சென்னையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு மாநகரத்தின் பல பகுதிகளையும் ஸ்தம்பிக்க வைத்தது. அடையாறு, கூவம், பக்கிங்ஹாம் என ஆற்றோரப் பகுதி மக்களுக்கு மட்டுமல்ல, மற்ற பகுதிகளுக்குள்ளும் ஆற்று வெள்ளம் எல்லை மீறி ஓடியது. பல பகுதிகளில் வெள்ள நீர் வடிய ஒரு வாரத்துக்கும் மேல் ஆகியது. இதனால் ஏற்பட்ட இழப்பு பல கோடிகள். வீதியிலும், வீடுகளிலும் நிறுத்தப்பட்டிருந்த விலை உயர்ந்த கார்கள் பயனற்றுப் போயின. அடுக்குமாடி வீடுகளில் வசித்த மக்கள் பாதுகாப்பாக இருந்தார்கள் என்றாலும் தரைத்தளத்தில் நிறுத்திய கார்கள் வெள்ளத்துக்குத் தப்பவில்லை.
ஆனால் வெள்ள நீர் சூழ்ந்த சாலிகிராமத்தில் சில அடுக்குமாடி வீடுகளின் தரைத்தளத்தில்கூட வெள்ள நீர் எட்டிப் பார்க்கவில்லை. தெருவில் நிறுத்தப்பட்ட கார்கள் பாதி மிதந்த நிலையில் இருக்க, இந்த அடுக்குமாடி வீடுகளில் நிறுத்தபட்டிருந்த கார்களோ பாதுகாப்பாக இருந்தன என்று சொல்லலாம். இதற்குக் காரணம் இந்த அடுக்குமாடி வீடுகள் தெருவில் இருக்கும் மற்ற வீடுகளைவிட நான்கு அடிகள் உயரமான தளத்தில் அமைக்கப்பட்டிருந்ததுதான். இது நமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்த அந்த கட்டிடத்தைக் கட்டிய கட்டுநர் குறித்து விசாரித்தோம்.
சென்னை சாலிகிராமத்தில் வசிக்கும் கட்டுமானப் பொறியாளர் விஜய் நித்யா அந்தக் கட்டிடங்களை வடிவமைத்தவர் என அறிந்தோம். வளர்ந்து வரும் கட்டுநரான இவர்தான் இந்த அடுக்குமாடி வீடுகளை கட்டிக் கொடுத்துப் பெயர் வாங்கியுள்ளார். இட உரிமையாளர்கள் மற்றும் கட்டுமான நிறுவனங்களுக்கிடையிலான கூட்டுத் தொழில் அடிப்படையில் விநி பில்டர் என்கிற பெயரில் சாலிகிராமம் பகுதியில் வீடுகளைக் கட்டிக் கொடுத்து வருகிறார் இவர். இப்படிக் கட்டிடத் தளத்தை உயர்த்திக் கட்டும் யோசனை எப்படி வந்தது என அவர் பகிந்து கொண்டார்.
பட்டுக்கோட்டை அருகே உள்ள சித்தமல்லி என்கிற கிராமத்திலிருந்து படிப்பதற்காக தம்பி, நான், எனது அக்கா மூவரும் சென்னை வந்தோம். வந்த ஆரம்பத்தில் மூவரும் தங்குவதற்குச் சரியான வீடு அமையாமல் பல வீடுகள் மாறிக் கொண்டிருந்தோம்.
அப்போது அப்பாவின் சேமநல நிதியில் (Provident Fund) சாலிகிராமம் பகுதியில் ஒரு இடத்தை வாங்கிப் போட்டோம். அந்த இடத்தை விற்று, வேறொரு இடம் வாங்கி வீடு கட்டத் திட்டமிட்டோம். நான் கட்டுமானப் பொறியியல் படித்து முடித்து ஒரு கட்டுநரிடம் பணியாற்றிக் கொண்டிருந்த அனுபவம் இருந்ததால், நானே முன்னின்று எங்கள் வீட்டைக் கட்டினேன். அதில் கிடைத்த அனுபவத்தை வைத்து, நான் கட்டும் ஒவ்வொரு வீட்டையும் எனது வீடு போல நினைத்து கட்டி வருகிறேன்.
பொதுவாகக் கூட்டு முயற்சி அடிப்படையில் கிடைக்கும் இடங்களை வாங்கி வீடு கட்டும் கட்டுநர்கள் அந்த இடங்களில் அப்படியே கட்டுமான வேலைகளைத் தொடங்கி விடுவர்கள். அது சரியன முறை அல்ல, அந்த இடத்தில் மீண்டும் மண் பரிசோதனை உள்ளிட்ட ஆரம்பகட்ட அனைத்து வேலைகளையும் மேற்கொள்ள வேண்டும். அதாவது அந்த இடத்தைப் புது இடம் போலவே பணிகளை மேற்கொள்ள வேண்டும். நான் அப்படித்தான் மேற்கொள்கிறேன். பழைய இடமோ புது இடமோ அடித்தளம் நான்கு அடி வரை உயரம் ஏற்றிக் கட்ட வேண்டும் என்பதைக் கொள்கையாகவே வைத்துள்ளேன். பொதுவாக தரைத்தளம் கார் பார்கிங் விட்டு இரண்டு அடுக்கு கட்டுகிறோம் என்றால் மேலே கட்டுகிறபோது உயரம் பிரச்சினையாகும். அனுமதித்துள்ள உயர விதி்முறைகளை மீறக் கூடாது இதில் கவனமாக இருக்க வேண்டும். நான் அடித்தளத்தில் நான்கு அடி ஏற்றும் உயரம் ஏற்றினாலும், வீட்டு உள் அமைப்பில் எந்த மாற்றங்களும் செய்வதில்லை.
தரையிலிருந்து உயர்த்தும் நான்கு அடியைத் தண்ணீர் தொட்டி உயரத்தில் ஈடு கட்டுகிறேன். குறிப்பாகத் தண்ணீர் தொட்டியின் உயரத்தை அதிகரிக்காமல், நீள, அகல வாக்கில் அதிகரிப்பதன் மூலம் வீடுகளுக்குத் தேவையான நீர் கொள்ளளவைச் சமாளிக்க முடியும். அதே நேரத்தில் அனுமதிக்கப்பட்ட உயரத்தை மீறாமலும் பார்த்துக் கொள்ள முடியும். இது எனது அனுபவத்திலிருந்து நான் கற்றுக் கொண்டது.
தற்போது இந்த முறையில் நான்கு அடுக்குமாடி வீடுகளைக் கட்டி முடித்திருக்கிறேன். இந்த நான்கு வீடுகளும் இந்த அடிப்படையில்தான் கட்டியுள்ளேன். அக்கம் பக்கத்து வீடுகளை ஒப்பிடுகிறபோது நான் கட்டும் வீடுகள் கொஞ்சம் உயரமாகத் தெரியும். மழைக் காலத்தில் நான் கட்டிக்கொடுத்த நான்கு அடுக்குமாடி வீடுகளிலும் தரைத் தளத்தில்கூடத் தண்ணீர் எட்டிப்பார்க்கவில்லை. இதைக் கேள்விப்படும்போது மகிழ்ச்சியாக இருந்தது. இது போல கட்டுவதற்குச் செலவு கொஞ்சம் அதிகமாகும் என்றாலும் எதிர்காலப் பாதுகாப்பு கருதி அதை யோசிக்காமல் மேற்கொள்வது நல்லது. தவிர கட்டுநர்களும் தங்களது லாபத்தைக் கொஞ்சம் குறைத்தால் எல்லா வீடுகளும் இது போல அமைக்கலாம் என்றார்.
விதிகளை மீறாமல் கட்டுமானத்தில் கவனிக்க வைத்த இந்தக் கட்டுநர் நிச்சயம் ஒரு மாற்றத்தை உருவாக்குபவர் என்றே சொல்லத் தோன்றுகிறது.
படங்கள் எல்.சீனிவாசன்
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago