வீட்டுக் கடன்: இ.எம்.ஐ.-யில் ஒரு கண் வையுங்கள்!

By டி. கார்த்திக்

ரெப்போ ரேட்டை ரிசர்வ் வங்கி குறைத்த பிறகு பல வணிக வங்கிகளும் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதங்களைக் குறைத்தது உங்களுக்குத் தெரிந்த விஷயம்தான். வட்டிக் குறைப்பு மூலம் உங்களுடைய இ.எம்.ஐ. தொகை குறைந்ததா, இ.எம்.ஐ. செலுத்தும் காலம் குறைந்ததா?

இந்தக் காலத்தில் கையில் காசு வைத்துக்கொண்டு யாரும் வீடு வாங்குவதில்லை. வங்கிகள் அளிக்கும் வீட்டுக் கடன் மூலமே வீடு என்ற பெருங்கனவை அடைய முடிகிறது. வீடு வாங்க உத்தேசித்த பிறகு பலரும் வீட்டுக் கடனை வாங்க வங்கிக்கு நடையாய் நடப்பார்கள். அல்லது வங்கிப் பிரதிநிதி நம் வீட்டுக்கு நடையாய் நடைப்பார். இவை எல்லாமே வீட்டுக் கடன் வாங்கும் வரை மட்டும்தான். வீட்டுக் கடனை வாங்கிக் கட்டுநரிடம் கொடுத்ததும் எல்லாமும் முடிந்துவிட்டது என்று வீடு வாங்கியவர் நினைத்துக்கொள்வார்.

அதுவும் இப்போதெல்லாம் ஈ.சி.எஸ். என்றழைக்கப்படும் ‘எலக்ட்ரானிக்ஸ் கிளியரிங் சர்வீஸ்’ மூலமே வீடு வாங்கியவர்கள் இ.எம்.ஐ.யைச் செலுத்த முடியும். இ.எம்.ஐ.-க்குரிய தொகை வங்கி கணக்கில் இருந்தால் போதும், குறிப்பிட்ட தேதியில் அந்தத் தொகையைக் கடன் கொடுத்த வங்கி எடுத்துக்கொள்ளும். எனவே வங்கிக்குச் செல்லும் வேலையும் கிடையாது.

வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் குறையும்போதோ அல்லது அதிகரிக்கும்போதோ இ.எம்.ஐ. தொகை மாறும். அப்படி மாறுகிறதா என்பதைக்கூடப் பலரும் கவனிப்பதில்லை. இ.எம்.ஐ. தொகை சில நூறுகள் குறையும்போதோ அல்லது அதிகரிக்கும்போது அதை யாரும் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. சில ஆண்டுகள் கழித்து எவ்வளவு தொகை கழிந்திருக்கிறது என்று பார்க்கும்போதுதான் பலருக்கும் பல உண்மைகள் தெரிய வரும்.

வீட்டுக் கடனைக் கட்டி முடிக்கும் வரை இ.எம்.ஐ. செலுத்தும் விஷயங்களில் நம் கண்காணிப்பு இருக்க வேண்டும். முதலில் வாங்கிய கடன் நிலுவை தொகை எவ்வளவு?, செலுத்தும் மாதத் தவணைத் தொகை (இ.எம்.ஐ.) எவ்வளவு? இதில் வட்டியும் அசலும் தனித்தனியாக எவ்வளவு? வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் தற்போது எவ்வளவு? என இந்தக் கேள்விகள் கடன் வாங்கியவர் மனதில் எழுந்துகொண்டே இருக்க வேண்டும்.

ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல்படி ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கு ஒரு முறையும் வட்டி விகிதம் மாற்றி அமைக்கப்படும். அதாவது, வட்டி விகிதம் அதிகரிக்கலாம் அல்லது குறையலாம் அல்லது அதே நிலையில் நீடிக்கலாம். இதை வைத்துதான் செலுத்தும் இ.எம்.ஐ. தொகை மாறும்.

வட்டி விகிதம் குறையும் போது சில வங்கிகள் வட்டி விகிதத்தைக் குறைத்துவிட மாட்டார்கள். அதேசமயம் வட்டி விகிதம் உயர்ந்தால் உடனே உயர்த்திவிடுவார்கள். ஈ.சி.எஸ். மூலம் இ.எம்.ஐ.-யைச் செலுத்துவதால் சில நூறு தொகை இ.எம்.ஐ.-யில் மாறும்போது அது நமக்கும் தெரிவதில்லை. இன்னும் சில வங்கிகள் வட்டி விகிதம் உயர்ந்தால் இ.எம்.ஐ. தொகையை உயர்த்தமாட்டார்கள். இ.எம்.ஐ. செலுத்தும் காலத்தை நீட்டித்துவிடுவார்கள்.

வட்டி விகிதம் உயர்ந்து உயர்ந்து 240 மாதங்கள் கட்ட வேண்டிய இ.எம்.ஐ.- தொகையை 360 மாதங்கள் கட்டிய கதையெல்லாம்கூட இங்கே உண்டு. எனவே வட்டி விகிதம் குறைந்தாலோ அல்லது அதிகரித்தாலோ அது வங்கியில் எப்படி எடுத்தக்கொள்ளப்படுகிறது என்பதை வங்கிக்குச் சென்று விசாரித்துத் தெரிந்துகொள்ள வேண்டும். இ.எம்.ஐ. தொகை குறைகிறதா, அதிகரிக்கிறதா?, இ.எம்.ஐ. காலம் குறைந்திருக்கிறதா, அதிகரித்திருக்கிறதா என்பதையெல்லாம் கவனிக்க வேண்டும்.

இதுகுறித்து ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி எஸ்.கோபாலகிருஷ்ணன் கூறும்போது, " வட்டி விகிதம் மாறும்போது இ.எம்.ஐ. தொகையைக் கூட்டுவதா, செலுத்தும் காலத்தைக் கூட்டுவதா என்பது வங்கிக்கும் கடன் வாங்கியவருக்கும் உள்ள புரிந்துணர்வு மூலமே முடிவுசெய்யப்படும். வட்டிக் குறைப்பின் மூலம் இ.எம்.ஐ. குறைகிறது என்றால், வங்கியில் இருந்து உங்களைத் தொடர்பு கொள்ள வேண்டும்.

இ.எம்.ஐ.க் குறைப்பதா அல்லது செலுத்தும் காலத்தைக் குறைப்பதா என்று கேட்பார்கள். இதைத்தான் செய்ய வேண்டும் என்று வங்கிகள் வற்புறுத்த முடியாது. இ.எம்.ஐ. காலத்தை நீட்டிப்பது அல்லது குறைப்பது என எதுவாக இருந்தாலும் உங்கள் அனுமதி இல்லாமல் செய்ய முடியாது. அதையும் தாண்டிச் சந்தேகங்கள் இருக்கும்பட்சத்தில் வங்கிக்கு நேரடியாகச் சென்று அதைப் போக்கிக்கொள்ள வேண்டும்" என்கிறார்.

அண்மையில் வங்கிகள் போட்டி போட்டுக் கொண்டு வட்டி விகிதங்களைக் குறைத்துள்ளன. எனவே, இப்போது இருந்தே நீங்கள் செலுத்தும் இ.எம்.ஐ.-யில் இரு கண் வையுங்களேன்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்