என்னுடைய சித்தி அவருடைய கணவர் இறந்த பிறகு அவருக்குச் சொந்தமான பூர்வீக வீட்டை எனக்குக் கொடுத்தார். அவருக்கு வாரிசுகள் இல்லை. கிரயம் பெற்று 4 ஆண்டுகள் அவ்வீட்டை அனுபவித்து வருகிறேன். 4 ஆண்டுகள் கழித்து என்னுடைய சித்தியை ஏமாற்றி அவருடைய கணவரின் வகையறா ஒருவருக்கு அதே வீட்டை கிரையம் செய்துகொடுத்துள்ளனர். அதாவது நான் 2011-ல் கிரையம் பெற்றேன். 2014-ல் வேறு ஒருவருக்குக் கிரையம் கொடுத்துள்ளனர். இது சட்டப்படி செல்லுமா?
- எஸ்.ஜோதி, கணக்கன்பட்டி
உங்கள் சித்திக்கு பூர்வீகமாக கிடைக்கப்பெற்ற வீடா அல்லது அவரது கணவருக்குப் பூர்வீகமாக கிடைக்கப்பெற்ற வீடா என்று நீங்கள் தெளிவாகக் குறிப்பிடவில்லை. அந்த வீடு உங்கள் சித்தப்பாவுக்குப் பூர்வீகமாகக் கிடைக்கப்பெற்ற வீடு என்று வைத்துக்கொண்டால் அவர் காலமானபிறகு, வாரிசுகள் இல்லாததால், உங்கள் சித்திக்கு மொத்த சொத்திலும் உரிமை வந்துவிடும். அதன் பிறகு அந்த வீட்டை 2011-ம் ஆண்டு உங்களுக்கு உங்கள் சித்தி கிரயம் செய்து கொடுத்து, கடந்த 5 ஆண்டுகளாக நீங்கள் அனுபவித்துவரும் நிலையில், உங்கள் சித்தியை ஏமாற்றி உங்கள் சித்தப்பாவின் உறவினர்கள் வேறு ஒருவருக்கு எழுதிக்கொடுத்துள்ள கிரயப் பத்திரம் சட்டப்படி செல்லாது.
என் மனைவியின் தந்தை அவருடைய சுய சம்பாத்திய வீட்டை அவருடைய மகளாகிய என் மனைவிக்கு உயில் எழுதி பதிவும் செய்து தந்துள்ளார். இந்நிலையில் உயிலில் சாட்சியம் கையெழுத்திட்ட இருவரும் இறந்துவிட்டனர். அவருடைய மகன், அந்த வீட்டில் எனக்கும் பங்கு வேண்டும் எனக் கேட்கிறார். இதற்கு என்ன தீர்வு?
- செந்தில், மறையூர்
உங்கள் மனைவியின் தந்தை (அதாவது உங்கள் மாமனார்) தனது சுய சம்பாத்தியத்தில் கிரயம் வாங்கிய வீட்டைப் பொறுத்து அவரது மகளுக்கு (அதாவது உங்கள் மனைவிக்கு) எழுதி பதிவு செய்துள்ள உயில் சட்டப்படி செல்லத்தக்கதாகும். உயில் எழுதியவரும் இறந்துபோன பிறகு சாட்சி கையெழுத்திட்டவர் இறந்து போய்விட்டாலும் அந்த உயில் செல்லும். இறந்து போன உங்கள் மாமனாரின் மகன் அந்த வீட்டில் பங்கு கேட்க சட்டப்படி உரிமையில்லை.
என் மாமா பூர்வீக விவசாய நிலத்தை விற்று வீடு கட்டியுள்ளார். இவ்வாறு கட்டியுள்ள வீடும் பூர்வீகச் சொத்தாகக் கருதப்படுமா? அந்த வீட்டில் அவரது வாரிசுகள் அனைவருக்கும் சமபங்கு உள்ளதா? அவர் அந்த வீட்டை யாருக்கு வேண்டுமானாலும் தரலாமா?
- துரை, ஆச்சிபட்டி
உங்கள் மாமா தனது பூர்வீக விவசாய நிலத்தை விற்று வந்த பணத்தைக் கொண்டு கிரயம் பெற்றுள்ள நிலம் மற்றும் கட்டியுள்ள வீடு ஆகியவை பூர்வீக சொத்தாகவே கருதப்படும். அந்தச் சொத்தில் அவரது வாரிசுகள் அனைவருக்கும் சட்டப்படியான பங்கு உள்ளது. அந்தச் சொத்தை அவர் யாருக்கு வேண்டுமானாலும் தர சட்டப்படி உரிமையில்லை.
என்னுடைய மாமனார் 2001-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10 ரூபாய் ஸ்டாம்ப் பேப்பரில் அக்ரிமெண்ட் எழுதி ஒருவருக்கு 7000 சதுர அடி இடத்தில் கட்டிடத்தை மட்டும் வாடகைக்கு விட்டார். வாடகைக்கு ரசீதோ கைச்சீட்டோ கொடுத்ததில்லை. 2013-ம் ஆண்டு மாமனார் காலமாகிவிட்டார். அதன் பிறகு அந்த இடத்தை எங்களது மாமியார் தனது இரு மகள்களுக்கும் பிரித்துக்கொடுத்து தான பதிவுசெய்து கொடுத்தார். அந்த இடத்துக்குப் பட்டா சிட்டாவுக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் மனுசெய்துள்ளோம். இந்நிலையில் 15 வருடங்களாக வாடகைக்கு இருக்கும் நபர் இடத்தைக் காலிசெய்ய மறுத்து வருகிறார். அவரைச் சட்டப்படி எப்படிக் காலிசெய்யச் சொல்வது?
- காளிதாஸ், கவரப்பேட்டை
உங்கள் மாமனாரால் வாடகைக்கு விடப்பட்ட சொத்து, அவரது காலத்துக்குப் பிறகு உங்கள் மாமியாரால் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, அவரது இரு மகள்களுக்கு சாதகமாக தானப்பத்திரம் (செட்டில்மெண்ட்) எழுதி வைக்கப்பட்டவுடனே அவரது மகள்கள் இருவரும் அவரவர் பங்கு சொத்துக்கு பூரண உரிமையாளராக ஆகிவிட்டனர். தற்போது வாடகைக்கு இருக்கும் நபர் அந்தச் சொத்தினைக் காலி செய்ய மறுக்கும் பட்சத்தில், தமிழ் நாடு கட்டிடங்கள் (குத்தகை மற்றும் வாடகை கட்டுப்பாடு) சட்டப் பிரிவுகளின் கீழ் வாடகைதாரரை காலி செய்ய அனுமதிக்கப்பட்டுள்ள காரணங்கள் இருந்தால் வீட்டின் தற்போதய உரிமையாளர்களான உங்கள் மனைவியும் அவரது சகோதரியும் அந்த வாடகைதாரரைக் காலி செய்ய தகுந்த உரிமையியல் நீதிமன்றத்தில் மனு செய்து காலி செய்யும் உத்தரவைப் பெற்று சட்டப்படி காலி செய்ய முடியும்.
என் பெற்றோருக்கு என்னையும் சேர்த்து ஐந்து பெண்கள், இரண்டு ஆண்கள். தகப்பனார் என் சிறுவயதில் காலமாகிவிட்டார். அவர் தன் சுயசம்பாத்தியம் மூலம் என் தாத்தா வழியிலும் என் தாய் வழி தாத்தா பாட்டி வழியிலும் சொத்துகளைப் பெற்று அனுபவித்து வந்தார். என் தாய் இறக்கும்போது எல்லாச் சொத்துகளையும் என் சகோதரர்கள் எழுதிப் பெற்றுக்கொண்டுவிட்டனர். 1985-க்கு முன்பே எங்களுக்குத் திருமணம் ஆகிவிட்டது. அந்தச் சமயத்தில் 10 பவுன் நகையும் 10 ஆயிரமும் கொடுத்துவிட்டதால் உங்களுக்குச் சொத்தில் பங்கு தர முடியாது என்கிறார்கள். எங்கள் பங்கை நாங்கள் பெற்றுக்கொள்ள சட்டத்தில் வழியுண்டா?
- ரேவதி, மாடம்பாக்கம்
உங்கள் தந்தையின் சுய சம்பாத்திய பணத்தில் கிரயம் பெற்ற சொத்துக்களில் நீங்கள் பங்கு கேட்க சட்டப்படி உரிமையில்லை. உங்கள் தந்தைக்கு அவரது தந்தை வழியில் வந்த சொத்துகளைப் பொறுத்தவரையில் உங்கள் தந்தையின் காலத்துக்குப் பிறகு அவரது வாரிசுகள் அனைவருக்கும் (அதாவது அவரது மனைவி மற்றும் குழந்தைகள் அனைவருக்கும்) கூட்டாக உரிமையாகும். தாய்வழி தாத்தா மற்றும் பாட்டி வழியில் வந்த சொத்துகளைப் பொறுத்தவரையில் உங்கள் தாயாரின் காலத்துக்குப் பிறகு அவரது வாரிசுகள் அனைவருக்கும் (அதாவது அவரது குழந்தைகள் அனைவருக்கும்) கூட்டாக உரிமையாகும்.
ஆகவே உங்கள் தாய் மற்றும் தந்தைக்கு பூர்வீகமாகக் கிடைக்கப்பெற்ற சொத்துக்களில் உங்களுக்கு (அதாவது உங்களுக்கும் உங்கள் சகோதரிகளுக்கும்) பங்கு கேட்க உரிமை உள்ளது. நீங்கள் (அதாவது நீங்களும் உங்கள் சகோதரிகளும்) மேற்குறிப்பிடப்பட்டுள்ள பூர்வீக சொத்துகளைப் பொறுத்து எந்த ஒரு விடுதலை பத்திரமும் உங்கள் சகோதரர்களுக்குச் சாதகமாக எழுதி கொடுக்காத நிலையில், தகுந்த உரிமையியல் நீதிமன்றத்தில் உங்களுக்குரிய பாகங்களை கோரி வழக்கு தொடர்ந்து பாகம் பெறலாம்.
என் கணவருக்கும் எனக்கும் விவகாரத்தாகி இரு ஆண்டுகள் ஆகிவிட்டன. என் கணவர் பெயரில் உள்ள சொத்தில் பங்கு கோர முடியுமா? நான் கோர முடியாதபட்சத்தில் என் மகளுக்கு அந்தச் சொத்தில் பங்கு கோரச் சட்டத்தில் இடமிருக்கிறதா?
- பிரியா, குருவிகுளம்
உங்கள் கணவரின் சொத்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளீர்கள். அது அவரது சுய சம்பாத்திய பணத்தில் கிரையம் பெறப்பட்ட சொத்தா அல்லது பூர்வீகமாகக் கிடைக்கப்பெற்ற சொத்தா என்று குறிப்பிடவில்லை. விவாகரத்து பெற்ற பெண்களுக்கு அவர்களது கணவர்களின் சுய சம்பாத்திய பணத்தில் கிரயம் பெறப்பட்ட சொத்தாக இருந்தாலும் அல்லது பூர்வீகமாகக் கிடைக்கப்பெற்ற சொத்தாக இருந்தாலும் அதில் பங்கு கேட்க சட்டப்படி உரிமையில்லை. உங்கள் மகளைப் பொறுத்த வரையில் அவரது தந்தை சுய சம்பாத்தியத்திய பணத்தில் கிரயம் பெறப்பட்ட சொத்துக்களில் பங்கு கேட்க சட்டப்படி உரிமையில்லை. ஆனால், உங்கள் மகளுக்கு அவரது தந்தைக்குப் பூர்வீகமாகக் கிடைக்கப்பெற்ற சொத்துக்களில் பங்கு கேட்க சட்டப்படி உரிமை உண்டு.
வீடு, மனை வாங்குவதில், விற்பதில் உள்ள சட்டம் தொடர்பான உங்கள் சந்தேகங்களுக்கு/கேள்விகளுக்கு சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் எஸ்.பி.விஸ்வநாதன் பதிலளிக்கிறார்.
அஞ்சலில் அனுப்ப: சொந்த வீடு, தி இந்து (தமிழ்), கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை - 600002 கேள்விகள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல்: sonthaveedu@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago