டிஜிட்டல் டைரி 4: ஏ.ஐ.யை இயக்கும் ‘டேட்டா டெக்கி’கள்!

By சைபர் சிம்மன்

இணையத்தில் ஒரு குறும்படத்தின் முன்னோட்டம் வெளியாகியுள்ளது. இந்த முன்னோட்டத்தை ‘நெட்ஃபிளிக்ஸ்’ ஓடிடி தளம் அல்லது இதர ஓடிடி தளங்களில் பார்க்க முடியாது. ஏனெனில், இது வழக்கமான குறும்படமோ, ஆவணப்படமோ அல்ல. ஒரு தரவு தொழில்நுட்பவியலாளரின் வாழ்க்கைப் படம். ‘டேட்டா ஒர்கர்ஸ்’ என்கிற இணையதளத்தில் இக்குறும்படத்தின் முன்னோட்டம் வெளியாகியுள்ளது. முழுப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

அண்மைக் காலமாக எங்கும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) என்பதே பேச்சாக உள்ளது. இந்தச் சூழலில், இந்த நுட்பத்தைச் சாத்தியமாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கும், ஆனால் உலகின் கண்ணுக்குத்தெரியாமல் இருக்கும் தரவு நிபுணர்கள் பற்றி நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டும். ஏஐ தொழில்நுட்பத்தின் அருமை பெருமைகள் பற்றியும், அதன் சாத்தியங்கள், எல்லைகள் பற்றியும் விவாதித்துக் கொண்டிருக்கிறோம். ஏஐ சேவைகளை உருவாக்கும் நிறுவனங்கள், அவற்றை இயக்கும் ‘அல்காரிதம்’கள் பற்றி பேசும் அளவுக்கு, தரவு துறையின் பின்னே உள்ள தொழில்நுட்பவியலாளர்கள் பெரிதாகக் கவனிக்கப்படுவதில்லை.

ஆம், ஏஐ தொழில்நுட்பம் இயந்திர ஆற்றல்தான் என்றாலும், அதைப் பயிற்றுவிக்க தரவுகள் தேவைப்படுகிறது. அந்தத் தரவுகளை திரட்டவும், அடையாளம் காட்டவும் மனித உதவி தேவைப்படுகிறது. உதாரணத்துக்கு, முகங்களைக் கண்டறியும் ஏஐ சேவை, கோடிக்கணக்கான முகங்களைக் கொண்டு பயிற்றுவிக்கப்படுகிறது எனச் சொல்லப்படுகிறது. ஆனால், அந்தப் படங்களை எல்லாம், இது மனித முகம், இது நெடுஞ்சாலை, இது கடற்கரை என மனிதர்கள் அடையாளப்படுத்தி காண்பிக்க வேண்டியிருக்கிறது. ‘சாட்பாட்’களுக்கும் இது பொருந்தும்.

பொதுவாக, இயந்திரக் கற்றல் எனச் சொல்லப்படும் செயற்கை நுண்ணறிவின் துணைப்பிரிவின் செயல்பாட்டிற்காக எழுத்து, ஒளிப்படம், காணொளிகள் உள்ளிட்ட தரவுகளைத் தரம் பிரித்து அடையாளம் காட்டுவது ‘டேட்டா லேபிளிங்’ எனக் குறிப்பிடப்படுகிறது. இதைச் செய்பவர்தான் தரவு தொழில்நுட்பவியலாளர். முன்பு ‘டேட்டா எண்ட்ரி’ எனும் பெயரில் தரவுகள் உள்ளீடு செய்யப்பட்டதுபோல, தற்போது ஏஐ சேவைகளுக்காக, தரவுகளை அடையாளக் குறியிட்டுக்கொண்டிருக்கின்றனர்.

அதேபோல, சமூக ஊடக சேவைகளில் புகார் செய்யப்படும் பதிவுகள், சர்ச்சையாகக் கருதப்படும் பின்னூட்டங்கள் போன்றவற்றைக் கையாளும் ஏஐ சேவைகள் சார்பாகவும் தரவு தொழில்நுட்பவியலாளர்கள் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். பெரும்பாலும் இப்பணிகள் மூன்றாம் உலக நாடுகளில் உள்ள தொழில்நுட்பவியலாளர்களிடம் ஒப்பந்த நிறுவனங்கள் வாயிலாக ஒப்படைக்கப்படுகின்றன. ஒரே மாதிரியான அலுப்பூட்டும் வேலையாக இருப்பது மட்டுமல்லாமல், இதற்கான ஊதியமும் மிகக் குறைவு.

அதே நேரத்தில் தரவு தொழில்நுட்பவியலாளரின் பணிச் சூழலும், அவர்களுக்கு விதிக்கப்படும் நிர்பந்தங்களும் மோசமானவை. மணிக்கணக்கில் பணியாற்ற வேண்டும் என்பதோடு, பல நேரங்களில் திகைக்க வைக்கும் காட்சிகளையும், படங்களையும் பார்க்க வேண்டும். நினைத்துப் பார்க்க முடியாத வன்மம் கொண்ட கருத்துகளைப் படிக்க வேண்டும். இவற்றால் ஏற்படும் மனஉளைச்சல் இன்னும் மோசமானவை.

இத்தகைய தரவு தொழில்நுட்பவியலாளர்களின் நிலை குறித்து ஆய்வு செய்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் டி.ஏ.ஐ.ஆர் - டியூ பெர்லின் (DAIR ,TU Berlin) ஆகிய அமைப்புகள் ஓர் ஆய்வை மேற்கொண்டுள்ளது. அவ்வப்போது இது தொடர்பான ஆய்வு அறிக்கைகள் ‘டேட்டா ஒர்கர்ஸ்’ தளத்தில் வெளியிடப்படுகிறது. அதோடு, யாசர் யூசப் அல்ரேஸ் எனும் தரவு தொழில்நுட்பவியலாளர் தனது பணி அனுபவத்தைக் குறும்படமாகவே படம்பிடித்துள்ளார். தரவு தொழில்நுட்பவியலாளர்களின் குறைகளைக் கேட்கவோ, முறையிடவோ வழியில்லாத சூழலையும் அதில் விவரித்திருக்கிறார். இந்தப் படத்தைப் பார்ப்பதோடு, தரவு தொழிலாளர்களின் அனுபவங்களையும் படித்துப் பார்க்க இந்த இணைப்பைப் பார்வையிடவும்: https://data-workers.org/

முந்தைய அத்தியாயம்: டிஜிட்டல் டைரி 3: இணையத்தில் முட்டிமோத வைக்கும் ‘முடிவில்லா’ விளையாட்டு!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE