ஒவ்வொரு ஆண்டும் எதிர் வரும் ஆண்டும் கடந்த ஆண்டைவிடச் சிறப்பாக இருக்கும் என எதிர்பார்ப்பது வழக்கம். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக ரியல் எஸ்டேட்டைப் பொறுத்தவரையில் இந்த எதிர்பார்ப்பு பொய்த்துப் போய்க்கொண்டுதான் இருக்கிறது. நம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கணிசமான பங்கு செலுத்திவரும் ரியல் எஸ்டேட் துறையின் பாதிப்பு, நம் நாட்டின் பொருளாதாரத்தைப் பாதிக்கக்கூடியது. கட்டுமானப் பொருள்கள் விலையேற்றம், திட்ட ஒப்புதலுக்கு ஆகும் அதிகக் காலம் போன்ற காரணங்களால் கடந்த 2014-ம் ஆண்டில் ரியல் எஸ்டேட் பெருமளவில் பாதிப்படைந்தது.
இந்தியாவில் ரியல் எஸ்டேட் வளர்ச்சி மிகு நகரங்களான மும்பை, பெங்களூரூ, பூனே போன்ற நகரங்களில் ரியல் எஸ்டேட் தொழில் மோசமான பாதிப்பைச் சந்தித்தது. ரியல் எஸ்டேட் தொழிலின் பாதிப்பால் அதன் தொடர்புடைய கட்டுமானத் தொழிலும், கட்டுமான உற்பத்தித் தொழிலும் பாதிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் கட்டுமானத் தொழிலை நம்பியிருக்கும் கட்டுமானத் தொழிலாளர்களும் வேலையின்மையால் பாதிக்கப்பட்டனர்.
2015-ம் ஆண்டு 2014-ம் ஆண்டின் பின்னடைவுகளைப் போக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. 2015-ம் முதலாம் நிதியாண்டு ரியல் எஸ்டேட்டின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் என்னும் நம்பிக்கையைக் கொடுப்பதுபோல ஏற்றமில்லையென்றாலும் இறக்கமில்லாமல் தொடங்கியது. புதிய திட்டங்கள் அதிகம் தொடங்கப்படாவிட்டாலும் கடந்த ஆண்டில் முடிக்கப்பட்ட வீட்டுக் குடியிருப்புத் திட்டங்களில் உள்ள வீடுகள் விற்பனையாகின.
2015 இரண்டாம் நிதியாண்டு ஓரளவு சாதகமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் 2015-ம் ஆண்டு 2014-ம் ஆண்டைக் காட்டிலும் சிறப்பான ஆண்டு எனச் சொல்ல முடியாவிட்டாலும் ரியல் எஸ்டேட் துறை பெரும் வீழ்ச்சியைச் சந்திக்கவில்லை.
ஆனால் ரியல் எஸ்டேட் துறையைச் சேர்ந்த சிலரின் கருத்து வெவ்வேறானவையாக இருக்கிறது. நவீன் ஹவுன்சிஸ் மேலாண்மை இயக்குநர் குமார், 2014-ம் ஆண்டைக் காட்டிலும் 2015 பின்னடைவாக இருந்தது என்கிறார். கிரெடாய் திருச்சி கிளைத் தலைவரான செந்தில்குமார் 2015 ஆண்டு ஓரளவு நிறைவாக இருந்ததாகச் சொல்கிறார்.
கோவை கட்டுமானப் பொறியாளர் சங்கத்தைச் சேர்ந்த ஆத்தப்பன், 2015-ம் ஆண்டின் 2014-ம் ஆண்டை விட சிறப்பாக இல்லை என்கிறார். இவ்வாறு தமிழகம் முழுவதும் ரியல் எஸ்டேட் 2015-ம் ஆண்டு எப்படி இருந்தது என அத்துறை நிபுணர்கள் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர்.
குமார், மேலாண்மை இயக்குநர், நவீன் ஹோம்ஸ், சென்னை
2015-ம் ஆண்டு மோசமானது இல்லை. ஆனால் சிறப்பானது எனச் சொல்ல முடியாது. 2015-ல் இரண்டாம் காலாண்டு ஓரளவு சிறப்பாக இருந்தது. ஆனால் ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் 2015-ம் ஆண்டு மந்தமாகத்தான் இருந்தது. எங்கள் நிறுவனத்தைப் பார்த்தால் ஓரளவு பரவாயில்லை எனச் சொல்லலாம். 2015-ம் ஆண்டின் இறுதியில் சென்னையைத் தாக்கிய வெள்ளம் எல்லாத் தொழில்களையும் பாதித்திருக்கிறது. ரியல் எஸ்டேட்டும் இதற்கு விதிவிலக்கல்ல. ஒரு சந்தை தொடர்ந்து மந்த நிலையிலேயே இருக்க முடியாதில்லையா? அதனால் 2016 கண்டிப்பாக சிறப்பாக இருக்கும் என எதிர்ப்பார்க்கிறோம்
என். இசக்கி, கட்டுமான சங்கத்தின் தேசியக் குழு உறுப்பினர், திருநெல்வேலி
தனிப்பட்ட முறையில் எனக்கு 2015-ம் ஆண்டு சிறப்பாகவே இருந்தது. ஆனால் பெரிய அளவில் கட்டுமானத் தொழிலில் ஈடுபடுவோர் இந்த ஆண்டில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது மறுக்க முடியாது. கட்டுமானப் பொருள்கள் விலையேற்றம், ரியல் எஸ்டேட் துறையில் நிலவில்வரும் மந்த நிலை இவை எல்லாம்தான் கட்டுமானத் தொழிலைப் பாதித்திருக்கிறது.
ரியல் எஸ்டேட்டைப் பொறுத்தவரை திருநெல்வேலியில் மிக மோசமான பின்னடைவைச் சந்தித்திருக்கிறது. நகருக்குள் வாங்கிய நிலத்தின் மதிப்பு மட்டும்தான் ஓரளவு சிறப்பாக இருக்கிறது. நகருக்கு வெளியே புறநகரில் வாங்கிய நிலத்தின் மதிப்பு 50 சதவீதத்துக்கும் மேலாகக் குறைந்திருக்கிறது. 2016-ம் ஆண்டு எல்லோருக்கும் சிறப்பான ஆண்டாக இருக்க வேண்டும்.
தேவராஜன், கட்டுநர், திருச்சி
திருச்சியில் இந்த வருடம் ரியல் எஸ்டேட் துறையைப் பொறுத்தவரை 30 சதவீதம்தான் தொழில் நடந்துள்ளது. 2014-ம் ஆண்டு 40 சதவீதம் நடந்தது. வழிகாட்டும் மதிப்பு அதிகரிப்பு, கட்டுமானப் பொருள்கள் விலையேற்றம் ஆகியவை இதன் காரணங்கள். 2016-ம் ஆண்டிலும் இது தொடரும் என நினைக்கிறேன்.
ஆத்தப்பன் பழநி, கோவைப் பொறியாளர் சங்கம், கோயம்புத்தூர்
கோயம்புத்தூரைப் பொறுத்த அளவில் 2015 அவ்வளவு சிறப்பான ஆண்டாக இல்லை. 2014-ம் ஆண்டைக் காட்டிலும் 2015 எனக்குத் தனிப்பட்ட முறையில் சிறப்பானதாக இல்லை. ரியல் எஸ்டேட் துறையில் நிலவி வரும் மந்த நிலையால் கட்டுமானத் தொழில் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. கட்டுமானப் பொருளான சிமெண்ட் விலையேற்றம் இதற்கு ஒரு முக்கியமான காரணம். கட்டுமானத் திட்டம் ஒப்புதல் தருவதில் காலதாமதம் ஏற்படுகிறது. ஒரு திட்டம் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டு ஒப்புதல் ஆகி வர ஆறு மாத காலம் ஆகிறது. இந்த மாதிரியான விஷயங்களையெல்லாம் மாநில, மத்திய அரசுகள் கணக்கில் எடுத்துக்கொண்டு செயல்பட்டால் வரும் 2016-ம் ஆண்டு ரியல் எஸ்டேட்டுக்குச் சிறப்பான ஆண்டாக இருக்கும்.
செந்தில் குமார், கிரெடாய் திருச்சி கிளை தலைவர், திருச்சி
திருச்சியைப் பொறுத்த அளவில் 2015-ல் ரியல் எஸ்டேட் உத்வேகம் அடைந்துள்ளது. எனக்குத் தனிப்பட்ட முறையில் சிறப்பானதாகவே இருந்தது. கட்டுமானத்துக்கான அனுமதி கிடைப்பதில் சிறிய அளவில் தாமதம் இருக்கத்தான் செய்கிறது. மொத்தமாகப் பார்த்தால் தொழிலில் எளிய முறையில் இல்லை. ஆனால் 2016-ம் ஆண்டு மிகச் சிறப்பானதாக இருக்கும் என எதிர்பார்க்கிறேன்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago