மனசு போல வாழ்க்கை 19: மன நச்சை வெளியேற்றுங்கள்

By செய்திப்பிரிவு

டாக்டர். ஆர். கார்த்திகேயன்

கடந்த காலக் கசப்புகள் நிகழ்கால ஆரோக்கியத்தையும் வருங்கால வாழ்க்கையையும் பாதிக்கும். வேண்டாத உணர்வுகளையும் எண்ணங்களையும் எப்படி வெளியேற்றுவது என்பதை பார்த்தோம். என்னிடம் மன கிச்சைக்கு வந்த பலர் இந்த 'ரிலீஸ்' பயிற்சி மூலம் தங்கள் ஆழ்மனக் கழிவுகளை அப்புறப்படுத்தி பல உடல், மன, உறவுச் சிக்கல்களிலிருந்து விடுபட்டுள்ளனர்.

அந்த நிறுவன முதலாளிக்கு தீராத முட்டி வலி. எந்த வைத்தியமும் பலிக்கவில்லை. இரு முட்டிகளிலும் அறுவைசிகிச்சை செய்தும் முழு நிவாரணம் இல்லை. என் பயிற்சியின்போது அபர்மேஷன் பற்றிக் கேள்விப்பட்டு, அதைப் பற்றி நிறைய படித்தார். பிறகு என்னிடம் வந்தார். அவரிடம் கட்டுக்கடங்காத கோபம் இருப்பது தெரிந்தது. ஆராய்ந்தபோது, அது அவருடைய பெற்றோர்கள் மீது என்று புரிந்தது. தனக்கு சொத்தில் உரிய பாகத்தைத் தரவில்லை என்று கோபித்துகொண்டு வந்தவர், அவர்கள் இறக்கும்வரை பேசாது இருந்திருக்கிறார். இன்றும் அதற்கு வருந்தாமல், அவர்கள் மேல் கடும் அதிருப்தியில் இருந்தார். அவர் செய்ய வேண்டியது என்ன என்பதை விளக்கினேன். மன்னிப்பு வழங்குதல் எப்படி பிரச்சினைக்கு நிவாரணம் தரும் என்று அவரிடம் விளக்கினேன்.

மன்னிப்பு அளியுங்கள்

உடனே ஒப்புக்கொள்ளாத மனிதர் மீண்டும் நிறைய படித்துவிட்டு வந்தார். மன்னிப்பு அளித்தல் எப்படி ஒரு ஹீலிங் முறை என்பதை முழுமையாக நம்பி வந்தார்.
“இப்ப சொல்லுங்க டாக்டர், என்ன செய்யணும்?” என்று கேட்டார். அவரை கடந்த காலத்துக்கு அழைத்துச் சென்று, அவருடைய பெற்றோரை மன்னிக்கச் செய்தேன். எப்படி? உங்களுக்கு சொல்லித்தந்த அபர்மேஷன் முறையில்தான்.

ஒவ்வொருவராக, ஒவ்வொரு நிகழ்ச்சியையும் நினைவுகூர்ந்து மன்னிப்பு வழங்கினார். அன்று இரவு அவ்வளவு அற்புதமாகத் தூங்கியதாகப் போனில் சொன்னார். ஒரு மாதத்தில் அவர் முட்டி வலி முழுமையாக நீங்கியதாக நேரில் வந்து தெரிவித்தார்.

எப்படி நிகழ்ந்த்து இது? தீவிர எதிர்மறை எண்ணங்களும் தீர்க்கப்படாத நெருக்கடிகளும் ஆழ்மனதில் தங்கும். ஒவ்வொரு உணர்வும் ஒரு உடல் பாகத்தில் தங்கும். பழைய மன வலிகளையும் இன்றைய உடல் பிரச்சினைகளையும் பொருத்திப் பார்க்கும் அறிவு நம் மனத்துக்கு இயல்பாகவே உண்டு. ஆனால் இயற்கை வாழ்விலிருந்து விலக விலக, உடலின் மொழியை அறியும் திறனை நாம் இழக்கிறோம். சரி, மன்னிப்பு வழங்குதல் எப்படி உடல் நலத்தை சீரமைக்கிறது என்று பார்ப்போம்.

கோபம் எனும் எரிமலை

தீராத கோபம் எதிராளி மீது இருந்தாலும், அதன் முழு பாதிப்பு நம் உடம்பில் மட்டும்தான். எதிராளியின் மீது துப்புவதற்காக வாயில் திராவகத்தை நிரப்பிக்கொண்டு காத்திருப்பதைப் போன்றது இது. பல நேரம் அந்த கோபம் முழுமையாக அல்லது முறையாகக்கூட போய் சேராது.

சம்பந்தப்பட்டவர் எங்கோ விலகிக்கூட போயிருக்கலாம். ஆனால், அந்தப் பகை உணர்வு உள்ளே வளர்ந்துகொண்டே வருகிறது. நம்மில் பலருக்கு யாரோ ஒருவர் மீது தீராத, மன்னிக்க முடியாத கோபம் இருக்கிறது. அப்படி என்றால், நாம் ஓர் எரிமலையை விழுங்கி வைத்துள்ளோம் என்று பொருள்! உங்களின் கோப எரிமலை எதிராளியை சிறிது பாதிக்கலாம். ஆனால், கோபத்தை பொத்தி வைத்துள்ள உங்களை முழுமையாக பாதிக்கும்.

கோபத்தில் கொலை செய்தவர்கள்கூட ஆரோக்கியமாக இருப்பார்கள். ஆனால், கோபத்தில் (கருவிக் கொண்டே) எதுவும் செய்ய இயலாதவர்கள், அந்த கோபத்தால் பல நோய்களை வரவழைத்திருப்பார்கள். கோபத்தில் கொலை செய்தவர் அதற்கு வருந்தி தன்னை அறியாமல் மன்னிப்பு வழங்கி உளமாற, மன அளவில் விடுதலை பெற்று வாழ முடியும்- சிறைச்சாலையில் இருந்தாலும். ஆனால் நாள்தோறும், “அந்த ஆள் மட்டும் கையில கிடச்சான்னு வச்சுக்கோ..” என்று புகைந்து, “அவனுக்கு நல்ல சாவு வராது, அவன் கண்டிப்பா அனுபவிப்பான்!” என்று சாபம் கொடுப்போர் தங்களைத்தான் பழிவாங்கிக் கொள்கின்றனர்.

அவர்களுடைய வார்த்தைகளும், எண்ணங்களும் உணர்வுகளும் உடலுக்குள் தேங்கிப் போகின்றன. போதாக்குறைக்கு அவை தொடர்ந்து வளர்க்கப்பட்டு வருகின்றன. இவை உடலில் நோய்களாக உருவெடுக்கின்றன என மேலை மருத்துவ அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

வெளியேற்றி விடுங்கள்!

இதை நம்ப முடியவில்லையா? ஒரு சிறு பயிற்சி செய்யுங்கள். இரவு தூங்குவதற்குமுன் செய்யுங்கள். உங்கள் வாழ்வில் யார் யார் மீது கடும் அதிருப்தி, கோபம் என்று பட்டியல் போடுங்கள். அதில் யாரை கண்டிப்பாக மன்னிக்க முடியாது என்று தேர்வு செய்துகொள்ளுங்கள். அவரை மனதார அழைத்து, அவர் பெயர் சொல்லி இதைச் சொல்லுங்கள்: “நீங்கள் எனக்குக் கெடுதல் செய்ததாக நினைத்து, உங்கள் மீது கடும் கோபத்தில் இருந்தேன். அதனால் சில பாடங்களைப் பெற்றேன். அதற்கு நன்றி. உங்கள் மேல் உள்ள கோபத்தை இன்று விடுவிக்கிறேன். உங்களை மனப்பூர்வமாக மன்னித்து, உங்களை விடுதலை செய்கிறேன்.”

இதை எழுதுவதும் சுகம் தரும். மனத்தில் கோபம் தீரும்வரை சொல்லுங்கள். எழுதுங்கள். பிறகு எப்படி உணர்கிறீர்கள் என்று பாருங்கள். மலம் கழிக்காத உடல் எப்படி விஷத்தன்மை பெறுமோ, அதுபோல மனக்கழிவுகள் வெளியேறாதபோது அவை நச்சாக மாறும். இரண்டுக்குமே, தினசரி கழிவைக் கழிப்பது நல்லது!

கட்டுரையாளர், தொடர்புக்கு: -
gemba.karthikeyan@gmail.com

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE