என் தந்தைவழிப் பாட்டியின் பெயரில் பத்திரப்பதிவு செய்த 2400 சதுர அடி மனை உள்ளது. அவருக்கு என் அப்பா மற்றும் 2 மகன் 1 மகள் என்று 4 வாரிசுகள். அனைவருக்கும் திருமணமாகி வயதுக்கு வந்த பிள்ளைகள் உள்ளனர். தற்போது என் தாத்தா, பாட்டி, என் அப்பா மற்றும் ஒரு சித்தப்பா ஆகிய 4 பேர் இறந்துவிட்டனர். என் தாத்தா தவிர மற்றவர்களுக்கு இறப்புச் சான்றிதழ் உள்ளது. தாத்தா இறந்தது 1986ம் வருடம். ஆனால் இறந்த தேதி யாருக்கும் நினைவில்லை என்கிறார்கள். அரசு பதிவேடுகளிலும் இறப்பு, பதிவுசெய்யப்படவில்லை. இறந்த பாட்டி பெயரில் உள்ள சொத்தைப் பாகம் பிரிக்க தாத்தாவின் இறப்புச் சான்றிதழ் அவசியமா? அது இருந்தால்தான் எங்களால் வாரிசு சான்றிதழ் பெற முடியுமா? தேதி தெரியாத இறப்புக்குச் சான்றிதழ் பெற முடியுமா? அதைப் பெற வழிமுறை என்ன? பாகம் பிரிக்க உறவினர்கள் தயாராக உள்ளனர்.
- G.விஜயகுமார், கொடுங்கையூர், சென்னை.
உங்கள் பாட்டி பெயரில் உள்ள சொத்துகளைப் பொறுத்து உங்களுக்கிடையில் பாகம் பிரித்துக்கொள்ள உங்கள் தாத்தாவின் இறப்புச் சான்றிதழ் தேவையில்லை. பாகப்பிரிவினைப் பத்திரத்தினைப் பதிவுசெய்வது சட்டப்படி கட்டாயம் இல்லை. ஆனால் நீங்கள் பாகப்பிரிவினைப் பத்திரத்தினை பதிவுசெய்யச் சென்றால் சார்பதிவாளர் அலுவலகத்தில் உங்கள் தாத்தாவின் இறப்புச் சான்றிதழ் மட்டுமன்றி உங்கள் பாட்டி, அப்பா மற்றும் சித்தப்பா ஆகியோரின் இறப்புச் சான்றிதழ்களோடு அவர்கள் அனைவரின் வாரிசுச் சான்றிதழ்களையும் கேட்பார்கள். உங்கள் தாத்தாவின் இறப்பு பதிவு செய்யப்படாமல் இருந்தால் நீங்கள் தகுந்த நீதிமன்றத்தை அணுகி இறப்பினைப் பதிவு செய்யவும், இறப்புச்சான்றிதழ் பெறவும் முடியும். அதன் பிறகு வட்டாட்சியருக்கு மனு செய்து உங்கள் தாத்தாவின் வாரிசு சான்றிதழ் பெற முடியும்.
என் தந்தையின் அப்பா வழி பாட்டியின் பெயரில் உள்ள வீட்டில், அப்பாவின் இரு தங்கைகளுக்கு உரிமை உள்ளதா? என் கொள்ளுப் பாட்டி 1950லும், என் தாத்தா 2007லும் இறந்துவிட்டனர். வீட்டு வரி தாத்தா பெயரில் கட்டிவருகிறோம். மேலும் என் பாட்டி எங்களுடன் உள்ளார். என் தாத்தாவுக்கு நான்கு தம்பிகள், அவர்களுக்கான இடத்தைப் பிரித்துக் கொடுத்தாகிவிட்டது.
- ரமேஷ் குமார். ரா, அமராவதிநகர்.
உங்கள் கொள்ளுப் பாட்டி (உங்கள் அப்பாவின் பாட்டி) பெயரில் வீடு உள்ளது என்று கூறியுள்ளீர்கள். அந்த வீட்டுக்கு உங்கள் தாத்தாவின் (கொள்ளுப் பாட்டியின் ஐந்து மகன்களில் ஒருவர்) பெயரில் தற்போது வரி கட்டிவருகிறீர்கள் என்று கூறியுள்ளீர்கள். அப்படியென்றால் உங்கள் தாத்தாவுக்கும் அவரது சகோதரர்களுக்கும் இடையில் சொத்துக்களைப் பிரிக்கும்போது அந்த வீடு உங்கள் தாத்தாவின் பாகத்திற்கு வந்துள்ளது என்று எடுத்துக்கொண்டால், உங்கள் தாத்தாவின் வழித்தோன்றல்கள் (Successors) அனைவருக்குமே அந்த வீட்டில் உரிமை உள்ளது.
கோவையில் ஒரு புர மோட்டர்ஸிடம் இரண்டாண்டுகளுக்கு முன்பு ஒரு வீட்டு மனை வாங்கினேன். அப்போது அந்த நிலம் டிடிசிபி அப்ரூவல் ஆகவில்லை. பஞ்சாயத்து அனுமதியில் மனைகளைப் பிரித்திருந்தார்கள். இப்போது டிடிசிபி அப்ரூவல் கிடைத்துவிட்டது. ஆனால் 45x32 அளவுள்ள 10-ம் எண் மனையில் அப்ரூவல் ஆன பின்பு 50x32 என 8-ம் எண் கல் வைத்துள்ளார்கள். புரோமோட்டர்ஸிடம் கேட்டதில் ஆப்ருவல் ஆன பிறகு சைட் நம்பர் மாற்றும்படி ஆகிவிட்டது. எனவே 160 சதுர அடி கூடுதலான உங்கள் மனைக்கு ரூ.1 லட்சம் தந்தால் பிழை திருத்தல் பத்திரம் (Rectification Deed) எழுதிப் பதிவுசெய்து கொடுத்துவிடுகிறோம் என்கிறார்கள். உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கிறேன்.
- எஸ். நடராஜன், ஈரோடு
ஒரு வீட்டு மனையினைப் பஞ்சாயத்து அப்ரூவல் பெற்று உங்களுக்கு விற்பனை செய்த பிறகு அந்த லேஅவுட்டின் வரைபடத்தை மாற்றி டிடிசிபி அப்ரூவல் பெறுவதற்கு அந்த லேஅவுட்டின் புரமோட்டர்ஸ்க்கு உரிமை கிடையாது. எனவே அந்த டிடிசிபி அப்ரூவல் பெற்ற வரைபடத்தினை அடிப்படையாகக் கொண்டு மனைகளின் எண்களையும், பரப்பளவுகளையும் மாற்றி எல்லைக் கற்கள் பதிப்பதும் சட்டப்படி ஏற்புடையதல்ல. ஆகவே புரமோட்டர்ஸ் கூறுவது போல் 160 சதுர அடி கூடுதல் பரப்பளவிற்கு ரூ.1 லட்சம் கொடுத்து பிழை திருத்தல் பத்திரம் எழுதுவதன் மூலம் அந்த 160 சதுர அடி பரப்பளவிற்கு நீங்கள் சொந்தக்காரர் ஆக முடியாது.
எனது தகப்பனார் அரசு ஊழியராகப் பணியில் இருக்கும்போது ஒரு விபத்தில் 2003-ம் ஆண்டு மரணமடைந்தார். எனது பிறந்த தேதி 27.04.1982. தற்பொழுது எனது வயது 33. அன்னாரின் மூத்த மகனான எனக்கு வாரிசு வேலை கடந்த 2007-ம் ஆண்டு மாவட்ட அலுவலகத்தில் கிடைக்கப்பெற்று தற்பொழுது 7½ ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் எனது தகப்பனார் நான் மைனராக இருக்கும்பொழுது கடந்த டிசம்பர் 1999-ஆம் வருடம் எனது பெயரில் ஒரு வீட்டுமனையை வாங்கியுள்ளதற்கான பத்திரம் எனது தாத்தாவின் இரும்பு பெட்டியைச் சுத்தம் செய்தபொழுது சில காலங்களுக்குமுன் கண்டெடுக்கப்பட்டது.
அந்த மனையின் விபரங்களை நான் வேலை பார்க்கும் அலுவலகத்தில் Property Statement-ல் சேர்த்து பத்திரநகலுடன் எனது Service Register-ல் பதிவுகள் மேற்கொள்ள எனது மாவட்ட அலுவலருக்கு விண்ணப்பம் செய்யலாமா? மேலும் அந்நிலத்தில் பின்னர் வீடுகட்ட எங்களது சென்னை துறைத் தலைவரிடம் முன்அனுமதி பெற்று எங்களது மாவட்ட ஆட்சியர் மூலமாக வீடுகட்டு முன்பணம் பெற்று வீடுகட்டலாமா? என்பதனை தெளிவாக எனக்கு விளக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். உரிய பதிலை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
- ஐ. ராஜா, தூத்துக்குடி
உங்கள் தந்தை அரசுப் பணியில் இருந்தபோது இறந்துபோன காரணத்தால் கருணை அடிப்படையில் அரசு வேலை கிடைக்கப்பெற்று கடந்த 7½ வருடங்களாக அரசுத் துறையில் வேலை செய்துவரும் உங்களுக்கு, உங்கள் அப்பா நீங்கள் மைனராக இருந்த காலத்தில் உங்கள் பெயரில் வாங்கிய வீட்டுமனையினைப் பற்றி தற்போதுதான் தெரியவந்திருப்பதால், நீங்கள் தாராளமாக உங்கள் Property Statement மற்றும் Service Register ஆகியவற்றில் அந்த வீட்டுமனை பற்றிய விபரங்களைப் பதிவு செய்யவும், அதன் பிறகு துறைத் தலைவரிடம் முன் அனுமதி பெற்று அந்த வீட்டுமனையில் வீடு கட்டவும் உங்களுக்கு முழு உரிமை உண்டு.
வீடு, மனை வாங்குவதில், விற்பதில் உள்ள சட்டம் தொடர்பான உங்கள் சந்தேகங்களுக்குகேள்விகளுக்கு சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் எஸ்.பி.விஸ்வநாதன் பதிலளிக்கிறார்.
கேள்விகள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல்: sonthaveedu@thehindutamil.co.in
தபாலில் அனுப்ப: சொந்த வீடு, தி இந்து (தமிழ்),
கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை - 600002
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 hour ago
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago