நினைவு தெரிந்த நாளிலிருந்து இயற்கையோடு இயைந்து வளர்ந்ததால், செடி-கொடிகளை வெறும் அஃறிணைகளாக என்னால் பார்க்க முடிந்ததில்லை. நம்மைச் சுற்றி இருக்கும் சக உயிராக, நண்பனாகவே தாவரங்களைப் பார்க்கத் தோன்றுகிறது. இன்னும் சொல்லப்போனால் பச்சைப் பசேல் என இந்தச் செடிகொடிகள் நம்மைச் சூழ்ந்திருக்கும்போது நம் மனதுக்கும் கிடைக்கும் நிம்மதி மனிதர்களால்கூட தர முடியாத உன்னத அனுபவமாக இருக்கும். அதை உணர்ந்து வளர்ந்தவன் நான். அது மட்டுமல்ல செடிகொடிகள் உடல் ஆரோக்கியத்துக்கும் வளம் சேர்ப்பவை. கண்ணுக்குக் குளுமையளிக்கும்; சுவாசத்துக்கு நல்ல காற்றை அளிக்கும்.
பள்ளியின் விடுமுறை நாட்களில், ஆந்திரத்துப் பாட்டியின் வீடு உள்ள அந்தக் குக்கிரமத்துக்குச் செல்வேன். அது இனிமையான அனுபவம். அந்த கிராமத்துக்குச் செல்லப் போதிய பேருந்து வசதி கிடையாது. அதனால் பல மைல்கள் நடந்தே போயிருக்கிறேன். அந்தச் சாலையின் இரு பக்கமும் பச்சைப் பசேல் என விரிந்து கிடக்கும் வயல்வெளியை ரசிப்பதற்காகவே நடந்து செல்வேன்.
என் சிறு வயதிலிருந்தே இயற்கை எனது மிகச் சிறந்த தோழனாக இருந்துவருகிறது. குடியிருந்த வாடகை வீடுகளில் எல்லாம் இன்றும் அடையாளங்களாய் நிமிர்ந்து நிற்கின்றன நான் நட்ட மரங்கள். அதாவது என் பிரியத்துக்குரிய தோழர்கள்.
சொந்த இடமும் வாங்கி, நடுவில் வீடு கட்டி, சுற்றியும் தென்னை, கொய்யா, சப்போட்டா, கொல்லையில் ஒரு புளிய மரம் வைத்து வளர்த்து ஆளாக்கினேன். அடுத்த கட்ட வாழ்வின் நகர்வாக முதல் மாடி கட்டுவதற்கு எனது விருப்ப ஓய்வு பணம் மூலதனமானது. இனியும் தரைத் தளத்தில், அடர்த்தியான நிழல் பரப்பில் செடிகள் வளர்க்க முடியாத சூழல். அதனால், முதல் தளம் அமைக்கும்போதே கைப்பிடிச் சுவரின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் செடிகள் வளர்ப்பதற்கு ஏற்ப நீண்ட கால்வாய் (தொட்டி) போன்ற அமைப்பை நல்ல வடிகால் வசதியோடு அமைத்தேன். அதில் தடித்த பாலிதீன் தாள்களைப் பரப்பி, இயற்கை உரம் கலந்த மண் நிரப்பி, துளசி, தூதுவளை, கற்பூரவள்ளி, மணத்தக்காளி, வெள்ளை எருக்கன், மருதாணி, நெல்லி, நாயுருவி, கஸ்தூரி, செம்பருத்தி போன்ற மருத்துவச் செடிகளை நட்டேன்.
அதேபோல, சுமார் இரண்டு அடி அகலத்தில் கால்வாய்கள் போன்ற நீண்ட பாலிதீன் பாய்களை (தரை ஈரமாகாமலிருக்க) மூன்று வரிசைகளாய் தளத்தில் பரப்பி அழகிய பூந்தோட்டம் அமைத்தேன். சமையலறைக் கழிவுகள், மக்கிய இலைதழைகள், அருகிலிருக்கும் கிராமத்து உறவினர்களிடமிருந்து பெற்ற தொழு உரத்தைப் பயன்படுத்திக் கோழிக்கொண்டை, மனோரஞ்சிதம், வீரிய ஒட்டு ரக செம்பருத்தி, மல்லி, கொடி சம்பங்கி, அலமெண்டா, மாதுளை என்று பயிரிட்டேன்.
இயற்கை உரம், நீர் மேலாண்மை, இயற்கை பூச்சிக் கொல்லி என்று என் மாடித் தோட்டம் பூக்களால் செழித்து வளர்ந்து பூத்துக் குலுங்கிக் கொண்டிருக்கிறது.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
3 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago