சொந்த வீடு என்பது ஒவ்வொரு மனிதனிடமும் உள்ள தவிர்க்க முடியாத கனவு. பிளாட் வாங்கிப் போட்டு, பிளான் போட்டு, லோன் போட்டு, காண்டிராக்டருடன் ஒப்பந்தம் போட்டு, ஆபீஸுக்கு லீவு போட்டு என்று போடு போடென்று பலவற்றையும் போட்டு ஒருவழியாக வீடு கட்டி முடிப்பது உண்மையிலேயே நடுத்தரவர்க்கத்தினருக்கு ஒரு சவால்தான்.
ஆனால் அரை நூற்றண்டுக்கு முன்பு கட்டப்பட்ட ஒரு பழைய வீட்டை (சல்லிசாக வருகிறதென்று) வாங்கி, அதன் உருவத்தை மாற்ற ஆசைப்பட்டு, பட்ஜெட்டில் துண்டுக்குப் பதிலாகப் பதினாறு கெஜம் வேஷ்டியே விழப்போவதை உணர்ந்து, கடைசியில் உள்ளதே போதுமென்று சிறிதளவு நகாசு வேலைகளுடன் ஓய்ந்து போனது வேறு யாருமில்ல, அடியேன்தான்.
சுமார் பதினைந்து வருடத்துக்கு முந்தைய சரித்திர நிகழ்வு அது…
வேலூர் மாநகரில், அதற்கு முந்தைய பதினைந்து ஆண்டுக் காலமும் பல வீடுகளில் ஒண்டுக் குடித்தனம் செய்து மண்டை காய்ந்து போயிருந்த நானும் என் மனைவியும் பொறுத்தது போதும் என்று பொங்கி எழுந்தோம்.
நகர எல்லைக் குள்ளாகவோ, சற்று வெளியிலோ ஒரு காலி மனையை வாங்கி, விருப்பம், தேவைகளுக்கேற்ப வீடு கட்டிக் கொள்வதுதான் எங்கள் ஆதர்ச திட்டம். அருகிலுள்ள சத்துவாச்சாரி போன்ற பகுதிகளில் பெருகத் தொடங்கியிருந்த அடுக்குமாடி (ஃபிளாட்) குடியிருப்பு எங்கள் விருப்பப் பட்டியலில் இல்லை. கூரையும் சொந்தமில்லை ; தரையும் நம்முடையது இல்லை என்ற விளைவைக் கூடவே அழைத்துவரும் அடுக்குமாடிக் குடியிருப்பைக் கனவில்கூட விரும்பாத எங்களை நாங்கள் நாடியிருந்த தரகர் நன்றாகவே மூளைச்சலவை செய்துவந்தார்.
“எதுக்குங்க கஷ்டப்படணும்? புதுசா ஒரு மனையை வாங்கி, வீடு கட்டி முடிச்சுக் குடித்தனம் போகக் குறைஞ்சது ஆறு மாசமாவது பிடிக்கும். ஒரு அருமையான வீடு நம்ம கிட்ட ரெடியா இருக்கு. லேசா, இங்கே கொஞ்சம் அங்கே கொஞ்சம் டச் அப் செய்து ஒரு வொயிட் வாஷ் அடிச்சுப் பாருங்க, செட்டி நாடு அரண்மனை தோத்துடும்…”
சினிமாக்களில் வரும் கானாடு காத்தான் அரண்மனைகளைக் கற்பனை செய்துகொண்டு, தரகரின் பின்னே கட்டிய பசுக்களாகச் சென்றோம் நானும் என் மனைவியும். எங்கள் தரகர் மட்டும் அரசியலில் இருந்திருந்தால், பேசியே பெரிய லெவலுக்குப் போயிருப்பார் என்பது சர்வநிச்சயம்.
