ரியல் எஸ்டேட் ஆய்வு: பண்டிகைக் காலமும் வீடு விற்பனையும்

By மிது கார்த்தி

பண்டிகைக் காலம் தொடங்கிவிட்டாலே ரியல் எஸ்டேட் தொழில் கொஞ்சம் சூடுபிடிக்க ஆரம்பிக்கும். வீடுகள் விலை கொஞ்சம் விற்பனையாகும். வங்கிகள் போட்டி போட்டுக்கொண்டு வட்டி விகிதங்களைக் குறைத்துள்ள நிலையில், இந்த ஆண்டு பண்டிகைக் காலங்களில் வீடு விற்பனை அதிகரிக்குமா?

பண்டிகைக் கால முதலீடு

பண்டிகைக் காலம் தொடங்கிவிட்டால் ஜவுளியில் தொடங்கி எல்லா வியாபாரமும் சூடுபிடிப்பது போல ரியல் எஸ்டேட் தொழிலும் சூடுபிடிப்பது வாடிக்கை. விநாயகர் சதுர்த்தி, ஆயுதபூஜை, தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் (மகர சங்கராந்தி) என செப்டம்பரில் தொடங்கி ஜனவரி வரை தொடர் பண்டிகைகள் வரிசை கட்டி வரும் என்பதால் பலரும் பண்டிகைக் காலங்களில் தங்கள் முதலீடுகளைச் செய்யத் தொடங்குவார்கள். அந்த வகையில் வீடு, மனையில் முதலீடு செய்வோரும் ஏராளம் உண்டு.

சராசரியாக ஒவ்வொரு பண்டிகைக் காலத்திலும் 20 முதல் 30 சதவீதம் வரை ரியல் எஸ்டேட் தொழிலில் வீடு, மனை விற்பனையாகும். எனவே ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள் பண்டிகைக் காலத்தை ஆர்வமுடன் எதிர்பார்த்துக் காத்திருப்பார்கள். பண்டிகைக் காலத்தையொட்டி வாடிக்கையாளர்களை ஈர்க்கும் அறிவிப்புகளையும் வெளியிடுவார்கள். இந்தப் பண்டிகைக் காலத்தில் அந்த எதிர்பார்ப்பு கொஞ்சம் எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கிறது.

குறைந்த வட்டி விகிதம்

ரிசர்வ் வங்கி வணிக வங்கிகளுக்கு அளிக்கும் குறுகிய காலக் கடன்களுக்கான வட்டி விகிதத்தை (ரெப்போ ரேட்) குறைத்துள்ளது. எனவே பல வங்கிகளும் அந்தப் பலனை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் வகையில் போட்டி போட்டுக் கொண்டி வீட்டுக் கடன் உள்ளிட்ட இதர கடன்களுக்கான வட்டி விகிதத்தைக் குறைத்து வருகின்றன. இந்த வட்டிக் குறைப்பு பெண்களுக்கும் பயனளிக்கும் வகையில் வட்டி விகிதக் குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளன.

வட்டிக் குறைப்புக் காரணமாக வீட்டுக் கடன் வாங்குவது அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பண்டிகைக் காலத்தையொட்டி வட்டிக் குறைப்பு செய்யப்பட்டுள்ளதால் வீடுகள் விற்பனை இன்னும் கொஞ்சம் கூடுதலாக நடைபெறும் என்று ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

விற்பனை தாக்கம்

ஆனால் , இந்த எதிர்பார்ப்புக்கு மாறாக இந்தப் பண்டிகை சீசனில் வீடுகள் விற்பனை மந்தமாகும் என்று புதிய ஆய்வறிக்கை ஒன்று கூறுகிறது. ரியல் எஸ்டேட் தொடர்பாக ஆய்வுகள் செய்யும் ஜே.எல்.எல். இந்தியா நிறுவனம் பண்டிகைக் காலத்தில் வீடுகள் விற்பனை பற்றி ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வின் முடிவில் இந்தப் பண்டிகைக் காலத்தில் வீடுகள் விற்பனை 15 முதல் 20 சதவீதம் வரை இருக்கும் என்று அந்த ஆய்வறிக்கை கூறுகிறது. ஆனால், வழக்கமாக 25 முதல் 30 சதவீதம் வரை வீடு விற்பனை இருக்கும். ஆனால், இந்த ஆண்டு அது குறையும் என்றும் ஆய்வறிக்கை கூறுகிறது.

அதிகரிக்கும் விலை

விற்பனை குறையும் என்று சொல்வதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. பொருளாதார மந்த நிலை, கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வு எனப் பல்வேறு காரணமாக ரியல் எஸ்டேட் தொழில் மந்தமாகியுள்ளது. கட்டி முடிக்கப்பட்ட வீடுகள் விற்கப்படாமல் சும்மாவே பூட்டி வைக்கப்பட்டுள்ளன. இப்படி வீடுகளைச் சும்மாவே பூட்டி வைத்திருந்தாலும்கூட வீடுகள் விலை குறையவே இல்லை.

வழக்கமாக ஒரு பொருள் விற்கப்படாமல் அப்படியே இருக்குபட்சத்தில் வந்த விலைக்கோ அல்லது லாபத்தைக் குறைத்துக்கொண்டு விற்பது தொழில் செய்வோரின் பாலபாடம். ஆனால், விற்கப்படாமல் இருந்தாலும் வீடுகளின் விலை மட்டும் குறையவே இல்லை. மாறாகத் தற்போது வீடுகளின் விலை அதிகரித்துள்ளது என்று ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

விலை உயர்வுக்குக் காரணம்

வீடுகள் விலை உயர்ந்திருப்பதாலாயே இந்தச் சீசனில் விற்பனை குறைவதற்குக் காரணம் என்றும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதான் முக்கிய காரணம் என்றாலும், ரியல் எஸ்டேட் மார்க்கெட் அடி வாங்கியிருப்பதும்கூட வீடுகள் விற்பனை குறைய இன்னொரு காரணம் என்றும் ஆய்வறிக்கை சுட்டி காட்டியுள்ளது. வீட்டு விற்பனை அதிகரிக்க மத்திய மாநில அரசுகள் வீடு வாங்கும்போது வசூலிக்கும் வரிகளைக் குறைக்க வேண்டும் என்றும் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆனால், இதற்கு வேறு ஒரு காரணத்தைச் சொல்கிறார் திருச்சியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் ராஜகோபால். “வீடுகள் விற்பனை குறைய இந்தக் காரணங்கள் மட்டுமல்ல, அதையும் தாண்டி மக்களிடம் வாங்கும் சக்தி குறைந்திருக்கிறது. சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும் என்பது பழமொழி. அதுபோலக் கையில் காசு இருந்தால்தானே வீடு, மனை வாங்குவது பற்றி மக்கள் யோசிப்பார்கள். மக்களிடம் வாங்கும் சக்தி குறைந்திருந்தாலும்கூட ஓரளவுக்கு வீடு விற்பனை நடந்துகொண்டேதான் இருக்கின்றன. பண்டிகைக் காலம் என்றெல்லாம் இதற்கு வரைமுறை இல்லை. ஒரே சீராகவே விற்பனை இருக்கிறது” என்கிறார் அவர்.

சென்னை ரியல் எஸ்டேட் எப்படி?

- ஜெய்

இந்தப் பண்டிகை காலத்தில் சென்னையில் ரியல் எஸ்டேட் தொழில் எப்படி இருக்கும்? இது குறித்து அக்‌ஷயா ஹோம்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி, “பண்டிகைக் காலம் பொதுவாக மங்களகரமான மாதம். குறிப்பாக இந்த அக்டோபர் மாதத்தில்தான் மக்கள் தங்கள் புதிய முதலீட்டைத் தொடங்குவார்கள். அதில் வீடு வாங்குவதற்குத்தான் மக்கள் முதல் இடம் வழங்குவார்கள். சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் எங்களுக்கு எல்லாவிதத்தில் சிறந்த மாதமாக இருந்தது. வீடு விற்பனை அதிகம் நடந்தது. இந்த ஆண்டு சென்ற ஆண்டின் விற்பனையை விட அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம்” என்கிறார்.

இந்நிலையில் இந்தப் பண்டிகைக் காலத்தில் வீடு விற்பனை கடந்த ஆண்டைக்காட்டிலும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்ற ஆண்டு 25-30 சதவீதம் இருந்தது. இந்த ஆண்டு இதைக் காட்டிலும் 10-15 சதவீதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. சென்னை, தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் பண்டிகைக் கால விற்பனை சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து நவீன்ஸ் ஹோம்ஸ் நிறுவனர் குமார், “இந்த மாதம் வீட்டு விற்பனைக்கு ஒரு சாதகமான மாதம். இதற்குக் காரணம் மக்கள் தங்கள் முதலீடு குறித்து சிறப்பான முடிவுகளை எடுக்கக்கூடிய மாதம் இதுவாகத்தான் இருக்கும். இந்த வருடப் பண்டிகைக் காலம் சிறப்பானதாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம். மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களும் இந்த வீடு விற்பனைக்கு ஆதரவாக இருக்கும்” என்கிறார்.

வீட்டு விலை ஓரளவு கட்டுக்குள் வந்த இந்தக் காலகட்டத்தில் வீட்டு விற்பனை சராசரியாக அதிகரித்துவருவதைப் பார்க்க முடிகிறது. இந்நிலையில் வரும் இந்தப் பண்டிகைக் காலம் வீட்டு விற்பனையை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம்.

குமார் - சிட்டிபாபு

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

49 mins ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

மேலும்