எனக்குப் பிடித்த வீடு: கிளிகளுக்காகக் காத்திருக்கும் பால்கனி

By முருகேஸ்வரி ரவி

வீடு என்பது கல்லும் மண்ணும் செங்கலும் சேர்ந்து உருவாகும் கட்டிடம் மட்டுமல்ல. அன்பு, அழகு, தூய்மை போன்றவை நிறைந்தது. சில வருடங்களுக்கு முன்பு வரை சிவகாசியில் சொந்த வீட்டில் வாழ்ந்து வந்தோம். என் கணவரின் தொழில் நிமித்தமாக சென்னைக்கு மாற்றலாகி வந்தபோது, அபார்ட்மெண்டில் வாழ வேண்டிய கட்டாயமும் சூழல் ஏற்பட்டது.

மிகப் பெரிய வீட்டில் காலாற நடந்து பழகிய எங்களுக்கு, இந்தப் பக்கம் திரும்பியவுடன் சமையலறை. அந்தப் பக்கம் திரும்பியவுடன் படுக்கையறை என்று அனைத்தும் அருகருகே இருந்தது ஆச்சரியமான விஷயம். சிவகாசி வீட்டில் குழந்தைகள் பள்ளிக்குச் சென்றவுடன் ஓடி ஓடி வீட்டை ஒதுங்க வைப்பதற்குள் போதும் போதும் என்றிருக்கும். இங்கு இந்த அடுக்குமாடிக் குடியிருப்பு வீட்டை மிகச் சுலபமாக ஒதுங்கவைத்து முடித்துவிடுகிறேன்.

இந்த அடுக்குமாடிக் குடியிருப்பு வீட்டுக்கு வந்ததால், வீட்டுக்குச் சாமான்களை வாங்கிவிட்டு பின் உபயோகமில்லாதவற்றைப் பரண் மீது தூக்கிவைக்கும் வழக்கம் நின்றுபோய்விட்டது. எந்தப் பொருளை வாங்குவதானாலும் , 'இது தேவைதானா? இடத்தை அடைக்காதா?' என்று ஒரு முறைக்கு இரு முறை யோசிக்க வேண்டியுள்ளது. இதனால் வீட்டில் தேவையற்ற பொருட்கள் குவிவது குறைந்தது. வேலையும் எளிதாயிற்று. குறைந்தபட்ச தேவைகளுடன் நிறைவான வாழ்க்கை வாழ்வது எப்படி என்று புரிந்தது.

சில வீடுகள் இறுக்கமாயிருக்கும். போதிய வெளிச்சம் இருக்காது. பகல் நேரங்களிலும் மின்சார விளக்கு தேவைப்படும். போதுமான ஜன்னல்கள் இல்லாததால் காற்று வராது. ஆனால் எங்கள் அடுக்குமாடிக் குடியிருப்பில் ஒவ்வொரு படுக்கையறையிலும் ஒரு பால்கனி உண்டு. அதனால் கதவைத் திறந்தால் பளீரென்ற வெளிச்சமும், திமுதிமுவென்று காற்றும் வரும்.

வீடு கடற்கரைக்கு அருகே இருப்பதால் காற்று வாங்க என்று எங்கேயும் செல்ல வேண்டியதில்லை. பால்கனியில் நின்றால் போதும் தென்றல் வந்து வருடும். நகரங்கள் பொதுவாய் கான்கிரீட் காடுகளாக அடர்ந்துவிட்டன என்ற குற்றச்சாட்டு உண்டு. ஆனால் எங்கள் பால்கனியில் அமர்ந்தால் சோலைவனம் போல நாலாபுறமும் மரங்கள் தெரிகின்றன. பக்கத்து வீட்டில் மிகப்பெரிய மாமரம் ஒன்று உள்ளது. அதை ரசித்துக்கொண்டே இருப்பேன். பூத்து, பின் காய்த்து, பின் தளிர்ப் பச்சையில் புது இலைகளுடன் என்று அதன் வளர்ச்சியை வருடந்தோறும் உணர்வுபூர்வமாகக் கண்டு கழிப்பேன். வெள்ளிக்கிழமைதோறும் பக்கத்து வீட்டுப் பெரியம்மா மாலையில் கோலமிட்டு துளசிமாடத்தில் விளக்கேற்றி வழிபடுவார்கள். அதையும் மேலேயிருந்தே கண்டு ரசிப்பேன்.

மாலை மணி நான்கு ஆனவுடன் பள்ளி விட்டு வரும் குழந்தைகள் கீழே விளையாட ஆரம்பித்து விடுவார்கள். நான் பால்கனியில் ஒரு சேர் போட்டு அமர்ந்து கொண்டு அவர்களை வேடிக்கை பார்ப்பேன். அவர்கள் சைக்கிள் ஓட்டுவது ஓடிப்பிடித்து விளையாடுவது, கண்ணாமூச்சி, கிரிக்கெட் என வித விதமாய் விளையாடுவார்கள். சமயங்களில் பெரியவர்கள் இறகுப் பந்து விளையாடுவதும் உண்டு.

பச்சைக் கிளிகள் அதிகம் இருக்கும். அதன் கீச் கீச் ஒலியைக்கேட்டவுடன் ஓடிச்சென்று பார்ப்பேன். அவை பறந்த வண்ணம் இருக்கும் நம் வீட்டுக்கு அவை வர வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் அவற்றுக்காகத் தினமும் அரிசியும் தண்ணீரும் பால்கனியில் வைக்கிறேன். என்றாலும் கிளிகளின் கடைக்கண் பார்வை எங்கள் வீட்டின் மீது படவில்லை. செடி கொடி இருந்தால் அவை வரும் என்று ஒருவர் சொன்னார். இப்போது சில பூந்தொட்டிகள் வைத்துச் செடிகள் வளர்க்கின்றேன். காகங்கள் தான் வருகின்றன. அவை உரிமையாய் வந்து கத்தி என்னைக் கூப்பிடும். என் கணவரோ என்னைக் கேலி செய்வார், “உன் ஃபிரண்டஸ் உன்னைக் கூப்பிடுகிறார்கள் ... பார்” என்று.

என்றேனும் ஒருநாள் கிளிகள் வரும் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன். புறாக்களுக்கும் பஞ்சமில்லை. அருகிலுள்ள மருத்துவமனையில் ஆஸ்பெஸ்டாஸ் வேய்ந்த கூரையில் அவை தத்தி தத்தி நடந்து பேரணி நடத்தும். பைனாக்குலர் வைத்துக்கொண்டு அவற்றைப் பார்த்து ரசிப்பேன். என் இளைய மகள், “அம்மா உன் அலப்பறைக்கு ஒரு அளவே இல்லையா?” என்று கிண்டல் அடிப்பாள்.

அம்மா மடியில் சாய்ந்து கொண்டு கதைகள் கேட்பது போன்ற இன்பத்தை இந்த பால்கனி எனக்கு அளிக்கின்றது. மொட்டை மாடியில் வைத்து சாதம் ஊட்டும் அம்மாவிடம் கதைகள் கேட்ட காலம் ஒன்று உண்டு. இளமைக்கால நினைவுகளை திகட்ட திகட்ட நினைத்துப் பார்த்து மகிழும் வழக்கம் எனக்கு உண்டு. அம்மா நினைவு வந்து அவ்வப்போது தனிமை வாட்டும் போது பால்கனியில் அமர்ந்து நிலவையே பார்த்துக் கொண்டிருப்பேன். நிலவு 'வருத்தப்படாதே நான் அருகில் வருகிறேன்' என்று கூறியவாறு அருகில் வருவது போல் தோன்றும்.

இப்படி என் வீட்டின் பால்கனி என் உள்ளத்தைக் கவர்ந்து ராஜாங்கம் நடத்துகின்றது.வீட்டிற்கு விருந்தினர் யார் வந்தாலும் அவர்களிடம் பால்கனி புராணம் பாடாமல் விடுவதில்லை. இப்போது பால்கனிதான் என் மனதுக்கு இதமளிக்கும் சோலை.

இந்தப் பகுதிக்கு நீங்களும் பங்களிக்கலாம். உங்கள் வீட்டில் உங்களுக்குப் பிடித்த பகுதி ஒன்று இருக்கும். மன இறுக்கமாக உள்ள வேளைகளில் உங்களை இளைப்பாற்றும் உங்கள் ஊஞ்சலைப் பற்றி எழுதலாம். நீங்கள் நிதானமாக அமர்ந்து தேநீர் அருந்தும் பால்கனியைப் பற்றி எழுதலாம். வீடு என்பது செங்கற்களால் ஆன கட்டிடம் அல்ல. வாழ்க்கை என்பதன் திரு உருவம். இதை எடுத்துரைப்பதே இந்தப் பகுதி.

உங்கள் வீட்டின் பிடித்த பகுதி பற்றிய புகைப்படத்துடன் உங்கள் புகைப்படத்தையும் சேர்த்து எங்களுக்கு அனுப்புங்கள்.

அனுப்ப வேண்டிய முகவரி

சொந்த வீடு, தி இந்து

கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை-600 002.

மின்னஞ்சல் முகவரி: sonthaveedu@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்