திறமைக்கேற்ற படிப்பு, படிப்புக்கேற்ற வேலை, வேலைக்கேற்ற வருமானம்... பல இளைஞர்களின் கனவு இது. சமீபகாலமாக இந்த வரிசையில் 'வருமானத்துக்கேற்ற வீடு' என்ற புதிய கனவும் இடம்பிடித்துள்ளது. இளைஞர்கள் மட்டும்தான் என்றில்லை. தங்களுக்கென்று சொந்தமாக ஒரு வீடு என்ற கனவைப் பல காலமாகத் தங்கள் மனதில் அடைகாத்துக் கொண்டிருக்கும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த மத்திம வயதுக்காரர்களுக்கும் இது பொருந்தும்!
வீடு கட்டும்போது மக்கள் எதிர்கொள்ளும் முக்கியப் பிரச்சினை, அதற்கு ஆகும் செலவு. எது செலவு என்பதை விட எதெற்கெல்லாம் செலவு செய்யப்பட வேண்டும், எதில் எல்லாம் சிக்கனம் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்பதில் இன்னமும் பலருக்குப் போதிய விழிப்புணர்வு இல்லை.
'திட்டமிட்ட பட்ஜெட்டின் எல்லையைச் செலவு தாண்டிவிடக் கூடாது' என்று பார்த்துப் பார்த்து வீடு கட்டும் கலாச்சாரத்தின் புதிய பரிமாணமாகக் ‘குறைந்த செலவில் வீடு' என்ற ஒரு கருத்து அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் தங்கள் சேமிப்புகளை எல்லாம் செலவு செய்து ஓரளவு வசதியாகக் கட்டினாலும், பார்ப்பவர்கள் 'குறைந்த செலவில் வீடு கட்டிட்டாங்க' என்று சொல்லும்போது, வீட்டைக் கட்டியவர்களுக்கு ஏதோ குறை ஏற்பட்டதுபோல் உணர்கிறார்கள்.
இந்த நிலையில்தான் சமீபமாக, ‘வருமானத்துக்கேற்ற வீடு' என்ற கருத்து மக்களிடம் பரவலாகி வருகிறது. வருமானம் எவ்வளவோ அதற்கேற்ற அளவுக்குச் செலவுகளைச் சமாளித்து வீடு கட்டுவதுதான் இதன் மையக் குறிக்கோள்.
கோடீஸ்வரர் ஒருவர் பத்து கோடி ரூபாய்க்கு வீடு கட்டலாம். கூலி வேலை பார்க்கும் ஒருவர் அவர் வருமானத்துக்கு ஏற்றபடி வீடு கட்டலாம். ஆனால் அந்த வீடு வசதியான வீடா என்பது ஒருவருக்கு ஒருவர் மாறுபடும். 'எது வசதி?' என்பதில்கூட ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து இருக்கும்.
இப்படியிருக்கும் பட்சத்தில், வீடு கட்டுவதற்குத் தேவையான பொருட்கள், வேலைத் தரம், வீட்டின் அதிகபட்ச வாழ்நாள் ஆகியவற்றின் அடிப்படையில் வருமானத்துக்கேற்ற வீட்டை ஒருவர் கட்டிவிட முடியும். ஆனால் அந்த வீட்டில் சில கலை அலங்காரங்கள் செய்ய முற்பட்டால், அப்போது 'வருமானத்துக்கேற்ற வீடு' என்பதில் நாம் சில சமரசங்களைச் செய்துகொள்ள நேரிடும்.
ஆக இப்படியான 'வருமானத்துக்கேற்ற வீடு' அல்லது 'மலிவு விலை வீடு' அல்லது 'குறைந்த செலவிலான வீடு' என்பனவற்றில் முக்கியப் பிரச்சினை செலவு அல்ல. மாறாக, எந்தப் பின்னணியில் இந்த வீட்டைக் கட்டுகிறோம் என்பதில்தான் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும்.
நாம் தேர்வு செய்யும் இடம், அந்த இடத்தின் நில மதிப்பு, அந்தப் பகுதியின் கலாச்சாரம், அங்கிருக்கும் பருவச் சூழ்நிலைகள் உள்ளிட்ட பல விஷயங்களை நாம் 'வருமானத்துக்கேற்ற வீடு' என்ற கருத்தின் அடிப்படையில் வீடு கட்டும்போது நினைவில் கொள்ள வேண்டும்.
ஆனால் 'வருமானத்துக்கேற்ற வீடு கட்டித் தாருங்கள்' என்று ஒருவர் கட்டிடக் கலைஞர் மற்றும் பொறியாளர்களைச் சந்தித்தால், அவர்கள் தங்களுக்குப் பரிச்சயமான ஒரு சில விஷயங்களை மட்டும் வைத்துக்கொண்டு வீடு கட்டித் தருவார்கள். அது நிச்சயமாக 'வசதியான வீடாகவோ' அல்லது 'வருமானத்துக்கேற்ற வீடாகவோ' இருக்காது. ஆனாலும், 'நீங்கள் சொன்னதுபோலத்தான் வீட்டைக் கட்டியிருக்கிறோம்' என்பார்கள்.
இந்தப் பிரச்சினைகளைத் தவிர்க்க நினைத்தால், உங்கள் வீட்டை வடிவமைக்கும் கட்டிடக் கலைஞரின் பங்கு அதிகம் தேவைப்படும். வீடு கட்டும்போது கற்பனைத் திறனுடன் வீடு கட்டுவதை விடவும், அறிவுப்பூர்வமாகச் சிந்தித்து வீட்டைக் கட்ட வேண்டும்.
நீங்கள் தேர்வு செய்த இடத்துக்கு ஏற்ப, அந்தப் பகுதியின் கலாச்சாரத்துக்கு ஏற்ப மற்றும் அங்கிருக்கும் பருவ நிலைகளுக்கு ஏற்ப வீடு கட்ட வேண்டும். இவற்றைத் திட்டமிட்டு செயல்படுத்தினால், நாம் கட்டும் வீடு வருமானத்துக்கேற்ற வீடாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை!
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
26 mins ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
5 days ago
சிறப்புப் பக்கம்
6 days ago
சிறப்புப் பக்கம்
7 days ago
சிறப்புப் பக்கம்
7 days ago
சிறப்புப் பக்கம்
7 days ago
சிறப்புப் பக்கம்
7 days ago