சேதி தெரியுமா?

By செய்திப்பிரிவு

தொகுப்பு: கனி

புக்கர் பரிசு

அக். 14: 2019-ம் ஆண்டுக்கான புக்கர் பரிசு, ‘தி டெஸ்டமென்ட்ஸ்’ நாவலுக்காக கனடாவைச் சேர்ந்த எழுத்தாளர் மார்கரேட் அட்வுட்டுக்கும், ‘கேர்ள், வுமன், அதர்’ நாவலுக்காக ஆங்கிலோ-நைஜீரிய எழுத்தாளர் பெர்னர்தைன் எவரிஸ்டோவுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார நோபல்

அக். 14: உலகளாவிய வறுமையை ஒழிப்பதற்கான அணுகுமுறைகளை உருவாக்கியதற்காக அமெரிக்க வாழ் இந்தியரான அபிஜித் பானர்ஜி, எஸ்தர் டுஃப்லோ, மைக்கேல் கிரிமெர் ஆகியோருக்கு 2019 பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

புதிய பி.சி.சி.ஐ. தலைவர்

அக். 14: பி.சி.சி.ஐ. அமைப்பின் தலைவராக இந்திய கிரிக்கெட் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியும், செயலாளராக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜே ஷாவும், பொருளாளராக மத்திய நிதி இணையமைச்சர் அனுராக் தாக்கூரின் சகோதரர் அருண் துமாலும் போட்டியின்றித் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர்.

பொருளாதார வளர்ச்சி குறைவு

அக். 15: உலகப் பொருளாதாரத்தின் வளர்ச்சி 3 சதவீதமாகக் குறைந்திருப்பதாக ‘சர்வதேச நாணய நிதிய’த்தின் ‘உலகப் பொருளாதாரப் பார்வை’ அறிக்கை தெரிவிக்கிறது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2019-ம் ஆண்டில், 6.1 சதவீதமாகக் குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

புதிய துனிஷிய அதிபர்

அக். 15: துனிஷியாவின் அதிபர் தேர்தலில் சட்டப் பேராசிரியர் கைஸ் சயீத், 72.71 சதவீத வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற் றுள்ளார். 2011 புரட்சிக்குப்பிறகு, துனிஷியாவில் நடைபெற்ற இரண்டாவது தேர்தல் இது.

பசியில் வாடும் இந்தியர்கள்

அக். 16: உலகளாவிய பசி தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்றிருந்த 117 நாடுகளில் இந்தியா 102-ம் இடத்தைப் பிடித்துள்ளது. தெற்காசிய நாடுகளில் பசியால் வாடுபவர்கள் அதிகமாக இருக்கும் நாடு இந்தியா. பாகிஸ்தான் (94), நேபாளம்(73), வங்கதேசத்தைவிட (88) பின்தங்கிய நாடாக இந்தியா உள்ளது.

தங்கக் காலணி விருது

அக். 16: லியோனல் மெஸ்ஸி, ஆறாம் முறையாக ‘ஐரோப்பிய தங்கக் காலணி’ விருதைப் பெற்றுள்ளார். ‘லா லிகா’ தொடரில் அதிகபட்சமாக 36 கோல்களை அடித்ததற்காக அவருக்கு இந்த விருது அளிக்கப்பட்டுள்ளது.

காஷ்மீர் சட்ட மேலவை ரத்து

அக். 17: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் இரண்டு மத்திய ஆட்சிப் பகுதிகளாகப் பிரிக்கப்பட இருப்பதால், ஜம்மு-காஷ்மீரின் மாநிலச் சட்ட மேலவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE