சுபா. எஸ்
இன்றைக்கு நம் வருமானத்தின் கணிசமான பகுதியை மின்சாரக் கட்டணமாகவே செலுத்த வேண்டிய சூழல் உள்ளது. மின்சாரப் பயன்பாட்டை நம்மால் முடிந்த அளவு கட்டுப்படுத்துவது நமக்கு மட்டுமல்ல; சுற்றுச்சூழலுக்கும் அவசியமான ஒன்று. மின்சார பயன்பாட்டைக் கட்டுப்படுத்த உதவும் கருவியே எனர்ஜி மானிட்டர். இது மின்சார பயன்பாட்டையும் மின் கட்டணத்தையும் கணிசமாகக் குறைக்க உதவும்.
மின்வாரியம் நம் வீடுகளில் நிறுவும் ஸ்மார்ட் மீட்டரைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்போம். நாம் உபயோகிக்கும் மின்சாரத்தின் அளவைக் கணக்கிட்டு அந்தத் தகவலை உடனுக்குடன் மின்வாரியத்துக்கு வழங்கும் கருவி அது. அதேபோன்று நாம் பயன்படுத்தும் மின்சாரத்தின் அளவைக் கணக்கிட்டு அந்தத் தகவலை வழங்கும் கருவி எனர்ஜி மானிட்டர்.
மின்சாரத்தை எவ்வாறு பயன் படுத்துகிறோம் என்று தெரிந்தால்தான் நம்மால் அதன் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த முடியும். நாம் எவ்வளவு மின்சாரத்தை எந்தெந்தக் கருவிகளுக்குப் பயன்படுத்துகிறோம் என்பதை எனர்ஜி மீட்டரின் உதவியால் கண்டுகொள்ளலாம். இந்த ஸ்மார்ட் கருவி மின் பயன்பாட்டை நமக்கு உடனுக்குடன் தெரிவிக்கும் திறன் கொண்டது. இதை ஸ்மார்ட் ஹப் உடன் இணைக்கும்போது, வீட்டில் உள்ள ஒவ்வொரு சாதனமும் எவ்வளவு மின்சாரத்தை எடுத்துக்கொள்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.
எவ்வளவு அலகு மின்சாரம் செலவாகிறது, அதற்குரிய கட்டணம் எவ்வளவு என்பது போன்ற தகவல்களை நாம் எளிதில் அறிந்துகொள்ள முடியும். உதாரணத்துக்கு வீட்டில் மின்விசிறியைப் பயன்படுத்துகிறோம் என்று வைத்துக்கொள்வோம். அந்த மின் விசிறி ஒரு மணி நேரம் செயல்பட எவ்வளவு மின்சாரத்தை எடுத்துக்கொள்கிறது என்பதைத் தெரிவிக்கும் இந்தக் கருவி அதற்குரிய கட்டணம் எவ்வளவு என்பதை ரூபாய் மதிப்பில் சொல்லிவிடும். எனவே, இதன் உதவியால் மின்சாதனங்களின் பயன்பாடு குறித்த அறிவு நமக்குக் கிடைக்கும். மின்சாதனங்களுக்காகச் செலவாகும் தொகையையும் நாம் எளிதில் அறிந்துகொள்ளலாம்.
எனர்ஜி மானிட்டரில் கையடக்க மானிட்டர், சென்சார், தகவலை அனுப்பும் டிரான்ஸ்மிட்டர் ஆகிய 3 பாகங்கள் உள்ளன. சென்சாரை மின் வாரிய மீட்டருடன் இணைக்க வேண்டும். பின் அந்த சென்சாருடன் டிரான்ஸ்மிட்டரை இணைக்க வேண்டும். சென்சார் சேகரிக்கும் தகவல்களை இந்த டிரான்ஸ்மிட்டர் கையடக்க மானிட்டருக்கு அனுப்பும். நாம் அதை மானிட்டரில் பார்த்துக்கொள்ளலாம். சில நிறுவனங்கள் தயாரிக்கும் எனர்ஜி மானிட்டரில் ஒன்றுக்கு மேற்பட்ட சென்சார்கள் இருக்கும்.
நம் வீட்டில் உள்ள ஒவ்வொரு பிரேக்கர் ஸ்விட்சுடனும் சென்சார்கள் இணைக்கப் பட்டிருக்கும். இதன் மூலம் நாம் எந்தச் சாதனம் அதிகமான மின்சாரத்தைப் பயன்படுத்துகிறது என்பதைத் துல்லியமாகக் கண்டறியலாம். மேலும், சில நிறுவனங்களின் தயாரிப்புகள் மின்சாரத்தை மட்டுமன்றி எரிவாயு, தண்ணீர் போன்ற பயன்பாட்டையும் கண்காணிக்கும் திறனைக் கொண்டுள்ளது.
