நம்முடைய ஏரிகள் எங்கே?

By நிதி அத்லகா

மழைக்காலம் நெருங்கிக்கொண்டிருக்கிறது. இந்நேரத்தில் சென்னையின் நீர்நிலைகளின் தீவிரமான ஆக்கிரமிப்புகள் பற்றிய ஓர் அலசல்...

சென்னையின் கடந்த ஆண்டு வெள்ளத்துக்கு நீர்நிலைகளை ஆக்கிரமித்தது, பராமரிக்காமல் விட்டது போன்றவைதான் முக்கியக் காரணங்களாக அமைந்தன. இந்த ஆண்டு மழைக் காலத்தையும் எதிர்கொள்ளத் திராணியற்ற நிலையில் இருக்கும் சென்னை மாநகரைப் பற்றி நிபுணர்கள் தங்களுடைய ஆதங்கத்தைத் தெரிவித்துவருகிறார்கள். பெரும்பாலான மழைநீர்க் கால்வாய்கள் இன்னும் தூர்வாரப்படவில்லை. சாலைகளின் உயரம் அதிகரித்துகொண்டேயிருக்கிறது.

குப்பைகளைக் கட்டுப்படுத்துவது பற்றியும், நீர்நிலைகளில் கழிவுநீர் கலப்பதைத் தடுப்பது பற்றியும் எந்தப் பேச்சும் இல்லை. தனியார், வணிக நிறுவனங்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் நீர்நிலைகள் தொடர்பாக எந்த நடவடிக்கையும் இல்லை. நீர்நிலைகளை மீட்பதற்குக் குறிப்பிடத்தக்க நடவடிக்கைகள் எடுக்கவில்லையெனில், மனிதனால் உருவாகும் பேரழிவுகள் தொடர்வதைத் தடுக்க முடியாது. “ஏரிகளை மீட்பதில் இருக்கும் பெரிய பிரச்சினை என்னவென்றால் அந்தச் செயல்முறையைப் பொதுவான கண்ணோட்டத்துடன் அணுகுவதுதான்.

இதைச் சரிப்படுத்த, முதலில் சதுப்புநிலப் பகுதிகளை வகைப்படுத்த வேண்டும். அந்த நிலப்பகுதிகளை மறுசீரமைப்பதற்கான செயல்முறையை ஒவ்வொரு மண்டலத்துக்கும் தனித்தனியாக அமைக்க வேண்டும். நகரத்தை நீரியல் கண்ணோட்டத்தில் வகைப்படுத்த வேண்டும்” என்று சொல்கிறார் ‘கேர் எர்த் ட்ரஸ்ட்’ அமைப்பின் நிர்வாக அறங்காவலர் டாக்டர் ஜெயஸ்ரீ வெங்கடேசன்.

தனித்தனியாக மறுசீரமைப்புத் திட்டப் பணிகள் மேற்கொள்ள வேண்டிய ஏழு நீர்நிலைகள்:

வில்லிவாக்கம் ஏரி

1972-ம் ஆண்டு, இந்த நீர்நிலையின் பரப்பளவு 214 ஏக்கர். இன்று ‘ஜிஐஎஸ் மேப்பிங்’கில் பார்க்கும்போது, 20 ஏக்கர் மட்டும்தான் மிச்சமிருக்கிறது. கடந்த 30 ஆண்டுகளில் ‘சிட்கோ’ தொழிற்பேட்டையும் சிட்கோ நகரும் இந்த ஏரிக்கரையில் விரிவடைந்து 80 சதவீத ஏரி நிலத்தை ஆக்கிரமித்துவிட்டன. 2005-ல் ஏற்பட்ட வெள்ளத்தின்போது, பெரும்பாலான வெள்ள நீர் இந்த ஏரியைத்தான் வந்தடைந்தது. அப்போது, பெரிய பாதிப்புகள் எதுவும் இந்தப் பகுதியில் ஏற்படவில்லை.

ஆனால், ‘ஜிஐஎஸ்’ தரவுகளின் முதற்கட்ட ஆய்வுகளின்படி, முக்கியமான ஆக்கிரமிப்புகள் கடந்த 3 ஆண்டுகளில்தான் நடந்திருப்பது தெரியவந்திருக்கிறது. அதிலும் 2014-ம் ஆண்டிலிருந்து, மெட்ரோ ரயில் கட்டுமான குப்பைகளை இந்த ஏரியில் கொட்டுவதால் ஏரி இன்னும் சீரழிந்திருக்கிறது. இது மழைநீர் ஏரிக்குள் நுழைவதைத் தடுத்திருக்கிறது. அதனால்தான் கடந்த ஆண்டு, வெள்ளநீரை ஏரியில் தேக்கிவைக்க முயன்றபோது, சிட்கோ நகரை 15 நாட்கள் வெள்ளநீர் சூழ்ந்து நின்றது. இன்றும், இந்தப் பகுதியின் மழை நீர்க் கால்வாய்கள் தூர்வாரப்படாமல் குப்பைகளாலும், கழிவுகளாலும்தான் அடைபட்டிருக்கின்றன.

கொரட்டூர் ஏரி

600 ஏக்கர் பரப்பளவில் விரிந்திருக்கும் இந்த நன்னீர் ஏரி சரியாகப் பரமரிக்கப்பட்டால் சென்னையின் குடிநீர் பிரச்சினையைத் தீர்க்க முடியும் என்று நிபுணர்கள் நம்புகிறார்கள். இந்தக் கொரட்டூர் சதுப்பு நிலப் பகுதி நிலத்தடி நீர்வளம் மிக்கது. இதன் எல்லைகளில் பனைமரங்கள் வேலி போல் சூழ்ந்துள்ளது. இந்த ஏரியின் பல இடங்களில் ஆக்கிரமிப்புகளைப் பார்க்க முடிகிறது. வணிக நிறுவனங்களும் கட்டுநர்களும் இந்தப் பகுதியைக் குப்பைகளையும் கழிவுகளையும் கொட்டுவதற்குப் பயன்படுத்துகிறார்கள்.

அத்துடன், இந்தச் சதுப்பு நிலம் ஆமைகள் போன்ற நீரிலும் நிலத்திலும் வாழும் உயிரினங்களுக்கான வாழிடம். இந்தப் பன்முகத்தன்மை கொண்ட வாழ்விடத்தை எப்படிப் பாதுகாப்பது என்ற அக்கறையைப் பலரும் வெளிப்படுத்துகிறார்கள். இந்த இடத்தில் சட்டவிரோதமான செயல்களும் நடைபெறுகின்றன. இந்த ஏரி வண்ணார்துறையாகவும் செயல்படுகிறது.

இந்தச் சதுப்புநிலத்தைச் சுற்றி இடைப்பட்ட மண்டலப் பகுதி இல்லாததால் இங்கே குடியிருப்புப் பகுதிகள் அதிகரித்துக்கொண்டேயிருக்கின்றன. அதனால், சதுப்பு நிலத்தின் எல்லைகள் படிப்படியாகக் குறைந்துவருகின்றன. 2013-ம் ஆண்டு நடைபெற்ற மேற்பரப்பு நீர் தர ஆய்வில், ஈயம், பாதரசம், கேட்மியம், குரோமியம் போன்ற வேதிப்பொருட்கள் இந்த ஏரி நீரில் அதிக அளவில் கலந்திருப்பது தெரியவந்தது.

நாராயணபுரம் ஏரி

இந்த ஏரி, 200 அடி ரேடியல் சாலையாலும், பேட்மின்டன் திடல், கோயில் போன்றவற்றாலும் இரண்டாகப் பிளவுபட்டிருக்கிறது. இந்த ஏரியின் கொள்ளளவு உயர வேண்டுமென்றால் ஆகாயத் தாமரைகள் நீக்கப்பட வேண்டும். கீழ்க்கட்டளை - நாராயணபுரம் ஏரிகளையும் இணைக்கும் கால்வாய் முதல் நூறு மீட்டர் தாண்டிய பிறகு ஆக்கிரமிப்புகளுக்கு உள்ளாகியிருக்கிறது. இந்தக் கால்வாயின் உண்மையான அகலம் 60 அடி. ஆனால், தனியார் குடியிருப்புகள் கால்வாயின் அகலத்தை 40 அடியாகக் குறைத்திருக்கிறது.

இன்னும் சில இடங்களில் கால்வாயைக் காணவே இயலாது. இந்தக் கால்வாயின் வழியாகத் தான் உபரி நீர் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்துக்குச் செல்ல வேண்டும். இந்தக் கால்வாய் முழுக்கவும் குப்பைகளாலும், கட்டுமான கழிவுகளாலும்தான் நிரம்பியிருப்பதால் வெள்ளம் வருவதற்கான சாத்தியங்கள் அதிகமாக இருக்கின்றன.

பல்லாவரம் பெரிய ஏரி

மேற்கு குரோம்பேட்டையையும் கிழக்கையும் பல்லாவரம் பெரிய ஏரியில் இணைப்பதற்கு 2 பெரிய நீர்க் கால்வாய்கள் இருக்கின்றன. கட்டபொம்மன் கால்வாயின் நீளம் 33 அடியிலிருந்து 7 அடியாகக் குறைக்கப்பட்டிருக்கிறது. துர்கை அம்மன் கால்வாய் முற்றிலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி சாலையில் மேற்கிலிருந்து கிழக்கு வரை நீளும் இந்தக் கால்வாய்களில் ஏற்படும் அடைப்பு இந்தப் பகுதிகளில் வெள்ளம் வருவதற்குக் காரணமாக இருக்கின்றன. குரோம்பேட்டையைப் பல்லாவரம் பெரிய ஏரியுடன் இணைக்கும் கால்வாய்கள் 30 அடியிலிருந்து 60 அடிவரை கொண்ட அகலத்துடன் இருந்தன.

ஆனால், இன்று அவை பெரிய அளவில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. குரோம்பேட்டைப் பகுதியில் இருக்கும் ஏரியின் 70 சதவீதப் பரப்பில் குடியிருப்புகள் நிறைந்துள்ளன. அத்துடன், பல்லாவரம் நகராட்சி இந்த ஏரியில் 20 சதவீதத்தைக் குப்பைக் கிடங்காகப் பயன்படுத்திவருகிறது. குப்பைகளை அகற்றி ஏரியை மறு சீரமைக்க வேண்டும் என்று பல்லாவரம் நகராட்சிக்கு, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்திரவிட்டுள்ளது. ஆனால், இந்தப் பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை.

பள்ளிக்கரணை சதுப்பு நிலம்

50 ஆண்டுகளுக்கு முன்னர், கிட்டத்தட்ட 15,000 ஏக்கர் பரப்பளவில் இருந்த இந்தச் சதுப்பு நிலத்தின் இன்றைய பரப்பு 1,500 ஏக்கர்தான். பள்ளிக்கரணைக்கும் வேளச்சேரிக்கும் இடைப்பட்ட பகுதி 2015 டிசம்பர் வெள்ளத்தில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்று. அதற்குக் காரணம், இந்த மொத்தப் பகுதியும் கடல்மட்டத்திலிருந்து வெறும் 0 முதல் 2 மீட்டர் உயரத்தில் இருப்பது தான். மற்ற ஏரிகளிலிருந்து வரும் நீரெல்லாம் இந்தச் சதுப்புநிலத்தில்வந்து கலக்கிறது. நிபுணர்கள் இந்தப் பகுதி குடியிருப்பு வளர்ச்சிக்கு உகந்ததில்லை என்று தெரிவிக்கிறார்கள். ஆனாலும், இந்தப் பகுதியில் பெரிய குடியிருப்புகள் எழுப்பப்படுகின்றன. கடந்த 20 ஆண்டு கால மோசமான நகரப்புறத் திட்டமிடலும், ஆக்கிரமிப்புகள், மாசு போன்ற பிற அம்சங்களும் இந்தச் சீரழிவுக்குக் காரணங்கள்.

13 கிலோமீட்டருக்கு நீட்டிக்கப்பட வேண்டிய பக்கிங்காம் கால்வாய், 4 கிலோமீட்டர் தூரத்துக்குத்தான் 20 மீட்டரிலிருந்து 100 மீட்டராக விரிவாக்கப்பட்டுள்ளது. மற்ற 9 கிலோமீட்டரில், அது 25 மீட்டரிலிருந்து 45 மீட்டர்தான் விரிவாக்கப்பட்டுள்ளது.

திருப்பனந்தாள் ஏரி

திருப்பனந்தாள் ஏரியையும் அடையாறையும் இணைக்கும் முழுக் கால்வாய் கட்டுநர்களாலும், தனியார் வீடுகளாலும் மிக மோசமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அதனால், இந்தக் கால்வாய் முதல் 50 மீட்டருக்கு 4 அடியிலிருந்து 6 அடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. தூர்வாரப்படாமல், பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகள் என முழுமையாக நிரம்பியிருக்கும் இந்தக் கால்வாயில் நீரோட்டம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தக் கால்வாய் பம்மலில் ஒரு சிறிய குளத்தில் முடிவடைகிறது. அது முழுக்க கட்டுமானக் கழிவுகளால் நிரம்பியிருக்கிறது. இந்தக் கால்வாய் நிரம்பிவழியும்போது, மாற்றிவிடப்படும் 2 சிறிய கால்வாய்களும் பராமரிப்பின்றி பாதிக்கப்பட்டிருக்கிறன.

சிட்லபாக்கம் ஏரி

1980களில், சிட்லபாக்கம், செம்பாக்கம் ஏரிகள் பாசனத்துக்குப் பயன்படுத்தப்பட்டுவந்தன. இந்த ஏரிகளில் இருக்கும் நீர், செம்பாக்கம், அஸ்தினாபுரம் பகுதிகளில் நீர் தொட்டிகளில் நிரப்பப் பயன்படுத்தப்பட்டது. கடந்த பல ஆண்டுகளாக, இந்த ஏரிகள் குப்பைகள், கழிவுகள், மருத்துவமனைக் கழிவுகளால் நிரம்பி வழிகிறது. இந்தச் சிட்லபாக்கம் ஏரி 80 ஏக்கரில் இருந்து 40 ஏக்கராகக் குறைந்துள்ளது. சாலையின் உயரத்தை அதிகரிப்பதும் இந்தப் பகுதியில் ஒவ்வொரு பருவமழையின்போது வெள்ளம் வருவதற்குக் காரணம்.

(அறப்போர் இயக்கம் மற்றும் ‘கேர் எர்த் ட்ரஸ்ட்’ அமைப்புகளிடம் பெறப்பட்ட தகவல்களுடன்)
தி இந்து (ஆங்கிலம்)
தமிழில்: என். கௌரி

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்