் மட்டுமே வேலைக்குச் செல்ல நினைக்காமல் சிறிய நிறுவனங்களிலும் வேலைக்குச் செல்லத் தயாராக இருக்க வேண்டும். ஏனென்றால், இத்துறையைப் பொறுத்தவரை அனுபவத்துக்கே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்