விளையாட்டுத் துறையில் குவிந்திருக்கும் வேலைவாய்ப்புகள்!

By ராகா

33ஆவது ஒலிம்பிக் போட்டி ஃபிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கோலாகலமாகத் தொடங்கியுள்ளது. ஒலிம்பிக் போன்றதொரு பிரம்மாண்டப் போட்டியை வெற்றிகரமாக நடத்தி முடிக்க பலரது பங்களிப்பு முக்கியம். வீரர், வீராங்கனைகள், பயிற்சியாளர்கள், நடுவர்கள் ஆகியோருடன் விளையாட்டுத் துறையின் மற்ற பிரிவுகளைச் சேர்ந்தவர்களின் உழைப்பையும் கவனிக்க வேண்டியுள்ளது.

பொதுவாகப் பள்ளி, கல்லூரிக் காலத்தில் விளையாட்டுத் துறையில் ஆர்வம் கொண்டவராக ஒருவர் இருந்தால், பின்னாளில் அவர் ஒரு வீரர், வீராங்கனையாகத் தன்னை வளர்த்துக்கொள்ளவே விரும்புவார். சிறப்பாக விளையாடினால் மத்திய, மாநில அரசு வேலைகளுக்குச் செல்லலாம். ஆனால், உடல் ஆரோக்கியம், குடும்பச் சூழல், பொருளாதார நெருக்கடி, சமமற்ற வாய்ப்புகள், போட்டி மிகுந்த சூழல் போன்ற காரணங்களால் பலரால் தொடர்ந்து விளையாட்டுத் துறையில் ஜொலிக்க முடியாமல் போகிறது. என்றாலும் இவற்றைத் தாண்டியும் விளையாட்டுத் துறையில் பல வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன.

கிரிக்கெட், கால்பந்து, டென்னிஸ், தடகளம் போன்று பல்வேறு விளையாட்டுத் தொடர்கள் உள்ளூர் முதல் சர்வதேச அளவில் ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். தேசிய, உலக சாம்பியன்ஷிப் தொடர்கள், உலகக் கோப்பைகள், காமன்வெல்த், ஆசிய விளையாட்டு, ஒலிம்பிக் என விளையாட்டு உலகில் பரபரப்புக்குப் பஞ்சமில்லை. கடந்த சில ஆண்டுகளில் உலக அளவில் விளையாட்டுத் துறையின் வளர்ச்சி பல மடங்காக அதிகரித்துள்ளதாகத் தரவுகள் சொல்கின்றன.

இந்த விளையாட்டுப் போட்டிகளுக்குப் பின்னால் நிர்வாகம், நிதி மேலாண்மை, திட்டமிடல், விளம்பரம், தகவல் தொடர்பு என ஒவ்வொரு துறையிலும் நிபுணத்துவம் பெற்றவர்களின் பங்களிப்பு இருக்கும். இத்துறைகளைச் சேர்ந்த வேலைகளெல்லாம் வழக்கமானவைதான் என்றாலும் அவை விளையாட்டுடன் சேரும்போது புதிய வேலைவாய்ப்புகள் உருவாகின்றன. அதன் விளைவாகவே, அண்மைக் காலமாக விளையாட்டு மேலாண்மை (Sports Management) படிப்பு சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.

என்ன செய்யலாம்?

விளையாட்டுத் துறையைப் பற்றிய புரிதலுடன் மேலாண்மை, மார்க்கெட்டிங், தகவல் தொடர்பு ஆகிய மூன்று திறன்களும் சேரும் புள்ளிதான் விளையாட்டு மேலாண்மை. இப்படிப்பை இளங்கலைப் படிப்பாகவும் படிக்கலாம். ஏதாவது ஒரு பட்டப் படிப்பை அல்லது விளையாட்டுத் துறை சார்ந்த பட்டப் படிப்பை முடித்துவிட்டு முதுகலைப் படிப்பாகத் தேர்வு செய்தும் படிக்கலாம். உதாரணத்துக்கு, ‘பிசிகல் எஜுகேஷன்’ படிப்பில் இளங்கலைப் படிப்பு படித்தவர், எம்.பி.ஏ. விளையாட்டு மேலாண்மைப் படிப்பைப் படிக்கலாம். சென்னை உடற்கல்வியியல் - விளையாட்டுப் பல்கலைக்கழகத்திலும் சில தனியார் கல்லூரிகளிலும் இப்படிப்பு வழங்கப்படுகிறது.

விளையாட்டு மேலாண்மை சார்ந்துபணியாற்ற விரும்புவர் ஒரு விளை யாட்டின் விதிமுறைகளைப் புரிந்து கொள்வது மட்டுமன்றி விளையாட்டுத் தொடர்களை எப்படி நடத்துவது, எப்படித் திட்டமிடுவது என்பது போன்றவற்றைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். வீரர், வீராங்கனைகள், பயிற்சியாளர் ஆகியோருடன் சேர்ந்து பணியாற்ற வேண்டுமென்பதால் ஆங்கிலத்துடன் ஒன்றுக்கும் மேற்பட்ட மொழிகளில் திறம்படப் பேசவும் எழுதவும் கற்றுக் கொள்வது நல்லது.

வேலைவாய்ப்புகள்

விளையாட்டு மேலாண்மை என்பது பரந்து விரிந்த தளம். படிக்கும்போதே இத்துறையின்கீழ் இயங்கும் ஏதாவது ஒரு பிரிவில் கவனம் செலுத்தி அத்திறனை மெருகேற்றிக் கொள்ளலாம். அதுமட்டுமன்றி, படிக்கும்போதே ‘இன்டர்ன்ஷிப்’ வாய்ப்புகளைத் தேடிச் சென்று அனுபவம் பெற வேண்டும். இதில் கிடைக்கும் அனுபவத்தை வைத்து களப் பணிகளை மேற்கொள்ளலாம். இதனால், படிப்பு முடிந்த கையோடு தொடக்கத்திலேயே நல்ல மாதச் சம்பளத்தில் பணியில் சேரலாம். மத்திய, மாநில விளையாட்டு அமைச்சகங்களின்கீழ் ஒப்பந்த அடிப்படையில் வேலைவாய்ப்பைப் பெறலாம். அதுமட்டுமன்றி, விளையாட்டுத் துறையில் மார்க்கெட்டிங், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு, வீரர் வீராங்கனைகளின் ஒப்பந்த மேலாண்மை, கிளப் மேலாண்மை போன்ற பிரிவுகளில் உள்ளூரிலும் சர்வதேச அளவிலும் வேலைவாய்ப்புகள் இருக்கின்றன.

கடந்த சில ஆண்டுகளாகப் பிரபலமாகி வரும் இந்த விளையாட்டு மேலாண்மை தொடர்பான படிப்புகள் எதிர்காலத்தில் அதிக முக்கியத்துவம் உள்ளதாக மாறலாம். விளையாட்டுத் துறையில் பணியாற்றுவதற்கான ஆர்வமும் தகுதியும் இருப்பவர்கள் விளையாட்டு மேலாண்மைத் தொடர்பான படிப்பைத் தேர்ந்தெடுத்துப் பயன்பெறலாம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE