மனசு போல வாழ்க்கை 24: உடலைக் கட; மனம் அறி

By செய்திப்பிரிவு

டாக்டர். ஆர். கார்த்திகேயன்

உடலை அறிந்துகொள்ள உடலைக் கடந்து நோக்குவது அவசியம். அதனால்தான் உடலின் பிரச்சினைகளுக்கு உடல் கடந்த காரணங்களும் புலனாகின்றன. கீழ் முதுகில் பிரச்சினை எதனால் என்றால், பாதுகாப்பின்மை என்று தெரிய வருகிறது. தலைவலி ஏன் என்று யோசித்தால் தன்னை நொந்துகொள்ளும் மனநிலை இருப்பது புரிகிறது. ஏன் கழுத்து பிடித்துள்ளது என்று ஆராய்ந்தால், அதற்குப் பிடிவாதம் காரணமாகத் தெரியும். உடலைக் கடந்தால் மனம் பற்றிய அறிவு வரும்.

உடலின் வலியை மருத்துவ சிகிச்சை மூலம் உடலில் மாற்றம் ஏற்படுத்தியும் சரிசெய்யலாம். அல்லது உடலின் வலியை உளவியல் சிகிச்சை மூலம் மனத்தை மாற்றியும் சரிசெய்யலாம். எதைத் தேர்ந்தெடுப்பது என்பது அவரவர் நம்பிக்கை, வசதி, உரிமை சமபந்தப்பட்ட விஷயம். அதுபோல் மனப்பிரச்சினையைப் புரிந்துகொள்ள மனத்தைக் கடந்து போகலாம். உடலை மனம் பார்த்தல் எளிது. மனத்தை மனம் பார்க்கப் பழக்கம் வேண்டும். மனத்தைக் கடந்து மனத்தைப் பார்ப்பது என்பது அதனினும் கடினம். என்ன, குழப்புகிறேனா?

மனத்தை மனம் பார்த்தல்

அதனால்தான் மேற்கத்திய மருத்துவ முறையினர் மனப்பிரச்சினைகளுக்கு உடல் காரணங்களைக் கண்டுபிடித்து சரிசெய்ய நினைக்கின்றனர். துக்கமா? அது மூளையில் உள்ள சுரப்பிகளின் குறைபாடு. அது சுரக்க மருந்து தந்தால் துக்கம் போகும். இப்படி ஒரு வழிமுறையைதான் சைக்கியாட்ரி முன்னெடுக்கிறது.

அது தவறில்லை. இந்த நோய்க்கு இந்த உடல் குறைபாடு அல்லது மனக் குறைபாடு ஏற்படும். இந்த மருந்தால் உடலில் அதை மாற்றி, இப்படிச் சரிசெய்யலாம் எனும் மருத்துவ முறை பல அவசரச் சிகிச்சை முறைகளில் பெரிதும் பயன்படுகிறது.

அதையடுத்து உளவியலாளர்கள் உடல், மன நோய்களுக்கு மனத்தைக்கொண்டு எப்படி மருந்தில்லாமல் குணமாக்கலாம் என்று நிரூபித்தனர். நம் எண்ணங்கள், உணர்வுகள், செயல்கள், வாழ்க்கைமுறை எனப் பல மாறுதல்கள் மூலம் ஆதாரப் பிரச்சினைகளைச் சரிசெய்தனர். பல நேரம் கூட்டுசிகிச்சை முறைகளும் கையாளப்படுவதுண்டு. ஆனால், மனத்தை மனம் பார்க்கும் முறைகூட முழுமையானது அல்ல. அதை அடுத்த கட்ட விழிப்புணர்வுக்கும் அழைத்துச் செல்ல, ஒரு மேல்நிலை அறிவு தேவைப்படுகிறது. இதை ஆன்மா என்று சொல்கிறார்கள்.

“நான் கோபப்படுவது எனக்குத் தெரிகிறது.” அப்படி என்றால் கோபம் கொள்வது ஒரு மனம். அதைப் பார்ப்பது எது? இன்னொரு மனமா? அல்லது மனத்தின் ஒரு பகுதியா? இதைத்தான் ஆன்மா என்கிறார்கள். மனத்தின் செயல்பாடுகளைக் கவனிக்கும் ஆற்றல் ஒன்று கட்டாயம் இருக்கிறது. அதை ஆழ்மனம் என்று சொல்லலாம். ஆன்மா என்று சொல்லலாம்.

தெய்வம் எனச் சொல்லலாம். ஆனால், அது மனத்தைக் காட்டிலும் உயர்ந்த நிலையில் உள்ளது என்பதை உறுதியாகச் சொல்ல முடியும். அந்த ஆழ்ந்த நிலைதான் நம் மனத்தின் எல்லா செயல்பாடுகளையும் உள்ளடக்கிய பெருங்கடல். அதனுடன் தொடர்பு கொள்கையில்தான் மனம் அமைதிகொள்கிறது. மனம் தன்னைப் புதுப்பித்துக் கொள்கிறது. திருந்துகிறது. தன்னை உணர்கிறது. எல்லா மேன்மைகளும் பிறக்கின்றன.

சும்மா கவனியுங்கள்

“இத்தனை தத்துவம் எல்லாம் வேண்டாம்; என்ன செய்ய வேண்டும் என்பதை எளிமையாகச் சொல்லுங்கள்!” என்று கேட்கிறீர் களா? சரி, இப்படிச் செய்யுங்கள். உங்கள் மனத்தின் செயல்களைச் சற்றுத் தொலைவிலிருந்து பாருங்கள். எந்த விமர்சனமும் வேண்டாம். போதனையும் வேண்டாம். எதையும் கட்டுப்படுத்த வேண்டாம்.

வெறுமனே வேடிக்கை பாருங்கள். உதாரணத்துக்கு, உங்களை யாரோ ஒருவர் வெறுப்பேற்றிவிட்டார் என்று வைத்துக்கொள்வோம். என்ன எண்ணங்கள் மனத்தில் ஓடுகின்றன, என்ன வார்த்தைகளைப் பேசுகிறீர்கள், என்ன செயல்களைச் செய்கிறீர்கள், எப்படி உணர்கிறீர்கள்… இப்படி ஒரு மூன்றாம் மனிதனின் செயலை வேடிக்கை பார்ப்பதுபோல் தொடர்ந்து பாருங்கள். அவ்வளவு தான். இதனால் என்ன ஆகும்? முதலில் இந்தப் பயிற்சியைச் செய்ய முடிகிறதா என்று பாருங்கள். அது நீங்கள் எந்த நிலையில் இருக்கிறீர்கள் என்று காண்பித்து கொடுத்துவிடும்.

தேவை நிம்மதி

“அவன் பேசினான். நான் பதிலுக்கு நாக்கைப் பிடுங்கற மாதிரி நல்லா நாலு கேள்வி கேட்டுட்டு வந்திட்டேன்!” என்று சொன்னால், அந்தச் செய்கை ஒரு பிரவாகம்போல் தன்னிச்சையாக நடந்த ஒன்று. மனம் செயலில் மட்டும்தான் ஈடுபட்டுள்ளது. மனத்தைப் பார்க்கும் செயல் அங்கு நடைபெறவில்லை என்று பொருள்.

“அவன் பேசினான். எனக்குக் கோபம் வந்துச்சு. அதைக் கவனிச்சேன். குறைக்க நினைச்சேன். ஆனா நல்லா நாலு வார்த்தை கேட்டாதான் மனசு லேசாகும்னு தோணிச்சு. எனக்குத் தெரியுது நானும் அவன் கோபத்தைத் தூண்டற மாதிரிதான் பேசுறேன்னு. என்னால தடுக்க முடியலை. பேசிட்டு வந்தவுடன், ஒரு திருப்தி வந்துச்சு. அப்புறம் யோசிச்சா அவ்வளவு காட்டமா பேசியிருக்க வேண்டாம்னு தோணிச்சு. மொத்தத்தில இந்த விஷயம் என்னை நிம்மதியா இருக்க விடலைன்னு நல்லா தெரியுது” இதுதான் முதல் கட்ட கூர்நோக்குதல்.

விழிப்பு நிலை

தன்னை அறியாமல் மனம் தன் தன்மையை மாற்றத் தயாராகும். இந்த விழிப்பு நிலை பெறத்தான் பக்தி இயக்கம் கடவுளைப் பரிந்துரைசெய்கிறது. உளவியலாளர்கள் ஆழ்மன ஆய்வுக்கு அழைக்கிறார்கள். தியானம் எல்லா தரப்புக்கும் பொதுவானதாகத் தெரிகிறது. கடவுளோ, குருவோ, சிகிச்சையாளரோ, உற்ற உறவோ யாரோ ஏதோ ஒன்று இந்த உற்று நோக்கலை அறிமுகம் செய்ய முடியும். ஆனால், தன் மனத்தின் சித்து விளையாட்டுக்களை இனம் அறிந்து அதை வசப்படுத்தி தன் வாழ்க்கையின் குறிக்கோள்களை அடையும் முயற்சி தனிமனிதர்களைச் சார்ந்தது.

மனத்தை விசாரணைக்கு உட்படுத்த ஒரு வழிகாட்டுதல் தேவைப்படுகிறது. அதை அளிப்பவரைத்தான் குரு என உயர்த்திப் பிடிக்கிறது நம் உலகம். குரு வர என்ன செய்ய வேண்டும்? அதற்குத் தகுதிப்பட வேண்டும். உங்கள் மனதை வேடிக்கை பார்க்க ஆரம்பியுங்கள். உங்கள் வாழ்க்கை பற்றிய பல கேள்விகளுக்கு விடை கிடைக்கும்!

கட்டுரையாளர் தொடர்புக்கு:
gemba.karthikeyan@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

5 days ago

சிறப்புப் பக்கம்

6 days ago

சிறப்புப் பக்கம்

6 days ago

சிறப்புப் பக்கம்

6 days ago

சிறப்புப் பக்கம்

6 days ago

சிறப்புப் பக்கம்

6 days ago

சிறப்புப் பக்கம்

8 days ago

மேலும்