சில எனர்ஜி மானிட்டர்கள் தனக்கெனத் தனிச் செயலியைக் கொண்டிருக்கின்றன. இந்தச் செயலியைத் தரவிறக்கம் செய்து நம் கைப்பேசியில் நிறுவிக்கொள்ள வேண்டும். இதன்மூலம் எனர்ஜி மானிட்டர் தரும் தகவலை எப்போதும் எங்கிருந்து வேண்டுமானாலும் பார்க்கலாம். ஏதேனும் ஒரு சாதனம் அதிக அளவு மின்சாரத்தைப் பயன்படுத்துவது தெரிந்தால் அதன் இயக்கத்தை ஸ்மார்ட் ஹப் மூலம் நிறுத்தலாம்.
ஒரு நாளைக்கு எவ்வளவு மின்சாரம் பயன்படுத்த வேண்டும் என்று இலக்கை இந்தக் கருவி மூலம் நிர்ணயித்துக் கொள்ளலாம். மின் பயன்பாட்டின் அளவு அந்த இலக்கை நெருங்கும்போது இந்தக் கருவி எச்சரிக்கை ஒலி எழுப்பும். இதன் மூலம் நாம் உடனே சுதாரித்து அதிகப்படி மின்சாரத்தை எடுத்துக்கொள்ளும் சாதனத்தை நிறுத்திவிடலாம்.
சில எனர்ஜி மானிட்டர்கள் தகவல்களை அதில் இருக்கும் மானிட்டருக்கு மட்டும் அனுப்பும் திறனைக் கொண்டிருக்கும். வேறு சில தகவல்களைச் செயலிமூலம் இணைக்கப்பட்ட கைப்பேசிக்கு அனுப்பும் திறனைக் கொண்டிருக்கும். செயலி மூலம் இணைந்த ஒன்று அனுப்பும் தகவல்களை நாம் வீட்டுக்கு வெளியிலிருந்தும் பெற முடியும். மேலும், இதற்கெனப் பிரத்யேக மானிட்டரும் தேவையில்லை. ஏனென்றால், மானிட்டரின் வேலையை நம் கைபேசி பூர்த்தி செய்துவிடும். மேலும், செயலி கொண்ட எனர்ஜி மானிட்டர் மூலம் நாம் நீண்ட நாட்களுக்கான தகவல்களைச் சேகரித்துவைக்கவும் முடியும். இதனால் செயலி கொண்ட ஒன்றைத் தேர்வுசெய்வது மிகுந்த பயனுள்ளதாக இருக்கும்.
எனர்ஜி மானிட்டர்கள் 10,000 முதல் 25,000 ரூபாய் வரையிலான விலைகளில் கிடைக்கின்றன. தயாரிக்கும் நிறுவனங்களின் மதிப்பு, செயலியின் தரம், உடனுக்குடன் தகவல் அனுப்பும் தன்மை, பதிவுசெய்யும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் இதன் விலை மாறுபடுகிறது. கர்ப் எனர்ஜி மானிட்டரிங் சிஸ்டம், சென்ஸ் எனர்ஜி மானிட்டர், ஐடிரோ ஹோம் எலக்டிரிசிட்டி மானிட்டர், ஸ்மாப்பி ஹோம் எனர்ஜி மானிட்டர், நியுரியோ ஹோம் எனர்ஜி மானிட்டர், டெட் புரோ ஹோம் எலக்டிரிசிட்டி மானிட்டர், எகோயிசம், எங்கேஜ் போன்ற தயாரிப்புகள் சந்தையில் பிரசித்தி பெற்றவை.
எனர்ஜி மானிட்டரை நிறுவியவுடன் நம் மின் கட்டணம் குறைந்துவிடும் என்று எதிர்பார்க்கக் கூடாது. ஏனென்றால், அவை நாம் மின்சாரத்தை எப்படிப் பயன் படுத்துகிறோம் என்ற தகவலை மட்டும்தான் அளிக்கும். நாம்தான் அதன் அடிப்படையில் மின்சாரத்தை பயன்படுத்தும் தன்மையை மாற்றி அமைத்துக்கொள்ள வேண்டும். இந்த எனர்ஜி மானிட்டர்களின் மூலம் குறைந்தபட்சம் ஆண்டுக்கு 10,000 ரூபாய்வரை மிச்சப்படுத்தலாம் என்று ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கிறன. இதைவிட அதிகமாகவும் நம்மால் மிச்சப் படுத்த முடியும். அது நம் கையில்தான் உள்ளது.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago