வீட்டு விற்பனையின் மையமாகும் கிண்டி

By நிதி அத்லகா

ஒரு காலத்தில் கிண்டி என்றால் தொழிற்பேட்டை மையம் என்றுதான் எல்லோரும் சொல்வார்கள். ஆனால், சமீப காலமாக வீட்டுமனை விற்பனையின் மையமாக கிண்டி மாறிக்கொண்டே வருகிறது என்பதுதான் உண்மை. இதன் மூலம் மனைகளின் விலை விண்ணை எட்ட ஆரம்பித்திருக்கிறது. கூடவே, கிண்டிக்கு அருகிலுள்ள பகுதிகளிலும் இந்த விலையேற்றம் தாக்கத்தை ஏற்படுத்திவருகிறது.

சென்னையின் ‘மைய வர்த்தக மாவட்டம்’ என்பது பாரிஸ் கார்னர், ஜார்ஜ் டவுன் போன்ற பகுதிகளிலிருந்து கிண்டியை ஒட்டிய பகுதிகளுக்கு நகர்ந்துகொண்டிருக்கிறது என்கிறார் ஜே.எல்.எல்.லின் தேசிய இயக்குநர் ஏ. ஷங்கர். “அரசாங்கத்துக்குச் சொந்தமான ஏராளமான இடங்கள் கிண்டியில் இருக்கின்றன. அந்த இடங்களில் நிறுவனங்கள், சுற்றுலா மையங்கள், பொழுதுபோக்கு மையங்கள், தொழிற்பேட்டைகள் போன்றவை உருவாகியிருக்கின்றன.

கிண்டி தொழிற்பேட்டையில் உள்ள ஏராளமான தொழிலக இடங்கள், ஐடி நிறுவனங்களாகவும் ஐடிஈஎஸ் அலுவலகங்களாகவும் மாற்றமடைந்திருக்கின்றன. இதனால் குடியிருப்பு மேம்பாட்டுக்குத் தேவை ஏற்பட்டிருக்கிறது” என்றும் அவர் சொல்கிறார். விமான நிலையம், மைய வர்த்தக மாவட்டம், மெட்ரோ ரயில் நிலையங்கள், ஐடி பூங்காக்கள் போன்றவற்றுக்கு அருகில் கிண்டி இருப்பதால் விடுதிகள், வாடகை வீடுகள், போக்குவரத்து, சுற்றுலா போன்றவற்றிலும் வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது.

“20-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் கிண்டியில் அவ்வளவாக வளர்ச்சி காணப்படவில்லை. மவுண்ட் சாலை, நுங்கம்பாக்கம், ஆழ்வார்பேட்டை, மயிலாப்பூர், தி.நகர் போன்ற பகுதிகளில்தான் வளர்ச்சி காணப்பட்டது. சமீப காலமாகத்தான் கிண்டி பக்கம் வீட்டுமனைத் துறையினர் படையெடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள்” என்கிறார் நவீன்’ஸ் ஹவுஸிங் என்ற நிறுவனத்தின் வணிக மேம்பாட்டுத் தலைவர் ஜி. சேஷசாயி.

கிண்டியில் இருந்த பரந்த நிலப்பரப்புகளில் கிண்டி ரேஸ்கோர்ஸ், கிண்டி தேசியப் பூங்கா, ராஜ் பவன், காந்தி மண்டபம், புற்றுநோய் நிறுவனம், சென்னை ஐஐடி, அண்ணா பல்கலைக்கழகம் போன்றவை தொடங்கப்பட்டன. “திரு வி.க. தொழிற்பேட்டையின் வரவால் சிறுதொழில் நிறுவனங்களின் மையமாக கிண்டி மாறியது.

ஐடி துறையில் ஏற்பட்ட மலர்ச்சி காரணமாக ஓ.எம்.ஆர், ஜிஎஸ்டி சாலை போன்ற இடங்களில் வீட்டு மனைத் துறையில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டன. அதையொட்டி கிண்டியில் நிறைய ஐடி பூங்காக்களும் நட்சத்திர ஹோட்டல்களும் தோன்றின. இதற்குப் பக்கபலமாக அருகிலுள்ள வேளச்சேரி, அசோக் நகர் போன்ற இடங்களில் தரமான குடியிருப்புச் சூழல்கள் உதவின” என்கிறார் அவர்.

மைக்ரோ-மார்க்கெட்டின் சாதக அம்சங்களை விவரிக்கும் கே.ஜி பில்டர்ஸின் இயக்குநர் ஹரேஷ் கிஷோர் சொல்கிறார், “கத்திப்பாரா மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்ட பின் புதுப்புது உயர்தர ஹோட்டல்கள், பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டி மால் போன்றவை குடியிருப்புகளுக்கான தேவைகளை அதிகரித்தன. மேலும், கிண்டி வழியாகப் போகும் மெட்ரோ ரயிலால் பெரும் மாற்றங்கள் ஏற்படப்போகின்றன. இதனால் வர்த்தகம் பெருமளவு மேம்படும். குடியிருப்புப் பகுதிகளுக்கான தேவையை அது மேலும் அதிகரிக்கச் செய்யும்.”

