நான் 02.04.1997 தேதியில் வீட்டு மனை ரியல் எஸ்டேட் ஏஜென்ட் மூலம் கிரையம் பெற்றேன். கிரையப் பத்திரமும் கிடைக்கப் பெற்றது. அதன் பின்னர் 15.12.1997-ல் இந்தச் சொத்து தொடர்பாக 1983-ம் ஆண்டு ஜனவரி வரையிலான விபரங்களை வில்லங்கச் சான்று மூலம் பெற்றேன். அதில் நான் கிரையம் வாங்கிய விபரம் மட்டுமே இருந்தது. அதன் பின்னர் 21.04.2006 அன்று 01.01.1987 முதல் மற்றுமொரு வில்லங்கச் சான்று பெற்றேன். அந்தச் சான்றிதழிலும் நான் கிரையம் வாங்கிய விபரம் மட்டுமே இருந்தது.
மேலும் 2012-ல் மேற்படி மனைக்கு வட்டாட்சியர் மூலம் பட்டா சான்று பெற்றுள்ளேன். தற்போது 29.09.2015 அன்று மேற்படி வீட்டுமனை சொத்தில் வில்லங்கம் பார்த்தபோது எனக்கு கிரையம் செய்து கொடுத்த மூன்று மாத காலத்திற்கு பிறகு, எனக்கு கிரையம் கொடுத்த அதே ரியல் எஸ்டேட் ஏஜென்ட் வேறொரு நபருக்கு 04.07.1997-ல் விற்பனை உடன்படிக்கை (Sale Agreement) செய்திருப்பதாக உள்ளது. தற்போது அந்த வில்லங்கத்தைச் சரிசெய்ய தேவையான சட்ட உதவி வழங்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
- மா.இராமமூர்த்தி, பண்ருட்டி
02.04.1997 அன்று நீங்கள் கிரையம் பெற்று, அசல் கிரையப்பத்திரத்தினை கையில் வைத்திருந்து, சொத்தின் சுவாதீனத்தில் தொடர்ச்சியாக இருந்து வந்து, அதற்கு அத்தாட்சியாகப் பட்டாவும் உங்கள் பெயரில் பெற்று இருக்கும் நிலையில், உங்களுக்கு ஏற்கனவே சொத்தினை கிரையம் செய்து தந்து விட்டவர் அதே சொத்தினை 04.07.1997 தேதியிட்ட கிரைய ஒப்பந்த பத்திரம் மூலம் வேறு ஒருவருக்கு விற்பனை செய்ய ஒப்புக்கொண்டிருந்தால் அது சட்டப்படி செல்லாது.
அந்தக் கிரைய ஒப்பந்தப் பத்திரத்தினை அடிப்படையாகக் கொண்டு கிரையப் பத்திரம் ஏதும் ஏற்படாத நிலையில் அந்தக் கிரைய ஒப்பந்தப் பத்திரம் ஏற்பட்ட தேதியிலிருந்து 3 வருட காலம் முடியும் அன்று, அதாவது 03.07.2000 அன்று காலாவதியாகி விட்டிருக்கும். மேலும் மேற்படி கிரைய ஒப்பந்த பத்திரம் உங்களுக்கு அந்தச் சொத்தின் மீதுள்ள உரிமையினை எந்த விதத்திலும் பாதிக்காது. அதையும் மீறி நீங்கள் அந்த வில்லங்கத்தினைச் சரிசெய்ய நினைத்தால் நீங்கள் அந்தக் கிரைய ஒப்பந்த பத்திரத்தின் ஒப்பந்தக்காரர்கள் மீது தகுந்த நீதிமன்றத்தில் தாவா தாக்கல் செய்து அந்தக் கிரைய ஒப்பந்த பத்திரம் சட்டப்படி செல்லாது என்று அறிவிக்க கோரலாம்.
எனக்காக உங்கள் நேரத்தை ஒதுக்கி பதில் தந்தமைக்கு மிகவும் நன்றி. நான் எங்கள் ஊர் கிராம நிர்வாக அலுவலரிடம் கேட்டதற்கு, உங்கள் தாத்தா இறந்து ரொம்ப வருடங்கள் ஆகி விட்டது. அதனால் நீங்கள் கோர்ட் மூலமாகப் பெற்று கொள்ளுங்கள் என்று கூறுகிறார். தற்போது நான் எப்படி என் தாத்தாவின் வாரிசு சான்றிதழ் பெறுவது?
- முரளி சங்கர்,
நீங்கள் கேட்டுள்ள கேள்வியிலிருந்து நீங்கள் கிராம நிர்வாக அதிகாரியிடம் சென்று வாய் மொழியாக உங்கள் தாத்தாவின் வாரிசுச் சான்றிதழ் வேண்டும் என்று கேட்டுள்ளது போல தெரிகிறது. ஆனால் நீங்கள் உங்கள் வட்ட ஆட்சியரை அணுகி எழுத்து மூலமாக மனு செய்து உங்கள் தாத்தாவின் வாரிசுச் சான்றிதழ் கோர வேண்டும்.
அவர் எழுத்து மூலமாக நீதிமன்றத்தை அணுகி வாரிசுச் சான்றிதழ் பெற்றுக்கொள்ளுமாறு பதில் தருவார். அந்தப் பதிலை பெற்ற பிறகு நீங்கள் தகுந்த உரிமையியல் நீதிமன்றத்தில் தாவா தாக்கல் செய்து உங்கள் தாத்தாவின் வாரிசுச் சான்றிதழைப் பெறலாம்.
தாத்தாவின் 30 ஏக்கர் நிலத்தை நான், எனது சகோதரர் மற்றும் அப்பா ஆகிய மூவரும் சம பாகங்களாகப் பிரித்துக்கொண்டு பத்திரப் பதிவுசெய்து செய்துள்ளோம். அப்பாவுக்குப் பின் நானும் சகோதரனும் சம பாகங்களாகப் பிரித்துக்கொள்ள வேண்டும் என்று பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பத்திரம் செட்டில்மெண்ட் பத்திரம். இந்நிலையில் என் அப்பா அவருடைய பாகத்தை வேறு நபருக்கு மாற்றி எழுத முடியுமா?
- சுரேஷ், பொள்ளாச்சி
உங்கள் மூவருக்கும் இடையில் ஏற்பட்டுள்ள பத்திரம் என்னவென்று நீங்கள் கூறவில்லை. அது பாகப்பிரிவினை பத்திரமாக இருக்கும் பட்சத்தில், பாகப்பிரிவினை பத்திரம் பதிவுசெய்து அது செயல்பாட்டிற்கு வந்த பிறகு உங்கள் அப்பாவின் பாகச் சொத்து அவருக்குச் சொந்தமாகி விடும். அதனை அவர் யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்கலாம். செட்டில்மென்ட் பத்திரமாக இருந்தால் அந்தப் பத்திரத்தில் உங்கள் அப்பாவின் பாகச் சொத்துக்களைப் பொறுத்து சட்டப்படி நிபந்தனைகள் ஏதும் விதிக்க முடியாது. அவ்வாறு நிபந்தனைகள் ஏதும் விதித்திருந்தாலும் அவை சட்டப்படி செல்லாது. ஆகவே அந்தச் சொத்தினை உங்கள் அப்பா யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்கலாம்.
நான் ஒரு விவசாய நிலத்தை வாங்க உள்ளேன். அந்த நிலத்தின் பட்டா இப்போது நிலத்தை விற்பவரின் தாயின் பெயரில் உள்ளது. அவருக்கு ஆறு பெண் பிள்ளைகளும் ஓர் ஆண் மகனும் (விற்பவர்)உள்ளனர். விற்பவரின் தாய் இறந்து விட்டார். மகன் (நிலத்தை விற்பவர்) வாரிசுச் சான்றிதழ் அவர் பெயரில்வைத்துள்ளார். பெண் பிள்ளைகள் மகன் ஒருவரே வாரிசாகச் சான்றிதழ் பெற ஒப்புதல் அளித்து உள்ளனர்.இந்நிலையில் நிலத்தை நான் வாங்கும்போது பதிவுசெய்யும் போது பெண் பிள்ளைகளின் மகன்களும் மகள்களும் (பேரப் பிள்ளைகள்) கையொப்பம் பெறுவது அவசியமா?
- பழனிசாமி
நீங்கள் குறிப்பிட்டுள்ள விவசாய நிலம் பூர்வீகச் சொத்தாக இருந்து அந்த நிலத்தின் பட்டா நிலத்தை விற்பனை செய்ய முன்வருபவரின் தாயார் பெயரில் இருக்கும்போது, அந்தச் சொத்தினை நீங்கள் வாங்குவதற்கு விற்பனை செய்ய முன்வருபவரின் தாயார் இறந்த தேதியில் உயிருடன் இருந்த அவரது மகன் மற்றும் மகள்கள் மற்றும் அவரது வாரிசுகள் அனைவரிடமும் கையெழுத்துப் பெற்று கிரையப்பத்திரம் பெறுவதே சட்டப்படி சரியாகும்.
விற்பனை செய்ய முன்வருபவரின் சகோதரிகள் அனைவரின் ஒப்புதலோடு விற்பனை செய்ய முன்வருபவரை மட்டும் வாரிசாக வாரிசுச் சான்றிதழில் காட்டப்பட்டிருந்தால் அந்த வாரிசுச் சான்றிதழ் சட்டப்படி செல்லாது. அந்த வாரிசுச் சான்றிதழை மட்டும் அடிப்படையாகக் கொண்டு விற்பனை செய்ய முன்வருபவரிடம் மற்றும் கையெழுத்து பெற்று கிரையப்பத்திரம் பெற்றால் அது சட்டப்படி செல்லாது.
தருமபுரியில் அசோக்குமார் என்பவர் சுந்தரம் பைனான்ஸ் மூலமாக வேறொருவர் கட்டிய வீட்டை டைட்டல் டீட் சுந்தரம் பைனான்ஸ்கு எழுதிக் கொடுத்துக் கடன் பெற்றுள்ளார். தற்பொது கடன் கட்டத் தவறியதால் வீட்டை ஏலத்தில் விடுகிறார்கள். அந்த வீட்டை வாங்கக் கடனாளி அசோக்குமாரின் கையெழுத்து தேவையா, சுந்தரம் நிறுவனத்தாருக்கு விற்க உரிமை உள்ளதா? தெரியப்படுத்துங்கள்.
- அன்பரசு திருமேணி
அசோக் குமார் தனக்கு சொந்தமான வீட்டினை அடமானம் வைத்து சுந்தரம் பைனான்ஸில் கடன் பெற்று, கடனை திருப்பிச் செலுத்தாத நிலையில், சுந்தரம் பைனான்ஸ் நிறுவனத்தினர் அந்த வீட்டினைச் சட்டப்படி ஏலம் மூலம் விற்பனை செய்ய முன்வரும்போது, வீட்டின் உரிமையாளரான அசோக் குமாரின் கையெழுத்து தேவையில்லை. அந்த வீட்டினை ஏலம் மூலம் விற்பனை செய்ய சுந்தரம் பைனான்ஸ் நிறுவனத்திற்குச் சட்டப்படி முழு உரிமை உண்டு.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago