ரியல் எஸ்டேட் சட்டம்: முழுமையாக அமலாவது எப்போது?

By ரிஷி

நீண்ட நாட்களாக ரியல் எஸ்டேட் துறையினர் எதிர்பார்த்துக் காத்திருந்த ரியல் எஸ்டேட் மசோதா கடந்த ஒன்றாம் தேதி சட்டமாகிவிட்டது. வீடுகளை வாங்குவோரைப் பாதுகாப்பதற்கு உதவும் வகையிலான விதிமுறைகளை உருவாக்கும் பணிகளும், நிறுவனமய உள்கட்டமைப்புகள் உருவாக்கமும் தொடங்கிவிட்டன.

இந்தச் சட்டம் அனுகூலமான வளர்ச்சிக்கேதுவானது என்பதைச் சொல்லும் அதே நேரத்தில், கட்டுமானம் தொடர்பான அனுமதி, அங்கீகாரம் போன்றவற்றை உரிய நேரத்தில் பெறுவதில் கட்டுநர்கள் எதிகொள்ளும் சிக்கல்களையும் கவனத்தில் கொண்டு இந்த விதிமுறைகள் வகுக்கப்பட வேண்டும் என ரியல் எஸ்டேட் நிபுணர்கள் கூறுகிறார்கள். கட்டிடங்களுக்கு விதிமுறைகளின் அடிப்படையில் கால எல்லைக்குட்பட்டு அனுமதி அளிக்கும் பொறுப்பில் இருக்கும் அதிகாரிகள் தங்கள் செயலுக்குப் பொறுப்பேற்கும்படியான நிலையை உருவாக்க வேண்டும் என்றும் அவர்கள் கோருகிறார்கள்.

இப்படியான ஒரு நிலைமை, அதாவது அங்கீகாரம் வழங்க வேண்டிய அதிகாரிகளைக் கேள்வி கேட்கக்கூடிய நிலைமை, உருவானதென்றால் அது இந்திய ரியல் எஸ்டேட் துறையை மீட்கும் முயற்சியில் முக்கியமானதொரு நகர்வாக இருக்கும். அது மட்டுமல்லாமல் இந்த நிலைமை வீடுகளை வாங்குவோருக்கும் உள்நாட்டு/ வெளிநாட்டு முதலீட்டாளருக்கும் நம்பிக்கையை உருவாக்கும். இந்த விஷயத்தில் அதிகாரிகளைக் கேள்வி கேட்கலாம் என்பது ரியல் எஸ்டேட் துறையின் முன்னேற்றத்தில் தடைக்கல்லாகாதபடி அமைய வேண்டும் என்பதும் முக்கியம். அப்படி அமையும்போது கட்டிடங்களின் விலையும் உயர வாய்ப்புள்ளது என்றும் இத்துறைசார் நிபுணர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.

இந்தச் சட்டத்தின் 92 பிரிவுகளில் 69 மட்டுமே மே ஒன்று அன்று அமலுக்கு வந்திருப்பதாக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. மத்திய மாநில அரசுகள் ஆறு மாதத்துக்குள் அதாவது வரும் அக்டோபர் 31-க்குள் இந்தச் சட்டத்தின் பயன்பாட்டை அமல்படுத்துவதற்கான விதிகளை வரையறுக்க வேண்டும். இந்தச் சட்டத்தின் 82-வது பிரிவுக்கான விதிகளை உருவாக்குவதற்கே பெரும்பான்மையான காலம் பிடிக்கும் என்று தெரிகிறது.

வீட்டு வசதி அமைச்சகம் யூனியன் பிரதேசங்களுக்கான விதிகளை உருவாக்கும் அதே வேளையில் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் டெல்லிக்கான விதிகளை உருவாக்கும். ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் அமைக்கப்படுவது வீடுகளை வாங்குவோருக்கு ஒத்தாசையான முக்கிய நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது. இந்த ஆணையத்தில் அனைத்து கட்டுமானத் திட்டங்களும் பதிவுசெய்யப்படும். மேலும் கட்டுமானம் தொடர்பான சிக்கல்களைத் தீர்ப்பதற்காக மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் அமைக்கப்படும்.

இந்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டு ஓர் ஆண்டுக்குள் ஒழுங்குமுறை ஆணையங்களை மாநில அரசுகள் அமைக்க வேண்டும் என்று இந்தச் சட்டத்தின் 20-வது பிரிவு தெரிவிக்கிறதாகச் சொல்கிறார்கள். வீடு வாங்குவோர், கட்டுநர்களுக்கிடையே ஏதாவது முரண்பாடு ஏற்பட்டு அவர்கள் புகார் தெரிவிக்கும்பட்சத்தில் அது தொடர்பான முடிவுகளை 60 நாட்களுக்குள் இந்த ஆணையம் எடுக்கும்.

இந்தச் சட்டம் நுகர்வோரின் உரிமைகளைப் பாதுகாக்க வழிவகை செய்யும். அனைத்துக் கட்டுமானத் திட்டங்களையும் பதிவுசெய்வதைக் கட்டாயமாக்கும், திட்டங்கள் பூர்த்திபெறாவிடினும், குடிபுகும் சான்றிதழ் பெறாத நிலையிலும்கூட கட்டுமானங்கள் பதிவுசெய்யப்பட வேண்டும். வீடு வாங்குவோரிடமிருந்து வீட்டுக்கான 70 சதவிகிதப் பணத்தைப் பெறும்போது இந்தப் பதிவு கட்டாயமாகச் செய்யப்பட வேண்டும். மேலும் குறித்த காலத்தில் கட்டிடத்தை நுகர்வோரிடம் ஒப்படைக்கத் தவறும்போது அந்தக் காலத்துக்கான வட்டியை நுகர்வோருக்குக் கட்டுநர்கள் அளிக்க வேண்டியதிருக்கும். வீட்டு வசதித் துறையில் செயலர் மட்டத்திலான அலுவலர் ஒருவர் இடைக்கால ஒழுங்குமுறை ஆணையராக நியமிக்கப்படக்கூடும்.

ஒழுங்குமுறை ஆணையர்கள் நியமிக்கப்பட்டு விட்டால், மூன்று மாதங்களுக்குள் அவர்கள் ஒழுங்குமுறை விதிகளை உருவாக்க வேண்டும். மேலும் ஓர் ஆண்டுக்குள் அதாவது 30 ஏப்ரல் 2017-க்குள் ரியல் எஸ்டேட் மேல்முறையீட்டு தீர்ப்பாயம் உருவாக்கப்பட வேண்டும். இந்த விரைவு தீர்ப்பாயங்கள் 60 நாட்களுக்குள் தங்களிடம் வரும் புகார் தொடர்பாக முடிவெடுக்கும்.

வீட்டு வசதி அமைச்சகச் செயலர் தலைமையிலான குழு ஒன்று மாதிரி விதிமுறைகளை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இதனால் மாநில அரசுகளும் யூனியன் பிரதேசங்களும் தங்கள் விதிமுறைகளை விரைவாக முடிக்க முடியும். மேலும் நாடு முழுவதும், ஒரே மாதிரியான விதிமுறைகள் நடைமுறையில் இருக்கும். வீட்டு வசதி அமைச்சகம் ஒழுங்குமுறை அதிகாரிகளுக்கான மாதிரி விதிமுறைகளிலும் கவனம் செலுத்துகிறது.

இந்த ரியல் எஸ்டேட் சட்டத்தின் அனைத்துப் பணிகளும் பூர்த்தியடைந்து அது முழுமை பெறும் நாளை நுகர்வோரும் கட்டுநரும் ஆர்வத்துடன் எதிர்நோக்கியிருக்கிறார்கள். இந்தச் சட்டம் ரியல் எஸ்டேட் துறையில் மலர்ச்சியை உருவாக்கும் என்பதாலும் நுகர்வோருக்குப் பாதுகாப்பை அளிக்கும் என்பதாலும் இதில் அவர்கள் ஆர்வம்காட்டுகிறார்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்