இங்குள்ள வீட்டு மனைத் திட்டங்களின் மதிப்பு ஒரு கோடியிலிருந்து ஆரம்பித்து 5 கோடி வரை போகிறது. ஒரு சதுர மீட்டர் ரூ 7,200-த்திலிருந்து ரூ. 14 ஆயிரம் வரை விற்கிறது. ஒரு கிரவுண்டு ரூ 1.75 கோடியிலிருந்து 2.25 கோடி வரை விற்கிறது. ஐடி நிறுவனங்களுக்கான இடம் வாடகை என்பது ஒரு சதுர அடிக்கு ரூ. 45-ல் ஆரம்பித்து ரூ. 65 வரை, அதாவது ஒரு மாதத்துக்கு.

இத்தனை சிறப்புகள் இருந்தாலும் இங்கேயும் பிரச்சினைகள் உண்டு. போக்குவரத்து நெரிசல்கள், மோசமான சாலைகள் போன்றவற்றால் அங்குள்ள மக்களும், கிண்டி வழியாகச் செல்பவர்களும் பெரும் அவதிக்குள்ளாகியிருக்கின்றனர். கட்டுமானத் துறையினர் இந்தப் பிரச்சினைகளை எப்படிச் சமாளிக்கப்போகிறார்கள்? “அடிப்படைக் கட்டுமானமும் பல இடங்களை இணைக்கும் விதமும் வீட்டுமனைத் துறையின் வளர்ச்சியையும் கிராக்கியையும் தீர்மானிக்கும் காரணிகள். சாலைகள், ரயில் போக்குவரத்து போன்றவற்றால் கிண்டி இணைக்கப்பட்டிருப்பதோடு விமான நிலையம் உள்ளிட்ட முக்கியமான இடங்களுக்கு அருகிலும் இருக்கிறது. மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் கட்டப் பணிகள் நிறைவுற்றிருப்பதும் மாநகரப் பேருந்துகளை எம்.கே.என். சாலை வழியாகத் திருப்பி விட்டதும் கிண்டியின் போக்குவரத்து நெரிசலைக் கணிசமாகக் குறைத்திருக்கின்றன” என்கிறார் நைட் ஃப்ராங்க் நிறுவனத்தின் இயக்குநர் காஞ்சனா கிருஷ்ணன்.

சொகுசு வசதிகளுக்கான சந்தையும் கிண்டியில் விரிவடைந்துகொண்டிருப்பதாக கிஷோர் கூறுகிறார்.

“கணிசமான தொழில் நிறுவனங்களும் மற்ற நுகர்வோரும் வழக்கமான நகர்சார் பகுதிகளிலிருந்து விலகிச் சென்றுகொண்டிருக்கிறார்கள். பெரிய வீடுகளை நோக்கி இப்போது அவர்கள் செல்கிறார்கள்” என்கிறார் அவர். கிண்டியில் குடியிருப்புப் பகுதிகளில் வெவ்வேறு விதமான குடியிருப்புக் கட்டுமானத் திட்டங்களைக் காண முடிகிறது. சில சொகுசு வீட்டுத் திட்டங்களும் அங்கே செயல்படுத்தப்படுகின்றன. “கிண்டி பகுதியில் நிறுவனங்கள், கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள் போன்றவை அதிக அளவில் காணப்படுவதால் குடியிருக்கும் நோக்கில் நிறைய பேர் இங்கே வீடு வாங்குகிறார்கள். கூடவே, முதலீட்டு நோக்கிலும் நிறைய பேர் இங்கே வீடு வாங்கிப்போடுகிறார்கள்” என்கிறார் காசா கிரேண்டேயின் நிர்வாக இயக்குநர் அருண் குமார்.

அடுத்த 5-10 ஆண்டுகளில் கிண்டியில் வளர்ச்சி எப்படி இருக்கும் என்பதைப் பற்றி ஷங்கர் சொல்கிறார். “ஆலந்தூர் ரயில் நிலையம்தான் மெட்ரோ காரிடாரின் பிரதான வழித்தடமாக இருக்கும். மெட்ரோ திட்டத்தால் அந்தப் பகுதியின் அடிப்படைக் கட்டுமானம், போக்குவரத்து போன்றவை மேம்படும்” என்கிறார். அந்தப் பகுதியில் மனைகளில் விலை உச்சத்தில் இருப்பதால் தொழிலகங்களை அங்கே நடத்த முடியாது.

இப்படியாக அங்கே நிறைய இடங்கள் பயன்படாமலும் போதுமான அளவு பயன்படுத்தப்படாமலும் இருக்கின்றன. “அரசாங்கம் இந்த நிலங்களைக் குடியிருப்புத் திட்டங்களுக்காகப் பயன்படுத்திக்கொள்ள அனுமதித்தால் அது கிண்டியின் தோற்றத்தையே மாற்றியமைத்துவிடும். கட்டுப்படியாகக் கூடிய வகையில் புதிய குடியிருப்புப் பகுதிகள் இருக்குமானால் ஒரு துணை நகரமாகவே கிண்டி ஆகிவிடும்” என்கிறார் கே.ஜி. பில்டர்ஸின் கிஷோர்.

© தி இந்து (ஆங்கிலம்) தமிழில்: ஆசை

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்