ச.கோபாலகிருஷ்ணன்
தமிழகத்தில் நடப்புக் கல்வியாண்டு முதல் 5, 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு அறிமுகப்படுத்தப்பட உள்ளது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.செங்கோட்டையன் செப்டம்பர் மாதம் இந்தத் தகவலை உறுதிப்படுத்தினார். இந்தப் பொதுத் தேர்வில் தோல்வியடையும் மாணவர்களுக்கு மறுதேர்வு எழுத வாய்ப்பளிக்கப்படும். அதிலும் தோல்வியடைபவர்களை அதே வகுப்பில் மீண்டும் படிக்க வைக்க வேண்டும். ஆனால் தோல்வி அடையும் மாணவர்களை அதே வகுப்பில் நிறுத்திவைப்பதற்கு முதல் மூன்று ஆண்டுகளுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
உயர்கல்விப் படிப்புகள் பலவற்றுக்கு தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகளை எழுத வேண்டியிருக்கிறது. இவற்றை எதிர்கொள்ளத் தமிழக மாணவர்களைத் தயார்படுத்தவும் தொடக்கக் கல்வி நிலையிலேயே கல்வியைப் போதிய அக்கறையுடன் மாணவர்கள், ஆசிரியர்கள் அணுக வைப்பதற்குமே பொதுத் தேர்வு அறிமுகப்படுத்தப்படுவதாக தமிழக கல்வித் துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
கஸ்தூரி ரங்கன் குழு மத்திய அரசிடம் அளித்துள்ள தேசிய புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையில் 5,8ஆம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வு நடத்த வேண்டும் என்று பரிந்துரைத்திருந்தது. அந்தப் பரிந்துரையின் அடிப்படையில் தமிழக அரசு இந்த முடிவை எடுத்திருப்பதாகத் தெரிகிறது. ஆனால் 14 வயது நிறையாத குழந்தைகளுக்குப் பொதுத் தேர்வு நடத்துவதும் அதை உடனடியாக நடைமுறைப்படுத்துவதில் காட்டப்படும் அவசரமும் பல்வேறு தரப்பினரின் எதிர்ப்பைச் சந்தித்துள்ளது.
கல்வி உரிமைச் சட்டத்துக்கு எதிரான முடிவு
அரசின் இந்த அறிவிப்பு 2009-ல் நிறைவேற்றப்பட்ட கல்வி உரிமைச் சட்டத்துக்கும் அதன் நோக்கங்களுக்கும் முற்றிலும் எதிரானது என்கிறார் கல்விச் செயற்பாட்டாளரும் பொதுப்பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச் செயலாளருமான பிரின்ஸ் கஜேந்திரபாபு. “2009-ல் அறிமுகப்படுத்தப்பட்ட கல்வி உரிமைச் சட்டம், தேர்வுகளால் குழந்தைகளுக்கு ஏற்படும் அச்சத்தையும் பதற்றத்தையும் தவிர்க்கும் வகையில் ஒன்று முதல் எட்டாம் வகுப்புவரை எந்த மாணவரையும் ஃபெயிலாக்கக் கூடாது என்று கூறியது.
அந்தச் சட்டத்தின் பிரிவு 29 உட்பிரிவு 2ஜி, ’பதற்றம் (anxiety), அதிர்ச்சி (trauma), அச்சம் (fear) இல்லாமல் குழந்தைகள் கல்வி கற்கும் சூழல் உறுதி செய்யப்பட வேண்டும் என்கிறது. அதற்கு அடுத்த உட்பிரிவான 2ஹெச், குழந்தைகளுக்கு தொடர் - முழுமதிப்பீட்டு முறையின்படி (continuous and comprehensive evaluation) பள்ளியில் குழந்தையின் செயல்பாடுகளை மதிப்பிட்டு, குறைபாடுகளைக் களைய வேண்டும் என்கிறது. அதே சட்டத்தின் பிரிவு 30 உட்பிரிவு 1 எட்டாம் வகுப்பு முடியும்வரை எந்த ஒரு குழந்தையையும் வாரியத் தேர்வு (பொதுத் தேர்வு) எழுத வைக்கப்படக் கூடாது’ என்கிறது.
இந்த இரண்டு பிரிவுகளும் இன்றுவரை திருத்தப்படவில்லை. 16-ம் பிரிவுதான் திருத்தப்பட்டுள்ளது. அதில் நான்கு உட்பிரிவுகள் உள்ளன. திருத்தப்பட்ட வடிவத்தில்கூட 5, 8ஆம் வகுப்புகளின் முடிவில் வழக்கமான தேர்வு (Regular exam) நடத்தப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
வாரியத் தேர்வு என்றோ பொதுத் தேர்வு என்றோ கூறப்படவில்லை. இப்படி நடத்தப்படும் தேர்வில் தோல்வி அடையும் மாணவர்களுக்கு உடனடி மறுதேர்வு நடத்தப்பட வேண்டும்; மறுதேர்விலும் தேர்ச்சிபெறாத குழந்தைகளை அதே வகுப்பில் நிறுத்திவைக்க வேண்டுமா வேண்டாமா என்று முடிவெடுப்பதற்கான அதிகாரம் சம்பந்தப்பட்ட மாநில அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது.
எனவே 5,8ஆம் வகுப்பு இறுதித் தேர்வுகளில் தோல்வி அடைபவர்கள் அதே வகுப்பில் தங்கவைக்க வேண்டும் என்று சட்டப்படி எந்த நிர்ப்பந்தமும் இல்லை. ஆனால் நமது பள்ளிக் கல்வித் துறை மூன்றாண்டுகளுக்குப் பிறகு, 5, 8ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் தோல்வி அடைபவர்கள் அதே வகுப்பில் நிறுத்தப்படுவார்கள் என்று கூறுகிறது. தேர்வில் தோல்வி அடையும் மாணவர்களை அதே வகுப்பில் மீண்டும் படிக்க வைப்பதால் கல்வித் தரம் அதிகரிக்கும் என்று எப்படி முடிவெடுத்தார்கள் என்பது புரியவில்லை.
இது குறித்து எந்தப் பொது விசாரணையும் நடத்தப்படவில்லை. பெற்றோர்களோ அரசுப் பள்ளி ஆசிரியர்களோ கலந்தாலோசிக்கப்படவில்லை. எந்த அறிஞர் குழுக்களும் இதற்காக நியமிக்கப்படவில்லை. திடீரென்று இந்த ஆண்டு இறுதியில் நீங்கள் பொதுத் தேர்வு எழுத வேண்டும் என்று சொல்வது மாணவர்கள், ஆசிரியர்கள் மீது நிகழ்த்தப்படும் உளவியல் தாக்குதல்” என்கிறார்.
ஒரே தேர்வில் மதிப்பிடக் கூடாது
இந்தப் பொதுத் தேர்வு மாணவர்கள் மீது ஏற்படுத்தக்கூடிய உளவியல் தாக்கத்தை விவரிக்கிறார் மூத்த உளவியல் நிபுணர் லட்சுமி விஜயகுமார். “இது முற்றிலும் அநாவசியமானது. தேர்வு குறித்த மாணவர்களின் அச்சத்தை இது அதிகரிக்கும். வீட்டில் பெற்றோரும் உறவினர்களும் 'பப்ளிக் எக்ஸாம்', 'பப்ளிக் எக்ஸாம்' என்று அதிக நெருக்கடி கொடுப்பார்கள். இதனால் தேர்வு மீது மட்டுமல்ல, கல்வியின் மீதே மாணவர்களுக்கு வெறுப்பு வந்துவிட சாத்தியம் உண்டு. அது தவிர பள்ளி என்பது பாடங்களை மட்டும் கற்பதற்கான இடமல்ல. விட்டுக்கொடுத்தல், விடாமுயற்சி போன்ற பண்புகளையும் கற்றுக்கொள்வதற்கான இடம்.
இதுபோல் ஐந்தாம் வகுப்பிலேயே பொதுத் தேர்வு வைத்தால் குழந்தைகளால் வேறு எதிலும் கவனம் செலுத்த முடியாது. படைப்புத் திறன் வளராது. விளையாட்டு உள்ளிட்ட கூடுதல் திறமைகள், எதையும் வளர்த்துக்கொள்ள முடியாது. தேர்வு என்றால் மாணவர்கள் தன்னம்பிக்கையுடனும் மகிழ்ச்சியுடனும் எதிர்கொள்வதாக இருக்க வேண்டும். அதிலும் மாணவர்களின் கல்வித் திறனை ஒரே ஒரு தேர்வை வைத்து மதிப்பிடுவதும் தவறானது.
குறிப்பிட்ட தேர்வு நாள் அன்று குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால், அந்தத் தேர்வை நன்றாக எழுத முடியாமல் போகலாம். ஒட்டுமொத்த ஆண்டுக்குமான மதிப்பீடே சிறந்தது. 10,12-ம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வு தேவையில்லை என்பதுதான் உளவியல் நிபுணர்களின் வாதம். அப்படி இருக்க 5, 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு வைப்பதையெல்லாம் ஏற்றுக்கொள்ளவே முடியாது” என்கிறார்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
5 days ago
சிறப்புப் பக்கம்
6 days ago
சிறப்புப் பக்கம்
6 days ago
சிறப்புப் பக்கம்
6 days ago
சிறப்புப் பக்கம்
6 days ago
சிறப்புப் பக்கம்
6 days ago
சிறப்புப் பக்கம்
8 days ago