சண்டே கிளாஸ் சத்யா: அறிவியலில் ஒரு சமூக நீதி

By ஜோசப் பிரபாகர்

பாண்டிச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறையில் பணிபுரிந்த இயற்பியல் பேராசிரியர் “சண்டே கிளாஸ்” புகழ் எஸ்.வி.எம். சத்திய நாராயணா தனது 52 ஆவது வயதில் கடந்த செப்டம்பர் 16 அன்று புற்றுநோய் காரணமாக உயிரிழந்தார். 1996 இல் ஆரம்பித்து கிட்டத்தட்ட இருபத்தைந்து வருடம் ஞாயிற்றுக்கிழமைகளில் “சண்டே கிளாஸ்” என்ற பெயரில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் நியூக்ளியர் பிசிக்ஸ் துறையில் இலவசமாக கல்லூரி மாணவர்களுக்கு இயற்பியல் உயர்கல்வி சொல்லிக் கொடுத்தவர்தான் சத்யா.

இந்த வகுப்பில் பயின்ற மாணவர்கள் பல பேர் இன்று தமிழ்நாட்டின் பல்வேறு பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களின் ஆசிரியர்களாகவும், பேராசிரியர்களாகவும், ஐ.ஐ.டி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் ஆராய்ச்சியாளர்களாகவும் பணியாற்றி வருகின்றனர். இவ்வகுப்பில் பயின்று நெட், கேட், மற்றும் ஜெஸ்ட் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் ஏராளம்.

மிகச்சிறந்த பாடம் நடத்தும் திறனால் தான் பணியாற்றிய பல்கலைக்கழகத்தைத் தாண்டி தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா மாநிலங்களில் உள்ள பெரும்பாலான கல்லூரிகளில் அவர் நிகழ்த்திய இயற்பியல் உரைகளால் கவரப்பட்டவர்கள் ஏராளம். எப்படி இயற்பியலைக் கற்பிக்க வேண்டும், எப்படி இயற்பியலைக் கற்க வேண்டும் என்று அனைவருக்கும் உணர்த்தியவர். “ஒரு மாணவரின் பதிலளிக்கும் திறனை விட கேள்வி கேட்கும் திறனே அவனின் புரிதலின் ஆழத்தை எடுத்துக்காட்டுகிறது”. “ஒரு மாணவன் மனதில் கற்றுக்கொள்ளும் ஆர்வத்தை ஏற்படுத்தக் கூடியவர்தான் உண்மையான ஆசிரியர். ஏனென்றால் ஒரு மாணவருக்கு தேவையான எல்லாவற்றையும் ஒரு ஆசிரியரால் நடத்த முடியாது. நேரம் போதாமல் இருக்கலாம். அல்லது அந்த ஆசிரியருக்கு மாணவருக்குத் தேவையான எல்லாமும் தெரியாமல் இருக்கலாம். ஆனால் கற்றுக்கொள்ளும் ஆர்வத்தை ஏற்படுத்திவிட்டால் ஒரு மாணவர் தானாக தனக்கு வேண்டியதைக் கற்றுக்கொள்வார்” என்று அடிக்கடி கூறுவார்.

சண்டே கிளாஸ்: யாராலும் செய்ய முடியாத சாதனையாக சண்டே கிளாஸ் வகுப்புகளை நடத்தினார். அதுவும் ஒன்றிரண்டு ஆண்டுகள் அல்ல. கிட்டத்தட்ட இருபத்தைந்து ஆண்டுகள் அதாவது 1996 முதல் 2021 வரை இந்த வகுப்புகளை நடத்தினார். முதல் தலைமுறை மாணவர்கள், ஒடுக்கப்பட்ட சமூகப்பின்னணி கொண்டவர்கள், வசதியும், சிறந்த கல்வி வாய்ப்பும் இல்லாதவர்கள். சத்யாவின் இலவச வகுப்பில் கலந்து கொண்டு ஓரிரண்டு ஆண்டுகளில் நெட், கேட் தேர்வுகளில் வெற்றி பெற்று ஐ.ஐ.டி, ஐ.ஐ.எஸ்சி போன்ற நிறுவனங்களில் ஆராய்ச்சி மாணவராக சேர்ந்து விடுவார்கள். இன்று அவர்கள் அவ்வாராய்ச்சி நிறுவனங்களில் மூத்த அறிவியல் அறிஞர்களாக இருக்கிறார்கள். அறிவியலில் சமூக நீதியை சத்தமில்லாமல் சாதித்த மகத்தான மனிதராக சத்யா இருந்தார். இன்னொரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால் இந்த சண்டே வகுப்புக்கு திண்டுக்கல், திருச்சி, திருவண்ணாமலை, பாண்டிச்சேரி, விழுப்புரம் போன்ற பல்வேறு இடங்களிலிருந்து ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் வந்து கலந்து கொண்ட மாணவர்களும் உண்டு. அவர்கள் இன்று அந்தந்த ஊர்களில் உள்ள பல்கலைக்கழகங்களில், கல்லூரிகளில் பணியாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

மிகச்சிறந்த ஆசிரியர் என்பதைத்தாண்டி சிறந்த மனித நேயம் கொண்டவராகவும் எளிய மனிதராகவும், மாணவர்களால் எந்த நேரத்திலும் அணுகக்கூடியவராகவும் சத்யா விளங்கியவர். அவரது இல்லம் இயற்பியலை நேசிக்கும் ஒவ்வொருவருக்கும் வேடந்தாங்கல். அவரின் மறைவு இயற்பியல் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பேரிழப்பு. “ஒரு ஆசிரியர் தன்னிடம் கற்றுகொள்ள வரும் ஒரு மாணவரின் மனதில் உளவியல்ரீதியாக சவுகரியமான உணர்வை ஏற்படுத்தி ஆனால் அதே நேரத்தில் அவரின் புரிதலின் போதாமையை எடுத்துக்காட்ட வேண்டும்” என்று சத்யா எப்போதும் கூறுவார். இயற்பியல் ஆசிரியர்கள் மட்டுமல்ல ஒவ்வொரு ஆசிரியரும் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் இது.

கட்டுரையாளர், இயற்பியல் விரிவுரையாளர்.

தொடர்புக்கு: josephprabagar@gmail.com

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE