மன்னிப்பு வழங்குதல் ஓர் ஆன்மிகச் சுத்திகரிப்பு என்றுதான் துறவிகள் நம்பினார்கள். தங்கள் மத நம்பிக்கைக்கு ஏற்ப, இதை அவர்கள் கையாண்டார்கள். பிறகு, அதன் சுகமளிக்கும் பலனைக் கண்டு உளவியல் சிகிச்சையில் இதைப் பெரிய அளவுக்குப் பயன்படுத்த தொடங்கினார்கள். தற்போது மருத்துவ சிகிச்சையில் மன்னிப்பு வழங்குதலின் பலன்கள் ஆராயப்படுகின்றன. மன்னிப்பு வழங்கும்போது, உடல் நோய் எதிர்ப்பாற்றலைப் பெறுகிறது. புற்றுநோய் வருவதைத் தடுக்கிறது; புற்றுநோய் சிகிச்சை பெறுபவர்களில் மன்னிக்கும் குணம் கொண்டவர்கள் விரைவில் குணமடைகிறார்கள்.
மன்னிக்கும் டயரி
மன்னிப்பு வழங்கவே ஒரு டயரி வைத்துக்கொள்ளும் பழக்கத்தை உளவியல் சிகிச்சையாளர்கள் வலியுறுத்துவார்கள். தினசரி மன்னிப்பு கேட்டு, அதை முழுமையாக எழுதி வெளியேற்றுவது மிகச் சக்தி வாய்ந்த சிகிச்சை முறை. ஒரு நாளில் யார் யார் மீது கோபமும் பகையும் வெறுப்பும் அதிருப்தியும் கொண்டீர்களோ, அவர்கள் ஒவ்வொருவரையும் மனதார அழைத்து மன்னிப்புக் கோரி அவர்களை விடுவியுங்கள். நடந்தவற்றை தர்க்கரீதியாகப் பார்த்தால், உங்கள் பக்கம் நியாயம் இருக்கலாம். மன்னிப்பு கேட்பதே தவறு என்றுகூடத் தோன்றலாம். ஆனால், மன்னிப்பு வழங்குதல் மட்டுமே உங்கள் மனதுக்கும் உடலுக்கும் நல்லது என்று உணரும்போது, அதை இயல்பாகச் செய்வீர்கள்.
அன்பும் கோபமும்
யாரிடமெல்லாம் உங்களுக்குத் தினசரி கோபம் வருகிறது என்று பட்டியல் இட்டுப் பார்த்தால், உங்களுக்கு ஓர் ஆச்சரியம் காத்திருக்கும். நீங்கள் அதிகம் அன்பு செலுத்துவோர் மீதுதான் நிராசைகளும் ஏமாற்றங்களும் கோபங்களும் அதிகம் இருக்கும். குறிப்பாகச் சொன்னால், நீங்கள் யாரிடம் அதிக நன்மை பெறுகிறீர்களோ, அவர்கள் மேல்தான் அதிக ஏமாற்றங்கள் இருக்கும். பெற்றோர்கள், ஆசிரியர்கள், மேலதிகாரிகள், வாழ்க்கைத் துணை, பிள்ளைகள், நமக்கு உதவும் உறவுகள் என்று யாரெல்லாம் நமக்கு அதிகம் செய்கிறார்களோ, அவர்கள் மேல்தான் எல்லா வருத்தங்களும் இருக்கும். அதிகம் பெறாத உறவுகளில் எதிர்பார்ப்புகளும் குறைவு; ஏமாற்றங்களும் குறைவு.
உதாரணத்துக்கு ஒரு குடும்பத்தில் தந்தை சரியில்லை; எதுவும் செய்யவில்லை என்றால் அது பெரும்துயராக இருந்தாலும், அதை விரைவில் மனம் ஏற்றுக்கொள்ளும். நாளடைவில் பெரிதாக எதையும் எதிர்பார்க்காது. ஆனால் தந்தைக்கும் சேர்த்துப் பங்களிக்கும் தாயின் மேல் அன்பும் எதிர்பார்ப்புகளும் மிக அதிகமாக இருக்கும். அம்மா செய்யும் தவறுகள் பெரிதாகத் தெரியும். இது ஒவ்வோர் உறவுக்கும் பொருந்தும். உங்கள் மீது அன்பு செலுத்தும் காதலர் அல்லது வாழ்க்கைத் துணையின் சிறு குறைகள் பூதாகரமாகத் தெரியும். உங்களை மதிக்காத, அன்பு செலுத்தாத பலரை மிக இயல்பாக நடத்துவீர்கள். அடிப்படை இதுதான், செய்யச் செய்ய எதிர்பார்ப்புகள் ஏறும். ஏமாற்றங்கள் எகிறும். செய்ததைப் பார்க்காத மனம், செய்யாததைப் பூதக்கண்ணாடி வைத்துப் பார்க்கும்.
ஒரு படத்தில் நடிகர் சூரி சொல்லும் வசனம் இதை அழகாக உணர்த்தும்: “செய்யாதவனை விட்டுருவீங்க. செஞ்சவனைத்தான் வச்சு செய்வீங்க!”
மனத்தின் இயல்பு இது. இல்லாததைத் தேடி ஓடுவது. ஏமாற்றம் கொள்வது; அஞ்சுவது; சீறுவது. இதை சற்று உற்று நோக்கினால் நம் மனம் நம் வாழ்க்கைக்கு எதிராகச் செய்யும் உள்ளடி வேலைகள் புரியும்.
பலிகடா உறவுகள்
இரு தோழிகள் பேசிக்கொள்கிறார்கள்.
“பிறந்த நாளுக்கு ஒண்ணும் தரலை. வெறுங்கையை வீசிட்டு வந்து நின்னார். அதுலேர்ந்துதான் பேசறதை நிறுத்திட்டேன். அவ்வளவு சாதாரணமாப் போயிட்டோமா என்ன?”
“அடியே... உம் புருஷன் பரவாயில்லை. எங்காளு நான் சம்பாதிச்ச காசு நூறு ரூபா இருந்தாலும் எடுத்துட்டு குடிக்க கிளம்பிடுவாரு. உனக்கு இன்சூரன்ஸ் இருக்கு. எனக்கு ஏதாவது வந்தா எந்த நாதியும் கிடையாது.”
“அவரு முதல்லேர்ந்து அப்படிடீ. இவருக்கென்ன கேடு? போன வருஷம் அவங்க அக்கா பொண்ணுக்கு மட்டும் போயி கரெக்டா சீர் பண்ண தெரியுதுல்ல? அப்ப நான்னா என்ன வேணா பண்ணலாம்... கேக்க மாட்டான்னுதானே எண்ணம்?”
இதற்கு முன்னும் பின்னும் என்ன நடந்திருக்கும் என நீங்களே ஊகித்துக்கொள்ளுங்கள். வரங்களை மறக்கும்; சாபங்களைத் தினம் தேடித்தேடி கற்பனை செய்துகொள்ளும். இந்த மன விளையாட்டின் பலிகடாக்கள் நம் நெருங்கிய உறவுகள்.
ஏமாற்றமும் கோபமும் நெருங்கிய உறவுகளில் இருந்தால், அது ஒரு மனப்பழக்கமாகி வருவோர் போவோரிடமெல்லாம் வருத்தம் கொள்ள வைக்கும்.
முகம் தெரியாத ஆட்கள் முதல் குடும்பத்திலுள்ள நெருங்கிய உறவுகள்வரை யார் மீது வருத்தமும் கோபமும் கொண்டாலும், அவை தங்கிப் போகும் பாத்திரம் உங்கள் உடல்தான். அத்தனை உஷ்ணத்தையும் அழுக்கையும் காலகாலமாக சேர்த்து வைத்தால் அந்தப் பாத்திரம் என்னாகும்? அதைத் தினசரி துலக்குதல் நன்று. தவறு யார் மீது இருந்தாலும் வந்த கோபத்தை வெளியேற்றி, எதிராளியிடம் மானசீகமாக மன்னிப்புக் கோரி, அமைதி கொள்ளுவதே புத்திசாலித்தனம்.
வெப்பத்தைத் தணியுங்கள்
இப்படி அழுக்கும் உஷ்ணமும் நாளும் சேராமல் இருந்தால், நாள்தோறும் மன்னிப்பு கேட்டு கழுவி வைக்க வேண்டிய அவசியமே இருக்காதே என்று தோன்றுகிறதா? அதுவும் சாத்தியம்தான். மனம் கோபம் கொள்ளும்போதே, அதை உணர்ந்து மன்னிப்பு கோரி வெளியேற்றிவிடுவது.
“நீ சொல்வதைக் கேட்டால் எனக்குக் கோபம் வருகிறது. ஆனால், கோபம் கொள்ளுதல் என் உடலுக்கும் நம் உறவுக்கும் நல்லதல்ல. எதை முடியுமோ அதை மட்டும் செய்யலாம். வீண் வார்த்தைகள் வேண்டாம். நான் கோபம் கொண்டதற்கும் மன்னிப்பு கேட்கிறேன். நீயும் இந்தக் கோபத்திலிருந்து வெளியேறி விடுதலை கொள்!” என்று அந்த நொடியிலேயே விழிப்புணர்வுடன் பிரார்த்திக்கலாம்.
எப்படி அந்த விழிப்புணர்வை அடைவது? தியானம்தான் அதற்குச் சிறந்த வழி. அந்த அளவு விழிப்புணர்வு வரும்வரை தினசரி மன்னிப்புக் கோருதல் அவசியமாகிறது.
- டாக்டர் ஆர். கார்த்திகேயன்,
தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
5 days ago
சிறப்புப் பக்கம்
6 days ago
சிறப்புப் பக்கம்
6 days ago
சிறப்புப் பக்கம்
6 days ago
சிறப்புப் பக்கம்
6 days ago
சிறப்புப் பக்கம்
6 days ago
சிறப்புப் பக்கம்
8 days ago