இணையத்தில் வாசிப்பது எப்படி?

By செய்திப்பிரிவு

சு. அருண் பிரசாத்

இன்றைக்கு நம்மில் பெரும்பாலோர் கட்டற்ற இணைய இணைப்புடன் கூடிய உயர்ரக ஸ்மார்ட்போனைப் பயன்படுத்துகிறோம். பிறரைத் தொடர்புகொள்ள, மின்னஞ்சல் பார்க்க என்பது போன்ற அத்தியாவசிய செயல்பாடுகளைத் தாண்டி, காலை கண் விழிப்பதில் தொடங்கி, உணவருந்தும்போது, பயணத்தின்போது, இரவு தூங்கச் செல்வதற்கு முன்புவரை என ஒரு நாளின் பெரும் பகுதியைச் சமூக வலைதளங்களில் செலவிடுகிறோம்.

நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன்கள் நம்மை எப்போதும் அதன் கட்டுக்குள் வைத்திருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன; சமூக வலைதளங்களும்கூட ‘லாக் அவுட்’ செய்யத் தோன்றாத வகையில், தொடரும் நீண்ட திரையில் நம்மைத் தவழவிடுகின்றன. இதனால் நொடிக்கு ஒரு முறை அனிச்சையாக செல்பேசியை எடுத்துப் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

இவற்றின் அதீதப் பயன்பாடு வாசிப்பை இன்று பெருமளவு குறைத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. இது ஓரளவு உண்மையென்றாலும்கூட, புத்தகங்களில் இருந்த வாசிப்பு, ஒருங்கிணைப்படாத ஒன்றாக இன்றைக்கு டிஜிட்டல் கருவிகளுக்கு மாறியிருக்கிறது. இதன் விளைவாக கவனச் சிதறல், தொடர்ந்து பத்து வரிகளுக்கு மேல் வாசிக்க இயலாமை என்பது போன்ற சிக்கல்கள் வாசிப்பில் ஏற்படுகின்றன.

மேலும், இன்றைக்கு எந்தவொரு தகவலையும் நொடிக்கும் குறைவான நேரத்தில் எடுத்துவிடக்கூடிய நிலையில் நாம் இருந்தாலும், அது குறித்த ஆழ்ந்த அறிவையும் புரிதலையும் பெற்றிருக்கிறோமா என்பது கேள்விக்குரியது. இது ஒரு விஷயம் குறித்த அறிதலாக (informed) இல்லாமல், வெறும் தெரிதலுடன் (know) நின்றுவிடுகிறது.

இலவச வாசிப்பு

இத்தகைய சிக்கல்கள் இருந்தாலும், இணையத்தை அசாத்தியமான வாசிப்புக் களமாக நாம் மாற்றிக்கொள்ள முடியும். இதற்குத் தேவை வாசிப்பில் நம்முடைய விருப்பத்தையும் தேர்வையும் கண்டடைவதே! கலை, இலக்கியம், அறிவியல், தொழில்நுட்பம், நேர்காணல், மொழிபெயர்ப்பு இன்னும் பிற என பல்வேறு வகைமைகளால் ஆன கட்டுரைகள் தினமும் ஆயிரக்கணக்கில் எழுதப்பட்டு இணையத்தில் வெளியிடப்படுகின்றன. இவற்றுள் பெரும்பாலானவை இலவசமாகவே வாசிக்கக் கிடைக்கின்றன.

ஊக்குவிக்கும் தளங்கள்

Aggregator எனப்படும் Arts & Letters Daily, Three Quarks Daily போன்ற தளங்கள் பல்வேறு இணையதளங்களில் வெளியாகும் கட்டுரைகளைத் தொகுத்து ஒரே இடத்தில் நாள்தோறும் வெளியிடுகின்றன. புத்தக விமர்சனங்களுக்காக சர்வதேச அளவில் புகழ்பெற்ற லண்டன் ரிவ்யு ஆஃப் புக்ஸ், நியூயார்க் ரிவ்யு ஆஃப் புக்ஸ், லாஸ் ஏஞ்சலீஸ் ரிவ்யு ஆஃப் புக்ஸ் ஆகியவற்றுடன் நியூயார்க் டைம்ஸ், கார்டியன் போன்ற சர்வதேச நாளிதழ்களில் வெளியாகும் விமர்சனங்களையும் பட்டியல்களையும் தொடர்ந்து கவனித்துவரும்போது சமகாலப் புத்தகங்களைப் பற்றி அறியலாம். புத்தக விமர்சனத்துகென்றே தமிழில் ‘ஆம்னி பஸ்’ என்றொரு தளம் செயல்படுகிறது.

இன்றைக்குத் தமிழில் எழுதுபவர்களில் பெரும்பாலோர் தங்களுடைய இணையதளத்தில் அநேகமாக நாள்தோறும் கட்டுரைகளைப் பதிவேற்றுகின்றனர். ‘அழியாச்சுடர்கள்’ என்ற தளம் தமிழ் இலக்கியத்தின் முக்கியமான ஆக்கங்களை இலவசமாக வாசிக்கத் தருகிறது. தவிர ‘சொல்வனம்‘, ‘வாசக சாலை‘, ‘கபாடபுரம்’, ‘ஓலைச்சுவடி’, ‘அரூ’ போன்ற இணைய இதழ்கள் தமிழிலும் உள்ளன.

எப்படிப் பயன்படுத்துவது?

நம் அன்றாட வாழ்க்கையின் நெருக்கடியில் வாசிப்பதற்கே நேரமில்லை என்கிறபோது, இத்தனைத் தளங்களைத் தொகுத்து ஒவ்வொரு முறையும் அந்தத் தளத்துக்குச் சென்று வாசிப்பது என்பது சிரமமான வேலையாகத் தோன்றலாம். நம்முடைய தேர்வு, விருப்பத்தின் அடிப்படையில் சிறிது நேரம் செலவிட்டு அந்தத் தளங்களைப் பார்க்க வேண்டும். அது வெளியாகும் காலம், அந்தத் தளம் தரும் பிரத்யேகமான செய்தி போன்றவற்றின் அடிப்படையில் அந்தத் தளம் நமக்கு தேவையானதுதானா, தொடர்ந்து அந்தத் தளத்தைப் பார்க்க வேண்டுமா என முடிவுசெய்ய வேண்டும்.

கணினி, மடிக்கணினி, செல்பேசி என எதில் பார்த்தாலும் அந்தத் தளத்தை பிரவுசரில் ‘புக் மார்க்’ எனப்படும் வசதியைப் பயன்படுத்திக் குறித்துக்கொள்ள வேண்டும். அடுத்த முறை எளிதாக ஒரே சொடுக்கில் அந்தத் தளத்துக்குச் சென்றுவிடலாம். மேலும், அந்தத் தளங்களில் நம் மின்னஞ்சல் முகவரியைப் பதிவு செய்வதன்மூலம், கட்டுரைகளை நேரடியாக நம் மின்னஞ்சல் பெட்டிக்கே வரவழைக்கலாம்.

சமூக வலைதளங்களையும் தாண்டி இணையத்தின் பயன்பாடு அளப்பரியது; எல்லையற்றது. சமூக வலைதளங்களையும்கூட நாம் பயன்படுத்தும் விதத்தைப் பொறுத்து பயனுள்ளவையாக மாற்றிக்கொள்ள முடியும்.

மேற்குறிப்பிட்ட தளங்களின் சமூக வலைதளப் பக்கத்தையும் பின்தொடரலாம். கீழுள்ள இணைப்பில் முக்கியமான தளங்களுக்கான இணையச்சுட்டிகள் தொகுக்கப்பட்டுள்ளன; தளத்தின் பெயரில் சொடுக்கினால் அந்தத் தளத்துக்கு இட்டுச் செல்லும்: http://bit.ly/Vaasippu

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

5 days ago

சிறப்புப் பக்கம்

6 days ago

சிறப்புப் பக்கம்

6 days ago

சிறப்புப் பக்கம்

6 days ago

சிறப்புப் பக்கம்

6 days ago

சிறப்புப் பக்கம்

6 days ago

சிறப்புப் பக்கம்

8 days ago

மேலும்