சேதி தெரியுமா? - சென்னை தலைமை நீதிபதி

நவ.11: சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக அம்ரேஷ்வர் பிரதாப் சாஹி பதவியேற்றார். தலைமை நீதிபதி விஜயா தஹில்ரமாணி ராஜினாமா (செப்.6) செய்ததைத் தொடர்ந்து, இவர் நியமிக்கப்பட்டார்.

பாட்னா தலைமை நீதிபதி
நவ.11: பாட்னா உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக சஞ்சய் கரோல் நியமிக்கப்பட்டுள்ளார். திரிபுரா உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த அவர், தற்போது பாட்னாவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

மகாராஷ்டிரம்: குடியரசுத் தலைவர் ஆட்சி
நவ.12: மகாராஷ்டிரத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு மத்திய அமைச்சரவை பரிந்துரைத்தது. சிவ சேனா, என்.சி.பி., காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளும் கூட்டணி ஆட்சி அமைக்க முயன்றுகொண்டிருந்த நிலையில், குடியரசுத் தலைவர் ஆட்சி நடைமுறைக்கு வருவதாக ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி அறிவித்தார்.

தமிழகம்: 5 புதிய மாவட்டங்கள்
நவ. 13: தென்காசி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி ஆகிய ஐந்து புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டதற்கான அரசாணையைத் தமிழக அரசு வெளியிட்டது. தமிழ்நாட்டு மாவட்டங்களின் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது.

மேகாலய தலைமை நீதிபதி
நவ.13: மேகாலய உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக முஹம்மது ரஃபீக் பதவியேற்றார். இங்கு தலைமை நீதிபதியாக இருந்த அஜய் குமார் மிட்டல், மத்திய பிரதேசத் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டதால், இவர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆர்.டி.ஐ. வரம்பில் தலைமை நீதிபதி
நவ.13: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி அலுவலகமும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் வரும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இது தொடர்பாக, டெல்லி உயர் நீதிமன்றம் 2010-ல் வழங்கிய தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.

ரஃபேல் வழக்குத் தீர்ப்பு
நவ.14: 2016-ல் மத்திய அரசு, பிரான்ஸின் டஸ்ஸோ ஏவியேஷன் நிறுவனத்திடம் 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்கியதில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென்று தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

7 பேர் அமர்வில் சபரிமலை வழக்கு
நவ.14: சபரிமலை கோயிலுக்கு அனைத்து வயதுப் பெண்களும் செல்ல 2018-ல் அனுமதி வழங்கி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பின் மீதான மறுசீராய்வு மனுவை விசாரித்த ஐந்து நீதிபதிகள் அமர்வு, இந்த வழக்கை ஏழு நீதிபதிகள் அமர்வுக்குப் பரிந்துரைத்துள்ளது. அதுவரை, 2018-ல் வழங்கிய தீர்ப்பு நடைமுறையில் இருக்கும்.

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி
நவ. 18: இந்திய உச்ச நீதிமன்றத்தின் 47-ம் தலைமை நீதிபதியாக சரத் அரவிந்த் போப்டே பதவியேற்றார். அவரது பதவிக்காலம் 2021 ஏப்ரல் 23 வரை நீடிக்கிறது. குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

இலங்கையின் புதிய அதிபர்
நவ. 18: இலங்கையின் புதிய அதிபராகக் கோத்தபய ராஜபக்ச பதவியேற்றார். இலங்கை அதிபர் தேர்தலில் 13 லட்சத்துக்கு மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றிபெற்றார்.

- தொகுப்பு: கனி

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE