டிஜிட்டல் டைரி 6: டிஜிட்டல் காப்புரிமை சர்ச்சையில் சிக்கிய கிரவுட்ஸ்ட்ரைக்

By சைபர் சிம்மன்

உலகளவில் பெரும்பாலான 'விண்டோஸ்’ கணினிகளை முடக்கிய கிரவுட்ஸ்டிரைக் அப்டேட் விவகாரத்தின் பரபரப்பு அடங்கிவிட்டாலும் அதன் அதிர்வுகள் இன்னும் ஓய்ந்தபாடில்லை. இதற்கு மத்தியில் ‘கோமாளி’ இணையதளம் ஒன்று கவனத்தை ஈர்த்துள்ளதோடு டிஜிட்டல் காப்புரிமை தொடர்பான கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

நடந்தது என்ன? - நிறுவனங்களுக்கு சைபர் பாதுகாப்பு சேவையை வழங்கும் கிரவுட்ஸ்ட்ரைக் நிறுவனம் அண்மையில் வெளியிட்ட மென்பொருள் அப்டேட் பழுதாகி, ஆயிரக்கணக்கான ‘விண்டோஸ்’ கணினிகளை முடக்கியது. இந்தப் பாதிப்பிலிருந்து நிறுவனங்களும், அரசு அமைப்புகளும் மீண்டு வரவே சில நாள்கள் ஆன நிலையில் கணினி பாதுகாப்பு, தொடர்பான பல்வேறு விஷயங்கள் பேசுபொருளாகியுள்ளன. பலரும் கிரவுட்ஸ்டிரைக் நிறுவனம் தனது பாதுகாப்பு சேவையில் கோட்டைவிட்டதாக விமர்சித்துள்ளனர்.

இந்நிலையில், டேவிட் சென்க் எனும் மென்பொருள் ஆலோசகர், கிரவுட்ஸ்டிரைக் பாதிப்பு விவகாரத்தை நகைச்சுவையாக விமர்சிக்கும் வகையில் ‘கிளவுன்ஸ்டிரைக்’ (clownstrike) எனும் புதிய இணையதளத்தை உருவாக்கியுள்ளார். தொழில்நுட்ப உலகில் மையமாக்கப்பட்ட சேவைகளின் (centralized services) பாதிப்பைக் கேள்விக்குள்ளாக்கும் வகையில் இத்தளத்தை அமைத்திருக்கும் அவர், கிரவுட்ஸ்டிரைக் லோகோ ஒரு கோமாளியாக மாறுவது போலச் சித்தரித்துள்ளார். கிரவுட்ஸ்டிரைக் தாக்குதலால், சென்க் நேரடியாகப் பாதிக்கப்படவில்லை என்றாலும், தொழில்நுட்ப சேவைகள் மையமில்லாத வகையில் இருக்க வேண்டும் எனும் கருத்தை வலியுறுத்தும் வகையில், இத்தளத்தை அமைத்ததாகச் சொல்கிறார்.

எது விதிமீறல்? - கிரவுட்ஸ்டிரைக் நிறுவனத்தை வம்புக்கு இழுக்க வேண்டும் என்பது அவரது நோக்கம் இல்லை என்றாலும், அதுதான் நடந்தது. கிளவுன்ஸ்ட்ரைக் தளத்திலுள்ள நிறுவன லோகோவை உடனே நீக்குமாறு அந்நிறுவனம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது. அதன்படி, அமெரிக்க டிஜிட்டல் காப்புரிமை சட்டத்தின் (DMCA) கீழ் நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் சென்க் லோகோவை நீக்க உறுதியாக மறுத்துவிட்டார். கிண்டல் செய்யும் விதமாக ஒரு நிறுவனத்தின் லோகோவைப் பயன்படுத்துவது விதிமீறலாகாது என வாதிட்டவர் தனது இணையதளத்தை நெதர்லாந்து நிறுவன சர்வருக்கும் மாற்றிவிட்டார்.

விஷயம் இத்துடன் முடியவில்லை. கிரவுட்ஸ்டிரைக் நோட்டீஸ் அனுப்பியதை அடுத்து, 'இணையதள கிண்டலைக்கூட ஒரு நிறுவனத்தால் பொறுத்துக்கொள்ள முடியவில்லையா?' என நெட்டிசன்கள் விமர்சனம் செய்துள்ளனர். சட்ட வல்லுனர்கள் பலர், இது காப்புரிமை மீறலாகாது, பெரிய நிறுவனங்கள் இப்படிச் சட்டத்தைச் சாமானியருக்கு எதிராக மிரட்டல் தொணியில் பயன்படுத்துவது தவறு எனக் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதனால் கிரவுட்ஸ்டிரைக் நிறுவனம் இச்சம்பவத்துக்கு விளக்கம் அளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், விண்டோஸ் கணினிகளை முடக்கிய பழுதான அப்டேட் சம்பவத்தையொட்டி தங்களது நிறுவன லோகோவைப் போலியாகப் பயன்படுத்தும் தளங்களுக்கு எதிராக அனுப்பப்பட்ட நோட்டீஸ் முயற்சியில், கிளவுன்ஸ்ட்ரைக் தளத்துக்குத் தவறுதலாக நோட்டீஸ் அனுப்பப்பட்டது என்று விளக்கம் அளித்துள்ளது.

‘கிளவுன்ஸ்ட்ரைக்’ நிறுவனர் சென்க் இந்த விளக்கத்தை ஏற்றுக்கொள்வதாகக் கூறிவிட்டார். தவறாக நோட்டீஸ் அனுப்பியதற்காக கிரவுட்ஸ்டிரைக் நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடுத்து அவர் வெற்றி பெறலாம் என்றாலும், அதைச் செய்ய விரும்பவில்லை என்று சென்க் கூறியிருக்கிறார். கிளவுன்ஸ்ட்ரைக் தளத்துக்கு அனுப்பப்பட்ட இந்த நோட்டீஸ் விவகாரம் டிஜிட்டல் காப்புரிமை சட்டம் கையாளப்படுவது தொடர்பான பல கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

இதே போல பல ஆண்டுகளுக்கு முன்பு ‘மைக்ரோசாஃப்ட்’ நிறுவனத்தின் ‘எக்ஸ்ப்ளோரர் பிரவுசர்’ தனது மந்தமான சேவைக்காக விமர்சனத்துக்குள்ளானபோது கிண்டல் செய்வதற்காக உருவாக்கப்பட்ட இணையதளம் இன்றும் இருக்கிறது - http://toastytech.com/evil/index.html

முந்தைய அத்தியாயம்: டிஜிட்டல் டைரி 5: நுகர்வோரின் ஆயுதமான சமூக வலைதளம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE