திருநெல்வேலி- நிறைவேறாத திட்டங்களும் நில மதிப்பும்

By ஜெய்

துரைக்கு அடுத்தபடியாகத் தென் தமிழகத்தின் முக்கியமான நகரம் நெல்லை என அழைக்கப்படும் திருநெல்வேலி. வட்டார வழக்குக்கு பெயர் பெற்ற ஊர். ஆங்கிலேயர் காலத்திற்கு முன்பிருந்தே திருநெல்வேலிக்கு நீண்ட வரலாறு உண்டு.

முக்கியமான ஆட்சி மையமாக இருந்து வருகிறது. இங்கிலாந்து ஆக்ஸ்போர்டுக்கு இணையான கல்விக் கூடங்கள், வற்றாத தாமிரபரணி எனத் திருநெல்வேலிக்குப் பெருமை சேர்க்கும் அம்சங்கள் பல.

இவை மட்டுமல்லாது தென் மாவட்ட மக்களுக்கும் திருவனந்தபுரம் பகுதி மக்களுக்கும் திருநெல்வேலிதான் வர்த்தக மையம். அதனால் திருநெல்வேலியில் தமிழ்நாட்டின் முன்னணி நகை, ஜவுளி நிறுவனங்களும் கடை விரித்துள்ளன.

இவ்வளவு சிறப்பு மிக்க நெல்லைக்கு தினந்தோறும் புதுப்புது ஆட்கள் வேலை, வியாபாரம் பொருட்டு குடியேறிக் கொண்டிருக்கிறார்கள். இவர் களுக்கான வீட்டுத் தேவை நாளுக்கு நாள் கூடிக்கொண்டு வருகிறது.

இதன் காரணமாக நெல்லையின் நான்கு எல்லைப் பகுதிகளிலும் வீட்டு மனைகளைப் பிரித்துக் கடை விரித்துள்ளன ரியல் எஸ்டேட் நிறுவனங்கள். ஆனால் இப்போது ரியல் எஸ்டேட் நிலை மந்தமாகவே இருப்பதாகச் சொல்கிறார் திருநெல்வேலி மாவட்டக் கட்டுமான அமைப்பின் தலைவர் ராஜேஷ்குமார்.

“திருநெல்வேலியைப் பொறுத்தவரை புறநகர்ப் பகுதிகளை மையமாக வைத்துத்தான் ரியல் எஸ்டேட் தொழில் வளர்ந்துவந்தது. முக்கியமாக நாங்குநேரியில் அமைக்கப்படவிருப்பதாகச் சொல்லப்பட்ட டைடல் பார்க், கங்கைகொண்டான் ஐடி பார்க் இவை இரண்டையும் வைத்துத்தான் ரியல் ஸ்டேட் செய்துகொண்டிருந்தார்கள். இப்போது அந்த இரு திட்டங்களும் அறிவிக்கப்பட்டதோடு நின்றுபோய்விட்டதால் அந்தப் பகுதிகளில் ரியல் எஸ்டேட் தேக்கம் அடைந்துவிட்டது.

அந்தப் பகுதியில் இடம் வாங்கிய பலரும் திரும்ப விற்க முடியாமல் தவித்து வருகிறார்கள்” என்கிறார் அவர். திருநெல்வேலி நகரத்தைப் பொறுத்தவரை சீரான அளவில் வளர்ச்சி இருக்கிறது என்கிறார்.

நெல்லையின் எல்லைப் பகுதிகள்

நாகர்கோயில் சாலையில் சிறப்புப் பொருளாதார மையம் அமையவுள்ள இடம், சேரன்மாதேவி சாலையில் கொண்டநகரம், பாளையங்கோட்டையின் புறநகர்ப் பகுதியாக கேடிசி நகர், வட பகுதியில் கங்கைகொண்டான் ஐடி பார்க் எனும் இப்பகுதிகளில் இப்போது ரியல் எஸ்டேட் நடைபெறுவதாகச் சொல்கிறார் இத்தொழிலில் ஈடுபட்டுவரும் வீரபத்திரன். ஆனால் தற்சமயம் இப்பகுதிகளில் ரியல் எஸ்டேட் மந்தமான நிலையிலேயே உள்ளது.

இப்போது புறநகர்ப் பகுதிகளான திருமால் நகர், பெருமாள்புரம், என் ஜி ஓ காலனி, கேடிசி நகர், கோடீஸ்வர நகர் ஆகிய பகுதிகளில் ப்ளாட் விற்பனை ஓரளவு சீரான அளவில் இருந்துவருகிறது.

இவற்றில் கேடிசி நகர், கோடீஸ்வர நகர் ஆகிய பகுதிகளில் பெரும்பாலும் அங்கீகரிக்கப்படாத வீட்டுமனைகளே விற்கப் படுகின்றன என்கிறார் ராஜேஷ். இதுமட்டுமல்லாமல் திருச்செந்தூர் சாலையிலும் ரியல் எஸ்டேட் வளர்ச்சி அடைந்து வருவதாகவும் சொல்கிறார்.

திருநெல்வேலி நகருக்குள் நில மதிப்பு செண்டு ஒன்றுக்கு 15 இலிருந்து 20 லட்சம் வரை விற்கப்படுகிறது. விலையைப் பொறுத்தமட்டில் ஏற்ற இறக்கங்களுடன்தான் இருக்கிறது.

உதாரணமாக திருச்செந்தூர் சாலையில் செண்டு ஒன்றுக்கு 1 லட்சத்திலிருந்து 4 லட்சம் வரை கிடைக்கிறது. கேடிசி நகரில் செண்டு ஒன்றுக்கு 1 லட்சத்திலிருந்து 7 லட்சம் வரை விற்கப்படுகிறது. இப்போது அரசின் வழிகாட்டி மதிப்பு (Guideline Value) உயர்த்தப்பட்டுள்ளதால் நில மதிப்பு ஏற்றமில்லாமல் இருக்கிறது.

அடுக்குமாடிக் கலாச்சாரம்

திருநெல்வேலி, பாளையங்கோட்டையும் சேர்த்து இதுவரை 30 அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன என்கிறார் ராஜேஷ். ஆனால் திருநெல்வேலி மக்களிடம் இந்த அடுக்குமாடிக் குடியிருப்பு கலாச்சாரம் பாதிப்பை உண்டுபண்ணவில்லை.

திருநெல்வேலியில் இருக்கும் பலர் இந்தப் பகுதியைச் சொந்த ஊராகக் கொண்டவர்களாக இருப்பதால் அவர்கள் சொந்தமாக வீடு வாங்கவே விரும்புவார்கள். அடுக்குமாடிக் குடியிருப்பு, வேலையின் பொருட்டுச் சில காலம் வசித்துவிட்டுப் போகிறவர்களுக்குத்தான் ஏற்புடையதாக இருக்கும்.

சென்னையில் அடுக்குமாடிக் குடியிருப்புக் கலாச்சாரம் பிரபலம் அடைந்ததற்கு இடநெருக்கடியுடன் இதையும் ஒரு காரணமாகச் சொல்லலாம். “திருநெல்வேலியில் அடுக்குமாடித் தேவைகள் இப்போது கட்டப்பட்டுள்ள அடுக்ககங்களுடன் பூர்த்தி அடைந்துவிட்டது” என்று கூறுகிறார் கட்டுமானச் சங்கத்தின் தேசியக் குழு உறுப்பினர் என். இசக்கி.

வழிகாட்டி மதிப்பு: மக்கள் கருத்து மதிக்கப்படுமா?

திருநெல்வேலியைப் பொறுத்தவரை நிலத்திற்கான அரசின் வழிகாட்டி மதிப்பு கிட்டத்தட்ட சந்தை மதிப்பைத் தொட்டுவிட்டதாகச் சொல்கிறார் கட்டுமானப் பொறியாளர் சங்கத்தின் முன்னாள் தலைவர் எம். உலகநாத சங்கர்.

நிலத்தின் வழிகாட்டி மதிப்பு உயர்த்தப்பட்டுள்ளதால் ரியல் எஸ்டேட் தொழில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கட்டுமானத் தொழிலும் தேக்கமடைந்துள்ளது. அரசின் வழிகாட்டி மதிப்பு உயர்ந்துள்ளதால் சாமானிய மக்கள்தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர் என்கிறார் தனியார் வங்கியில் பணியாற்றும் முத்துக்குமார். வசதி படைத்தவர்கள் இப்போது நில முதலீட்டில் தொடர்ந்து ஈடுபட்டுவருகின்றனர்.

நில விற்பனையில் அரசின் வழிகாட்டி மதிப்பு நிர்ணயிக்கப்படுவதில் ஜனநாயகமான முறை பின்பற்றப்பட வேண்டும் என அத்துறையைச் சேர்ந்த பலரும் கோரிக்கை வைக்கின்றனர். அதாவது தமிழகத்தின் ஒவ்வொரு பகுதிக்கான நில மதிப்புக்குத் தகுந்தாற்போல அரசின் வழிகாட்டி மதிப்பு அமைய வேண்டும் என்கின்றனர். மேலும் வழிகாட்டி மதிப்பை நிர்ணயிக்கும் முன் அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள், சமூக சேவகர்கள், துறை சார்ந்த நிபுணர்கள் ஆகியோரின் கருத்துகளையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

கட்டுமானப் பொருள்கள் விலை ஏற்றம்: தேவை முறைப்படுத்துதல்

பொதுவாகத் தமிழ்நாடு முழுக்க நிலவும் மந்த நிலை, திருநெல்வேலி மாவட்டக் கட்டுமானத் தொழிலிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் திருநெல்வேலி மாவட்டக் கட்டுமானத் தொழிலுக்கென்று தனிப் பிரச்சினைகளும் உள்ளன என்கிறார் இசக்கி. கட்டுமானத்திற்கான மண் திருச்சியிலிருந்து வரவழைக்கப்படுவதால் கட்டுமானத் தொகையை அதிகப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் என்கிறார் அவர்.

மேலும் ஆற்று மணலுக்குப் பதிலாக இப்போது மாற்று மணல் பயன்படுத்தலாம் எனப் பரிந்துரைக்கின்றனர். ஆனால் M-Sand என அழைக்கப்படும் செயற்கை மணலுக்கு வாடிக்கையாளர்களிடம் வரவேற்பு இல்லை. இதே நிலைமைதான் மாற்றுச் செங்கல்களுக்கும் என்கிறார் இசக்கி.

இது மட்டுமல்ல, வாடிக்கையாளருடன் ஒப்பந்தம்செய்து கட்டுமானப் பணிகள் முடிவடைதற்குள் கட்டுமானப் பொருட்கள் விலை அடிக்கடி உயர்ந்துவிடுகிறது. ஆனால் வாடிக்கையாளரிடம் நாம் இந்தக் கட்டுமானப் பொருள்கள் விலையேற்றத்தைக் காரணம் காட்டி உரிய தொகையைப் பெறுவதில் சிக்கல் இருக்கிறது என்கிறார் ராஜேஷ்.

ஆக, கட்டுமானப் பொருள்கள் விலையேற்றத்தில் அரசு ஓர் ஒழுங்குமுறையைக் கொண்டுவர வேண்டும் என்கின்றனர் இருவரும். சிமெண்ட் விலையைப் பொறுத்தமட்டில் ஓர் ஆண்டில் பல முறை விலை ஏற்றம் கண்டுவிடுகிறது.

இதனால் பாதிக்கப்படுவது சாமானிய மக்கள்தான். அதனால் அரசு தலையிட்டு கட்டுமானப் பொருள்களில் விலையை ஆண்டுக்கு முறைதான் உயர்த்த வேண்டும் என ஒழுங்குபடுத்தினால் மட்டுமே கட்டுமானத் துறை வளரும். சாமானிய மக்களுக்கான வீட்டுத் தேவையும் பூர்த்தியாகும் என்கிறார்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்