பின் என்னவாம்….? 1949 ம் வருடம் கட்டப்பட்டு, சுவர்களில் ஆங்காங்கே பொத்தல் விழுந்து, ஜன்னல் மற்றும் மரக்கதவுச் சட்டங்களில் கறையான்களின் புற்றுகளுக்கு இடம் கொடுத்து, சுண்ணாம்பு மற்றும் பெயிண்டைக் கண்டு பலவருடங்கள் ஆகியிருந்த அந்த வீட்டை மறுபேச்சில்லாமல் வாங்கிக்கொள்ளும் அளவுக்கு எங்கள் மனதைக் கரைத்த அந்தத் தரகர் உணமையிலேயே கெட்டிக்காரர்தான்.
நகர எல்லைக்குள் அந்த வீடு இருந்ததென்னவோ வாஸ்தவம்தான். ஆனால், ஒரு வருடம் கழித்துத்தான் தெரிய வந்தது விஷயம். (நாங்கள் வாங்கிய) அந்த வீட்டின் சொந்தக்காரர் எங்கள் தரகரின் குடும்ப நண்பர். அதனால் எங்கள் தரகர் அவரைக் கைதூக்கி விடுவதாக வாக்குக் கொடுத்திருந்தார்.
“ஏன் சார், வேறு வீடே உங்களுக்குக் கிடைக்கலியா….?” என்று கேள்விகளுக்குப் பதில் சொல்லி முடியவில்லை.
உள்ளுக்குள் அசடு வழிந்தாலும், “இந்த வீட்டுக்கு என்ன சார் குறைச்சல் ?” என்று பதில் கூறப் பழகிக்கொண்டேன்.
வீட்டை ஒருவழியாக வாங்கி விட்டோம். பத்திரப் பதிவு முடிந்த ஒரு வாரத்தில் நல்ல நாள் பார்த்து, வயதான என் மாமனாரின் சிபாரிசின் பெயரில் ஒரு வயதான மேஸ்திரியைப் பிடித்து ரிப்பேர் வேலையைத் தொடங்கினேன்.
“ஒரு இருவத்தஞ்சாயிரம் ரூபாய் வெச்சுக்குங்க சார். பத்தே நாளில் எல்ல வேலையையும் முடிச்சுடலாம்…” என்று சொன்ன அருணாசலம் மேஸ்திரி ஒரு தேவதூதன் போல் தோன்றினார் அந்த வேளைக்கு.
அது 1999-ம் வருடம். சிமெண்டு மூட்டை ஒன்று நூற்று இருபத்தைந்து ரூபாய். இதை வைத்துக் கொண்டு மணல் போன்ற பிறவற்றின் விலையை நிர்ணயம் செய்துகொள்ளுங்கள். மேஸ்திரியின் தினக்கூலி 120 ரூபாய். சித்தாளுக்கு 80 ரூபாய். தச்சர், பெயிண்டர்களுக்கும் 120தான்.
சீனியர் அருணாச்சல மேஸ்திரியின் தலைமையில் தினமும் நான்கு மேஸ்திரிகள், ஏழெட்டுச் சித்தாள்கள் என்று களம் இறங்கிய படையினர், இடையிடையே இவர்களுக்கு ஈடு கொடுத்த தச்சர், இறுதியில் கைவண்ணம் காட்டிய பெயிண்டர்கள் மற்றும் அவர்களது எடுபிடிகள் என்று அந்த ஏரியாவே கலகலப்பானது.
இவர்களில் யார் மாறினாலும் அல்லது லீவு எடுத்துக்கொண்டாலும், நாள் தவறாமல் ஆஜரானவர்கள் இருபது வயது அசோக் குமாரும், அறுபது வயது அன்னம்மாவும்தான்.
சித்தாள் கூலியைப் பெற்றுவந்த இவர்களில், அசோக் குமார் என்ற அந்த இளைஞன் செய்ததெல்லாம் அந்தப் படையினருக்கு டீ, காப்பி, டிபன் மற்றும் உணவுப்பொட்டலங்கள் வாங்கி வந்ததுதான். மறந்தும்கூடக் கட்டிடப் பொருட்களில் கைவைக்கவில்லை அந்தக் கட்டிளங்காளை.
அன்னம்மாவோ, எப்போதும் வெற்றிலைப் புகையிலையைத் தானும் போட்டுக் கொண்டு, அவ்வப்போது அருணாச்சல மேஸ்திரிக்கும் வழங்கிவந்தாள். போரடிக்கும்போது, ஒரு மூலையில் உட்கார்ந்துகொண்டு, பழைய செங்கற்களுக்கு வலிக்காமல் சுத்தியலால் தட்டி அவற்றை ஜல்லியாக்கி வந்தாள்.
“மேஸ்திரிதான் செய்யச் சொன்னாரு….” என்று அவ்வப்போது சொல்லுவாள்.
ஒருவழியாக சுமார் ஆயிரம் சதுர அடி அளவுள்ள அந்தப் பழைய வீட்டின் அமைப்பை மாற்றாமல், சுவர்களுக்குப் புதிய சிமெண்டுக் கலவை பூச்சுக் கொடுத்து, ஒன்றிரண்டு கதவுகள் மற்றும் வாசற்கால்களை மாற்றி, புதியதாக ஒரு பாத்ரூம் மட்டும் கட்டி, மின்னிணைப்புகளைப் புதுப்பித்து, சுவர்களுக்குச் சுண்ணாம்பும், கதவுகளுக்குச் சுமாரான பெயிண்ட் அடித்தும் முடித்த போது, சுமார் ஐம்பது நாட்கள் ஓடிப்போயிருந்தன. செலவோ சுமார் ஒன்றரை லட்சம் வரையில் போயிருந்தது, வெறும் ரிப்பேருக்கு மட்டுமே. ஏற்கெனவே வீட்டை வாங்கிய வகையில் சில லட்சங்கள். நடுத்தர வர்க்கத்தைப் புரட்டிப் போடும் செலவுகள். மீள்வது கடினம். கடன் கணைக்கைப் பற்றி நினைத்துப் பார்க்கவும் பயமாயிருக்கும்.
“என்ன மேஸ்திரி, செலவை ரொம்ப இழுத்து விட்டுடீங்களே?” என்று கடைசி நாளின் வேலை முடிவில் ஆதங்கத்துடன் கேட்ட எனக்கு அமைதியாகப் பதில் சொன்னார் அருணாசல மேஸ்திரி,
“பழய வீடுன்னா இப்படித்தான் சார் செலவு இழுக்கும். நேரமும் பிடிக்கும். இதே புது வீடுன்னு சொல்லுங்க…”
“சரி விடுங்க. ஆனது ஆயிடுச்சு…!” என்று என் தலைவிதியை நொந்துகொண்டு, பணியாட்கள் கேட்டபடி, கடைசி நாள் போனஸ் கூலியாக எல்லோருக்கும் ஒரு நாள் கூலித்தொகையைக் கூடுதலாகப் பட்டுவாடா செய்தேன்.
புதிய வீடாக மேக்கப் போட்டுக் கொண்ட அந்தப் பழைய வீட்டில் கிருகப் பிரவேசம் செய்து குடியேறிய பிறகு சாவகாசமாக எனக்குத் தெரிய வந்தது.
அசோக் குமார், அன்னம்மா என்ற அந்தச் சித்தாள்கள் வேறு யாருமில்ல. எனதருமை அருணாச்சல மேஸ்திரியின் மச்சானும், மாமியாரும்தான் அவர்கள் இருவரும் என்று.
இன்னொரு முறை வீடு வாங்கும் அமைப்பு என் ஜாதகத்தில் இருந்தால், இனி ஃபிளாட்தான் வாங்குவேன் என்பதில் என் மனத்தில் ஒரு சந்தேகமுமில்லை.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago