கம்பீரம் தரும் கடிகாரங்கள்

By செய்திப்பிரிவு

அனில்

செல்பேசியில், தொலைக்காட்சியில் எனப் பல சாதனங்கள் மூலம் மணி பார்த்துக்கொள்ளும் வசதி இப்போது இருக்கிறது. கைக்கடிகாரத்தில் மணி பார்ப்பதுகூடப் பழைய பாணி ஆகிவிட்டது. இந்தக் காலகட்டத்தில்கூட வீட்டில் கடிகாரம் மாட்டுவது அவசியமானதாக இருக்கிறது. கடிகாரத்தில் மணி பார்க்கிறோமோ என்னவோ பழமையான கடிகாரத்தால் வீட்டை கம்பீரமாக மாற்றலாம்.

பெண்டுலக் கடிகாரம் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே பயன்பாட்டில் இருக்கின்றது. நெதர்லாந்தைச் சேர்ந்த கிறிஸ்டியன் ஹ்யூஜென்ஸ் என்பவர்தான் இந்தக் கடிகாரத்தைக் கண்டுபிடித்தார். ஒவ்வொரு மணி ஆகும்போது, இந்தக் கடிகாரத்தில் உள்ள பெண்டுலம் ஆடி மணியை அறிவிக்கும். சப்தமும் கொடுக்கும். இது பெரும்பாலும் மரத்தால் செய்யப்பட்டதாக இருக்கும். கடிகாரப் பகுதி தாமிர நிறத்தில் இருக்கும். இந்த வகைக் கடிகாரம் வீட்டுக்குக் கம்பீரத் தோற்றத்தைத் தரும்.

குக்கூ கடிகாரம்

இந்த வகைக் கடிகாரம் 17-ம் நூற்றாண்டிலிருந்தே பயன்பாட்டில் இருந்துவருகிறது. இது ஜெர்மனியில் கண்டுபிடிக்கப்பட்டது. 1629-ம் ஆண்டில் ஜெர்மனி வணிகரான பிலிப் ஹைன்ஹோபர் தன் நாட்குறிப்பில் இந்தக் கடிகாரம் குறித்துப் பதிவு செய்துள்ளார். யாரால் கண்டுபிடிக்கப்பட்டது என்ற சரியான தகவல் இல்லை. இந்த வகைக் கடிகாரம் பெண்டுலத்துக்குப் பதிலாகக் குயில் திறந்து கூவுவது போன்ற வடிவ அமைப்பைக் கொண்டது. இது வரவேற்பறையில் மாட்டுவதற்கு உகந்தது.

ரயில் நிலையக் கடிகாரம்

டிஜிட்டல் கடிகாரங்கள் வருவதற்கு முன்பு ரயில் நிலையங்களில் இந்தக் கடிகாரங்கள்தாம் ரயில் பயணிகளுக்கு மணி பார்க்க உதவின. இரு பக்கமும் மணி பார்க்க வசதி கொண்டவை, இந்த வகைக் கடிகாரங்கள். இந்த வகைக் கடிகாரம் ஒரு செவ்வியல் தன்மையைக் கொடுக்க வல்லது. இந்தக் கடிகாரத்தை இப்போது வீட்டில் வாங்கி மாட்டுவது ஒரு புதுப் பாணியாகப் பரவிவருகிறது.

தாத்தா கடிகாரம்

‘பிரண்ட்ஸ்’ படத்தில் விஜய், சூர்யா உள்ளிட்ட பலரும் தூக்கித் தவறவிட்டுவிடுவார்களே அந்தக் கடிகாரம் இது. ஆங்கிலத்தில் இதை Grandfather clock என அழைக்கிறார்கள். பெயருக்கு ஏற்றாற்போல் மிகப் பழமையான கடிகாரம். இதைச் சுவரில் பொருத்த முடியாது. ஆள் உயரம் இருக்கும் இந்தக் கடிகாரம் வீட்டுக்கு கவுரமான தோற்றத்தைத் தரும். இந்தக் கடிகாரத்தை இங்கிலாந்தைச் சேர்ந்த ராபர்ட் ஹூக் என்பவர் வடிவமைத்தார்.

அலமாரிக் கடிகாரம்

இந்த வகைக் கடிகாரம் 1750-ம் ஆண்டு பிரான்சில் உருவாக்கப்பட்டது. இங்கிலாந்திலும் ஜெர்மனியிலும் இந்த வகை மிகப் பிரபலமானதாக இருந்தது. அலமாரிகள், படுக்கையறைகளுக்கு இந்த வகைக் கடிகாரங்கள் ஏற்றவை.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE